மொகரம்

உலகெல்லாம் வாழும் கலாச்சார பிண்ணனி கொண்ட இனங்களுக்கு எல்லாம் நாள்காட்டிகள் உண்டு, அதில் தமிழகம் தமிழ்வருடம் பிறப்பது சித்திரையா அல்லது தையா என தைதை என குதிப்பதும் உண்டு.

இஸ்லாமிய காலண்டர் படி மொகரம் ஆண்டின் முதல் மாதம் , அந்த 1ம் தேதியே இஸ்லாமிய பெருமக்கள் பின்பற்றும் நாள்காட்டியின் வருடபிறப்பு.

அதாவது நபிபெருமகனாரின் போதனைகளுக்கு பின்னராக கால கட்டத்தில் இஸ்லாமிய மக்களுக்கான நாள்காட்டி வகுக்கபட்டது, அதன் படி ஹிஜ்ரி வருடகணக்கினை அவர்கள் பின்பற்றி வருகின்றார்கள்.

எப்படி போப் கிரகோரி அறிவித்த காலண்டர் (ஜனவரி ‍டிசம்பர்) ஐரோப்பாவில் நடைமுறைபடுத்தபட்டதோ( பின் உலகம் முழுக்க பரவிவிட்டது) , அவ்வாறே இது அக்கால இஸ்லாமிய தலமையால் அவர்களுக்கென கொடுக்கபட்டது.

வருடத்தின் முதல்மாதம் மட்டுமல்ல, அது இஸ்லாமியருக்கு மாதங்களுள் ரமலானை போல மிக சிறந்த மாதம். அதன் சிறப்புக்கள் மகா உயர்வானவை.

அதாவது யூத மத பூர்வீகமும், இஸ்லாமிய வேர்களும் ஒரே மாதிரியானவை. முதல் மனிதன் ஆதாம் படைக்கபட்டது , அவரில் இருந்து ஏவாள் படைக்கபட்டது . பின் ஊழிவெள்ளத்தில் நூஹ் (நோவா) அவர்கள் அந்த கப்பலிருந்து வெள்ளம் வடிந்தபின் பூமியில் இறங்கியது எல்லாம் இம்மாதத்தில் என்பது அவர்கள் நம்பிக்கை

எகிபதிலிருந்து மூசா (பைபிளின் மோசஸ்) அடிமை மக்களை மீட்டது, அதனை தடுத்த பார்வோன் மன்னன் படைகளோடு செங்கடலில் மூழ்கியது, இப்ராஹிம் அவர்களுக்கு சில அதிசயங்கள் நடந்தது, மாமனன்ன தாவூத் (தாவீது அல்லது டேவிட்) பாவத்தை கடவுள் மன்னித்தது, மாமன்னன் சுலைமான் (சாலமோன்) இடையில் தவறவிட்ட ஆட்சியை கடவுள் மறுபடியும் கொடுத்தது என பட்டியல் நீண்டது.

உச்சமாக ஈசா நபி (இயேசு கிறிஸ்து) பரலோகம் சென்றதும் இம்மாதம் என்பதும் இம்மாதத்தின் மகா சிறப்புகள். கவனியுங்கள் எகிப்திலிருந்து அடிமை மக்களை மீட்ட யூத பண்டிகை பாஸ்கா, அன்றுதான் கிறிஸ்து சிலுவையில் அறையபட்டார் என்பது பைபிளின் அடிப்படை ஆதாரம்.

ஆனால் யூத மதம் சொல்லும் மாதம் வேறு, எனவே புனிதவெள்ளி மார்ச் மாதம் வரும்.

இப்படி பெரும் ஆச்சரியங்களை இறைவன் நிகழ்த்திய மொகரம் மாதம் நிச்சயம் மகா புனிதமானது, அதன்படி வருடபிறப்போடு இம்மாதத்தின் புனிதத்துவதை இஸ்லாமிய பெருமக்கள் நினைவுகூர்வார்கள், குறிப்பாக 9 மற்றும் 10ம் நாள் மகா சிறப்பு வாய்ந்தவை. எகிப்தில் கடவுள் செய்த கருணைக்காக நோன்பு இருப்பார்கள், மூசா நபி காலத்தில் தொடங்கபட்ட நோன்பு அது.

இப்படியான மொகரம் இஸ்லாமியரின் ஒரு பிரிவிற்கு, அதாவது ஷியா பிரிவினருக்கு மகாதுயரம் ஆகியும் போனது.

நபிகள் நாயகம் போதிக்க தொடங்கிய காலத்தில் அவருக்கு எதிர்ப்புகள் அதிகம், ஆனால் போகபோக அவரின் போதனையினை ஏற்று இனிய மார்க்க பூமியாக அரேபியா மாறிற்று, ஆனால் பின்னரான காலதில் சில சர்சைகள் தோன்றின.

சர்சைகள் உலகின் எல்லா மதத்திலும் உண்டு, ஒரே இந்துமதம்தான் ஆனால் சைவ வைணவ மோதலில் ஓடிய ரத்த ஆறு மிக பெரிது, ஒரே புத்தமதம்தான் ஆனால் ஹீனயானம் மகாயாணம் பிரிவுகளின் மோதல்கள் அதிகம். சமண மதத்தில் திகேம்பரர், சுவேதம்பர மோதல் பிரசித்தி பெற்றது,

யூதரில் கூட இன்றும் உட்கட்சி பூசல்கள் அதிகம் (ஆனால் வெளிகாட்டமாட்டார்கள்), இயேசு காலத்தில் அவரே கண்டித்த யூத பிரிவினைகள் உண்டு.

கிறிஸ்தவம் கத்தோலிக்கம் மற்றும் பிரிவினை சபைகளுக்கான‌ மோதல், அதிலும் பிரிவினை சபைகளுக்குள் சிரிய யுத்தம்போல மகா குழப்பம், யார் யாருடன் மோதுகின்றர்கள் என தெரியாது ஆனால் கிறிஸ்தவர்கள்.

அப்படி சன்னி மற்றும் ஷியா என இஸ்லாமிலும் சர்ச்சைகள் வந்தன, வலுத்தன. முகமது நபிபெருமான் பேரன் ஹூசைன் அவர்கள் சில காரியங்களுக்காக ஒரு ஊருக்கு செல்லும்பொழுது வழியில் கர்பாலா எனும் பட்டிணத்தில் போரை சந்தித்தார்.

கரோ என்றால் அம்மொழியில் செங்கல் சூளை என பொருள். பாபில் எனும் பெரும் ஊரின்(இன்றைய பழைய பாக்தாத்) அருகில் இருந்ததால் கரோ+பாபில் என அழைக்கபட்டு பின் கர்பாலா ஆகிற்று,

பைபிளை கையிலும், கண்களை வானத்திலும் வைத்துகொண்டிருக்கும் கிறிஸ்தவர்களுக்கு தெரியும், ஆதியில் மனிதர்கள் செங்கற்களால் கோபுரம் கட்டி வானகம் ஏற முயன்ற இடம் ஒன்று உண்டு. அக்கால கடவுள் கொஞ்சம் பொல்லாதவர், மனிதன் அறிவுபழம் தின்றால் பொறுக்காது, கோபுரம் கட்டி தன்னிடம் வரமுயன்றாலும் பொறுக்காது, அவர் அப்படித்தான்.

உடனே மொழிகளை உருவாக்கி மனிதனை அந்த இடத்தில் குழப்பினார், மனிதர் ஒருவர் பேசுவது ஒருவருக்கு புரியாமல் விழித்தனர், அதாவது தமிழக அரசியல்வாதிகள் போல் பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த கோபுர திட்டம் தோல்விஅடைந்து, மனிதர் கூட்டம் கூட்டமாக சிதறினர் என்கிறது பைபிள், அந்த இடம் இதுவாக இருக்கலாம் என்பது சில ஆராய்சியாளர்கள் கருத்து.

அந்த கர்பாலா நகரில் நடந்த யுத்தத்தில் நபிபெருமானின் பேரன் அவர்கள் கொடூரமாக கொல்லபட்டார், அப்பெருமகானாரின் சமாதி இன்றும் அங்கு உண்டு, ஷியா இஸ்லாமியரின் மிகபுனிதமான இடம் அது. சுருக்கமாக சொன்னால் ஷியாவினருக்கு மெக்காவிற்கு அடுத்த புனித இடம் கர்பாலா.

எத்தனை சன்னி அரசுகள் ஈராக்கினை ஆண்டாலும்,கர்பாலா நகருக்கு கொடுக்கபடும் முக்கியத்துவம் மிகபெரிது, இன்றும் அப்படியே. உலகெல்லாம் இருந்து ஷியா இஸ்லாமியர் ஓடிவரும் தலம் அது.

அந்த பெருமகனார் இறந்த மொகரம் 10ம் நாள், உலகெங்கும் ஷியாக்கள் தங்களை காயபடுத்தி ஊர்வலம் செல்வார்கள், தமிழகத்தின் சில இடங்களில் கூட அது உண்டு. இது இஸ்லாமியரின் ஷியா தவிர வேறுயாரும் செய்வதில்லை.

ஆனாலும் ஒரு வினோதம் என்னவென்றால், கிறிஸ்தவம் என்பது யூதர் அறவே விரும்பாத‌ மத தொடர்ச்சி, கிறிதவர்கள் பழைய ஏற்பாடினை படிப்பார்கள், அந்த வசனங்கள கார்,பைக்,வீட்டு சுவர் முதல் கண்ணில் படும் மண்கட்டை சுவர் வரை எழுதிவைப்பார்கள்.

ஆனால் ஆபிரகாமை கடவுள் அழைத்த நாள், கடவுள் கொடுத்த மற்ற சட்டங்கள், மற்ற உணவு கட்டளைகள், சமூக கட்டளைகள் (10 கட்டளை தவிர) மோசே செங்கடலை கடந்தநாள், அந்த மகா முக்கியமான‌ பாஸ்கா பண்டிகை, முதல் சாலமோன் ஆலய நாள், என ஒன்றையும் நினைத்து பார்க்கமாட்டார்கள், நிச்சயம் அந்த பாஸ்கா மகா முக்கியமானது, இப்படி எல்லாவற்றையும் விட்டுவிடுவார்கள்.

ஆனால் பழைய ஏற்பாடு படி போதகருக்கு அல்லது சபைக்கு பத்தில் ஒரு பாகம் காணிக்கை என்பதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

பாஸ்கா என்றால் இயேசு நினைவுக்கு வருவார், அழுவார்கள். அதாவது பெரும் பழைய ஏற்பாடு வரலாற்று நிகழ்வுகளை இயேசுவின் மரணம் என்ற ஒற்றை துயரம் அந்நாளில் மூழ்கடித்துவிடுகின்றது.

அப்படியே ஷியா பிரிவினருக்கு இஸ்லாம் முறைப்படி மொகரம் மாதம் பெரும் சிறப்பு மிக்கது என்றாலும், மொகரம் 10ம் நாள் அவர்கள் மிகவும் நேசித்த ஹூசன் அவர்களின் மரணத்தின் துயரமே மிஞ்சி நிற்கின்றது.

ஆனால் வருடபிறப்பு எல்லா இஸ்லாமியருக்கும் பொதுவானது.

சகல இஸ்லாமிய நண்பர்களுக்கும் இனிய வருடபிறப்பு நல்வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

வல்ல இறைவன் எல்லோருக்கும் அமைதியும்,வளமும்,ஆரோக்கியமும் அருளட்டும். உலகம் அமைதியில் செழிக்கட்டும்.

Image may contain: night and sky