போர்கப்பல் எம்டன்

அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது.
முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும்.
சகலமும் முடிந்தவுடன் பீரங்கிகள் எல்லாம் உள் இழுக்கபட்டு, ஏதோ நல்லெண்ண பயணமோ அல்லது நல்லெண்ணெய் வியாபார கப்பலாகவோ மாறிவிடும்.
போலந்தில்தான் கட்டபட்டது, ஜெர்மன் பாரம்பரிய‌ பட்டணமான எம்டன் எனும் பெயர் அதற்கு சூட்டபட்டது, கப்பல் நிபுணர்களை தவிர யாராலும் அது யுத்தகப்பல் என கண்டுபிடிப்பது கடினம், இந்த காலத்தில்தான் முதல் உலகப்போர் தொடங்கியது.
உண்மையில் அந்த கப்பல் ஆசியா வரவேண்டிய அவசியமில்லை, பிரிட்டன் படைகளை குழப்ப ஐரோப்பிய கடற்கரையில் சுற்றிருக்க வேண்டியது, ஆனால் ஒரு சுதந்திரபோராட்ட தமிழன் சென்பகராமனால் ஆசியாவிற்குள் வந்தது.
சென்பகராமன் யார் என்றால் இனி ராமராஜன் படத்து ரசிகரா? என கேட்கும் அளவிற்கு இந்திய வரலாறு மாற்றபடும். திப்புசுல்தானையே மறக்கடிக்க நினைப்பவர்களுக்கு சென்பகராமன் எம்மாத்திரம்?, இனி இந்திய வரலாறு என்றால் கோட்சே,சாவர்கர் அப்படியே இன்னும் பலர் வருவர். மற்றவர் எல்லாம் வேலைவெட்டி இல்லாமல் வெள்ளையரிடம் செத்தவர்கள்.
பெரும் பதிவாக எழுதவேண்டியவர் சென்பகராமன், இன்னொருவனுக்கு அந்த வரலாறு சாத்தியமே இல்லை. பின்னர் பார்க்கலாம். இப்பொழுது கப்பலில் ஏறுவோம்.
அப்படியாக அந்த கப்பல் ஆசிய கடலுக்குள் நுழைந்தது, அதுவரைக்கும் அதுவரை என்ன, பின்னாளில் ஜப்பான் தாக்கும் வரைக்கும் ஐரோப்பிய நவீன போர்க்கப்பல்களுக்கு ஆசியாவில் வேலை இல்லை, இன்னொரு வகையில் சொல்வதென்றால் இந்தியாவில் நடைபெற்ற ஒரே கப்பல்படை தாக்கம் அல்லது உலகப்போர் தாக்குதல் என்றால் அது இன்றுவரை செனையில் நடந்த எம்டன் தாக்குதல் மட்டுமே.
(இன்று மாறிவிட்ட காலங்கள், இன்னொரு உலகப்போர் வந்தால் பாகிஸ்தான்,சீனாவின் ஏவுகனைகள் நிச்சயம் சென்னையினை குறிவைக்கும், அவ்வளவு இல்லை என்றால் இலங்கையின் நாட்டுவெடிகுண்டாவது நிச்சய்ம் வீசபடும்.)
அது 1914 செப்டம்பர் 22, நவராத்திரி கொண்டாங்களில் சென்னை மூழ்கி இருந்தது, அப்பொழுது திடீரென சென்னை துறைமுகத்தில் நுழைந்து கோட்டையினை தாக்க தொடங்கியது எம்டன்.
ஆடிபோனது சென்னை, இலக்குகளை மிக துல்லியமாக தாக்கியது எம்டன். சென்னை உயர்நீதிமன்றம் வரை குண்டுகள் தாக்கின, துறைமுக பணியாளார் 10 பேர் செத்தனர். பதிலுக்கு பிரிட்டிஷ் படைகள் தாக்க தொடங்கும் முகமாக, விளக்குகள் அணைக்கபட்டு, சென்னை இருட்டில் மூழ்க தொடங்கியது.
விளக்கையா அணைக்கிறாய், இதோ பார் தீபம் என பர்மா ஆயில் கம்பெனி குடோனை குண்டு வீசி அழித்தது எம்டன், பெரும் தீ, சென்னைக்கே வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் இன்னும் சில குண்டுகளை வீசிவிட்டு மறைந்தது எம்டன்.
முதல் தாக்குதலை எதிர்கொண்ட சென்னை காலியானது, கிட்டதட்ட 25 ஆயிரம் பேர் காலிசெய்து ஊர் திரும்பினர், இன்றைய நீதிமன்ற, துறைமுக, சென்னை கோட்டை பகுதிகள் எல்லாம் வெடித்த ஷெல்கள் கிடந்தது.
முதல்முறையாக தனது ஆசியபகுதிக்குள் ஜெர்மன் தாக்கியதை கண்டு அலறிய பிரிட்டன் எம்டனை தீவிரமாக தேடியது, இன்றைய காலம் என்றால் செயற்கை கோளின் உதவியில் நொடியில் தீர்த்துவிடுவார்கள், அல்லது நீர்மூழ்கி மூலம் முடிவு கட்டுவார்கள்.
அக்காலம் அப்படியல்ல தேடவேண்டும் அதுவும் கடலில்.
எம்டனும் கலக்கியது, ஏதாவது ஒரு நாட்டின் துறைமுகத்தில் வேறுநாட்டு கொடிபறக்க, யுத்தத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல காட்டிகொண்டு பொருட்களை நிரப்பி கொண்டு பயணித்தது.
திடீரென மலேசியாவின் பினாங்கினை தாக்கியது, கிழக்காசிய பிரிட்டன் காலணிகளை தாக்கியது. அப்படியாக 31 பிரிட்டன் கப்பல்களை மூழ்கடித்தது. அவமானத்தில் சிவந்தது பிரிட்டன்.
காரணம் எங்கள் சாம்ராஜ்யத்தில் இந்துமாக்கடல் “பிரிட்டனின் ஏரி”, எம்மை மீறி யாரும் புகமுடியாது என்ற கர்வத்தில் அறிக்கையிட்ட பிரிட்டனுக்கு எம்டன் மகா அவமானத்தை கொடுத்தது.
இனி எம்டனை அழிக்காவிட்டால், ஆசியாவில் பிரிட்டன் வர்த்தகம் சாத்தியமில்லை எனும் அளவிற்கு அச்சுறுத்தியது எம்டன் கப்பல்.
வழக்கம் போல மாறுவேடம், அவ்வப்போது அந்நியன் அவதாரம் என சென்றுகொண்டிருந்த எம்டன் கப்பல், ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அருகே ஒரு கப்பலை மூழ்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது, வியாபார கப்பல்போல அச்சிறிய கப்பலின் அருகில் வந்த எம்டன், திடீரென விஸ்வரூபமெடுத்து அக்கப்பலை தாக்கியது, ஆஸ்திரேலியர்கள் கண்டுகொண்டனர், ஓ இவர்தான் எம்டன். இங்குதான் இருக்கின்றார்.
சொல்லபோனால் ஒரு வலை, காரணம் அந்த கப்பலை தூரத்தில் கண்காணித்து கொண்டிருந்தது ஆஸ்திரேலியாவின் சிட்னி போர்கப்பல்.
சிட்னி கப்பல் மகா நவீனமானது, எம்டனை அழிப்பதற்காகவே கடலில் விடபட்டது, இந்த வலையில் சிக்கியது எம்டன்.
கடும் யுத்தத்தில் கடல் யுத்த வியூகபடி, எம்டனின் அடிபாகத்தை சிட்னியால் உடைக்கமுடியவில்லை, திகைத்தார்கள். ஆனால் கப்பல் தொடர்ந்து இயங்கமுடியாதவாறு எம்டனின் பாய்லர்களை ஆஸ்திரேலியாவின் சிட்னி முந்திகொண்டு உடைத்தது, இன்னொன்று தனியாக சிக்கிகொண்ட எம்டனுக்கு உதவிக்கும் யாருமில்லை.
ஆஸ்திரேலிய படையினரோ குற்றால குறவஞ்சி கொண்டாட்டத்தில் இருந்தனர், அவ்வளவு பெரும் சாதனையாக அது கருதபட்டது.
முதல் உலகப்போரில் தனி முத்திரை பதித்து, இங்கிலாந்தே அக்கப்பல் “கிழக்கின் அன்னப்பறவை” என ஒப்புகொண்ட எம்டன், சுமார் 200 வீரர்களோடு அழிக்கபட்டது..
அதன்பின்னரே பிரிட்டன் நிம்மதி பெருமூச்சுவிட்டது.
சுருக்கமாக சொன்னால் இன்றைய நவீன போர்கப்பல்களுக்கு அதுதான் முன்னோடி, 1972 வங்கபோரில் இந்தியாவின் விக்ராந்த் கப்பல் பாகிஸ்தானில் எம்டன் என்றே அழைக்கபட்டு, அதனை அழிக்கவந்த பாகிஸ்தானின் நீர்மூழ்கி(அவர்கள் என்று உருப்படியாக செய்தார்கள்? எல்லாம் அமெரிக்க அன்பளிப்பு) விசாகபட்டினம் அருகே மூழ்கடிக்கபட்டதும் பின்னாளைய வரலாறுகள்..
எப்படியோ இன்றுவரை சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே, அந்த பெருமை எம்டனுக்கு மட்டுமே இருந்துவிட்டு போகட்டும் என்பதுதான் சென்னை விரும்பிகளின் பிரார்த்தனை.
குஷ்பூ வேறு சென்னையில் இருப்பதால் சற்று கூடுதலாகவே பிரார்திக்க வேண்டியிருக்கின்றது.
Image may contain: sky, ocean, outdoor and water
Image may contain: text