முழுவதும் பொய் என்றால் எப்படி?

70 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்யாததை நாங்கள் செய்துவிட்டோம் என மார்தட்டுகின்றார் மோடி, அரசியலில் பொய் அவசியம் ஆனால் முழுவதும் பொய் என்றால் எப்படி?

அதே கேள்வியினை திரும்ப கேட்கலாம்

மிஸ்டர் மோடி

காங்கிரஸ் இந்நாட்டுக்காக செய்த காரியங்கள் ஏராளம், நினைவில் இருப்பதை சொல்கின்றோம், மறந்துவிட்டதை மக்கள் சொல்வார்கள்

சுதந்திர இந்தியா ஏழையாக பிறந்தது, இங்கு சுரண்டி போட்ட பாண்டமாக மலர்ந்தது, அதில் பிரிவினை வேறு

அந்த பிரிவினை கொடுத்த ரத்த ஆறும், பலியும் வலியும் வரலாறு மறக்காதவை

இந்தியா 2 மாதத்தில் உடையும் என்றார்கள், காங்கிரஸ் இத்தேசத்தை காத்தது

காந்தி கொல்லபட்டார், கொன்றது யாரென உங்களுக்கே தெரியும், காந்தி கொல்லபட்டபின் தேசம் அதோகதி என்றார்கள், காங்கிரஸ் காத்தது

ஐந்தாண்டு திட்டம் முதல் பக்ரா நங்கல் முதல் மணிமுத்தாறு வரை அணைகட்டி உணவு பெருக்கினோம்

பசி தீர்த்தோம், வெண் புரட்சியில் பால் பெருக்கினோம், கடல் வளம் காத்தோம், இந்தியா பசியில் இருந்து விடுதலை பெற்றது, ஆம் காங்கிரசே செய்தது

விவசாயத்திற்கு அது கொடுத்த முன்னுரிமைதான், இன்று தேசம் விவசாயத்தில் தன்னிறைவு பெற்றது, பட்டினிசாவு என ஏன் இல்லை என்றால் அதுதான்

தொழில்வளர்ச்சிக்கு இத்தேசம் திறந்துவிடபட்டது பெரும் ஆலைகள் எல்லாம் வந்தன‌

கிராமம் தோறும் பள்ளி திறந்தது காங்கிரஸ், கிராம் தோறும் மாட்டு தொழுவம் திறக்கும் உங்களுக்கு அது தெரிந்திருக்க நியாமில்லை

கிராமம் தோறும் மின்சாரம் கொடுக்க கனவு கண்டது காஙகிரஸ்

இதனிடையே பாகிஸ்தான் போர், அதையும் சந்தித்தது

இதோ உலகெல்லாம் ஓடினீர்களே, என்ன சொன்னார்கள்? வெட்கபடாமல் சொல்லுங்கள், நீங்கள் சொல்லமாட்டீர்கள், நாங்கள் சொல்கின்றோம்

ஆம் நேருவுக்கு பின் சமாதானம் விரும்பும் பிரதமர் மோடி என உலகம் சொன்னதா? இல்லையா? அந்த நேரு சமாதானம் விரும்பினார்

உலகம் மூன்றாம் உலகப்போரின் முனையில் இருந்தபொழுது ஆசிய நாடுகளுக்காக பஞ்ச சீல கொள்கை தந்தார்

சீனா நமக்கு நம்பிக்கையான நாடு என நினைத்தார், ஆனால் முதுகில் குத்தினான் மாவோ

அந்த நம்பிக்கை துரோகமே காங்கிரஸ் இந்தியாவினை ராணுவத்தில் முன்னேற்றிய விஷயம்

ஆம் பெருகமனார் நேருவுக்கு பின் சாஸ்திரியின் காங்கிரஸ் இத்தேசத்தை காத்தது , காஷ்மீருக்காக உயிர்விட்டான் அத்தலைவன், ஆம் வெற்றிமேல் வெற்றிபெற்ற எளிய தலைவன், காஷ்மீருக்காக ரஷ்யாவில் மரித்தான்

அதன் பின் இந்திரா வந்தார். அவர் ஒன்றும் உங்கள் அளவு சர்வாதிகாரி அல்ல, எங்கு புயல் அடித்தாலும் ஓடிவருவார்

அந்த இந்திராவும் கலாமும் சதீஷ்தவானுமே விண்வெளிக்கு இந்தியாவினை கொண்டு சென்றார்கள், சைக்கிளில்தான் கட்டி சுமந்தோம் ராக்கெட் பாகங்களை, ஆம் கைகொடுக்க யாருமில்லை

இந்திராவின் காங்கிரஸ் இத்தேசத்தின் விஞ்ஞானத்தை வளர்த்தது ராக்கெட், செயற்கைகோள் வெற்றிகளை அதுதான் கொடுத்தது, ராணுவத்தை வலுபடுத்தியது

அதில்தான் 1971ல் பெரும் இடைஞ்சலான பாகிஸ்தானை உடைத்தோம், இத்தேசத்தை காத்தோம் , ஒரு பாகிஸ்தானே இம்சை, இரண்டு பாகிஸ்தான் எனில் என் செய்ய?

தேசத்திற்காக மாபெரும் சவால் எடுத்து பாகிஸ்தானை உடைத்ததும், வெற்றி நிலைக்க அணுகுண்டு கொடுத்ததும் காங்கிரஸ் ஆட்சியே

சிக்கிம் சீனாவிடம் செல்லாமல் காங்கிரஸே காத்தது, இலங்கையில் அமெரிக்கா காலூன்றாமல் அதுவே விரட்டியது

காலிஸ்தான் பயங்கரவாதிகளை அழித்ததும் காங்கிரஸ், அதற்காக அருமை தலைவியினை இழந்ததும் காங்கிரஸ்

மிஸ்டர் மோடி ஒன்று தெரியுமா? இந்திரா நினைத்தால் அவர் உயிரை காத்திருக்கலாம், சீக்கிய காவலாளியினை மாற்றி இருக்கலாம்

ஆனால் என்னை கொன்றால்தான் சீக்கிய சமூகம் இந்தியாவினை விரும்பும் என்றால் கொல்லட்டும் என கையளித்தவர் அந்த தாய்

மறுக்க முடியுமா அத்தியாகத்தை

அடுத்து வந்தார் ராஜிவ் காந்தி, இத்தேசம் கணிணிமயமாக அன்றே கனவு கண்டார், புலிகள் எனும் பாசிச சக்தி மூலம் தென்னிந்தியாவின் நிம்மதியினை வெளிநாடுகள் கெடுக்க போட்ட திட்டமெல்லாம் அவரே முறியடித்தார்

ஆம் காலிஸ்தானை முறியடித்து வட இந்தியாவினை காத்து உயிர்விட்டார் இந்திரா, தென்னகத்தை காத்து தமிழகத்தில் உயிர்விட்டார் ராஜிவ்

அடுத்து வந்தார் மன்மோகன் சிங், 1990க்கு பின்னரான உலக அரசியலில் இந்தியா ஒரு நொடி பின்வாங்கா அளவு ஓட வைத்தார்,

இந்த 20 ஆண்டுகளில் இந்தியா புதுகோலம் பூண்டு நிற்பது அவரால்தான்

காங்கிரஸ் என்ன செய்தது என கேட்பதை விட, என்ன செய்யவில்லை என நாங்கள் கேட்டால் இப்படித்தான் குனிந்து நிற்பீர்கள்

விவசாயம், கல்வி , ராணுவம், தேசபாதுகாப்பு, தொழில்துறை அதற்கும் மேல் மதவெறி இல்லா இந்தியா என காங்கிஅஸ் செய்திருப்பது ஏராளம்

காங்கிரஸ் ஆட்சியில்தான் உலகின் மிகபெரிய ராணுவமாக 4ம் இடத்திலும், முதல் 10 பொருளாதார கேந்திரம் என்றும், விண்வெளி ஆராய்ச்சியில் 3ம் இடமென்றும் இந்தியா வந்தது

தொழில் துவங்க ஏற்ற முதல் 10 நாடுகளில் இந்தியாவும் வந்தது

உங்களுக்கு தெரியாதல்ல, விராட் கோலிக்கெல்லாம் சவால் விடுகின்றீர்கள்

ஆம் கிரிக்கெட்டில் 98 ரன் யாரோ எடுத்துவைக்க, அடுத்து வந்து 2 ரன் அடித்துவிட்டு இதோ 100 ரன்கள், எனக்கு முன்பு ஆடியவர்கள் என்ன கிழித்தார்கள் என்றால் என்ன சொல்வார்கள்??

நீங்கள் அதைத்தான் சொல்கின்றீர்கள், தேசம் அப்படித்தான் நகைத்து கொண்டிருக்கின்றது

நீங்கள் இத்தேசத்தின் நிரந்தர பிரதமர் அல்ல, மாறாக 5 வருடத்திற்கு தேச நிர்வாகம் மக்களால் தரபட்டது. அதன் மதிப்பீடுகள் இன்னும் 3 மாதத்தில் தெரியும்

அதற்குள் காங்கிரஸ் என்ன 70 வருடமாக கிழித்தது என கேட்டால் உங்கள் மனசாட்சியே உங்களுக்கு சொல்லும் ஆம், உங்களை விட அதிகம் கிழித்தது

மிஸ்டர் மோடி உங்களை நாம் நேசிக்கின்றோம், இத்தேசத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நீங்கள் ஓடிகொண்டே இருப்பது எங்களுக்கும் புரிகின்றது

பல இடங்களில் உங்களை வாழ்த்துகின்றோம், நீங்கள் இன்னும் ராமர்கோவில் கட்டாமல் இருப்பதற்கே ஸ்பெஷல் வாழ்த்து

அதற்காக காங்கிரஸ் 70 ஆண்டுகளாக என்ன கிழித்தது? என கேட்டால் பதில் சொல்லாமல் இருக்க முடியாது

நீங்கள் இன்னும் ஒரு முத்திரையும் பதிக்காமல் , அவர்களின் சாதனையில் எதுவுமே செய்யாமல் குற்றம் சாட்டினால் தேசம் விடாது

காங்கிரஸ் இந்நாட்டிற்காக பெரிதும் உழைத்திருக்கின்றது , தியாகம் செய்திருக்கின்றது, பெரும் அடித்தளமிட்டிருக்கின்றது

நீங்களும் அதன் வழியில் உழைக்க வேண்டுமே தவிர அவர்கள் என்ன கிழித்தார்கள் என கேட்பது நாட்டுபற்று ஆகாது

பொருளாதாரம் காத்தீர்களா, புகழ்பெற்ற யுத்தம் நடத்தினீர்களா, தொழில் வளர்த்தீர்களா என்றால் ஒன்றுமில்லை

டாலருக்கு எதிராக குப்பையாய் கிடக்கின்றது ரூபாய், இந்திய பொருளாதாரம் அதல பாதாளத்தில் தொங்குகின்றது

இந்தியா திவாலாகலாம் என உலகம் எச்சரிக்கின்றது, இதுவரை எந்த பிரதமர் இந்நிலைக்கு கொண்டுவந்தார்?

காங்கிரஸ் என்ன செய்தது என நீங்கள் கேட்டதற்கு தேசம் பதிலளிக்க தொடங்கினால் இப்படித்தான் தலைகுனிந்து நிற்பீர்கள்

அதிலும் உங்கள் முத்திரை என்ன என கேட்டால் தலை இன்னும் குனிய வேண்டி இருக்கும்.

இந்து வெறியர்கள் , இந்திய மக்கள் என பலதரப்பு மக்களை ஏமாற்றிவர்கள் நீங்கள், ஒரு விஷயமும் உங்களிடம் முத்திரையாக வரவே இல்லை, எதுவுமே வெற்றி இல்லை

அட மோடிஜி தமிழகத்தில் கட்சி வளர்ப்பார் என எண்ணிய தமிழக பாஜகவினரே உங்களால் அழுது கொண்டிருகின்றார்கள்

அதனால் என்ன செய்யலாம்?

சாதனை செய்துவிட்டு பேசினால் அது சிங்கத்து முழக்கம், சும்மா ஒன்றுமே செய்யாமல் பேசினால் அது தவளை சத்தம்

அதனால் அமைதியாக இருங்கள், இன்னும் 2 மாதமே பாக்கி இருக்கின்றது

இப்படி குனிந்த தலை நிமிராமல் காங்கிரஸின் சாதனைகளை கொஞ்சம் பின்னோக்கி பாருங்கள்

நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் பாகிஸ்தானில் புகுந்து குண்டு வீச அமெரிக்க இஸ்ரேல் ஒத்துழைப்பு உண்டா இல்லையா? அவர்கள் அனுமதிக்காமல் உங்களால் செய்ய முடியுமா?

பின் ஏன் உங்கள் சாதனை என கத்துகின்றீர்கள்?

எவ்வளவு பொய்கள் மோடி

ஏவுகனை ஏற்றுமதியினை நீங்களா தொடங்கினீர்கள்? இந்திய எதிரி நாடுகளுக்கு செக் வைக்க அன்றே காங்கிரஸ் போட்ட திட்டமல்லவா அது

அப்படித்தானே சீனாவிற்கு எதிராக வியட்நாமில் நம்மால் நிறுத்தமுடிகின்றது

இதை வகுத்தது காங்கிரஸ் அரசின் ரஷ்ய இந்திய வியூகமா இல்லை உங்கள் வியூகமா? நெஞ்சை தொட்டு சொல்லுங்கள்

ஒருமுறை நன்றாக படித்துவிட்டால், அது புரிந்துவிட்டால் அதன் பின் இக்கட்சியிலும் இருக்கமாட்டீர்கள், அரசியலிலும் இருக்க மாட்டீர்கள்

தேசம் நன்றாய் இருக்கும்..

இனியாவது பொய் சொல்வதை விட்டுவிட்டு திருந்தி எதிர்கட்சியாய் வாருங்கள்

அப்படியாவது இந்நாட்டிற்கு நல்லது செய்ய விளையுங்கள்