தூய தமிழ் பிரியர்களின் இம்சை தாங்க முடியவில்லை..

சில தமிழ்பிரியர்கள் இம்சை தாங்கமுடியவில்லை, புழக்கத்தில் இருக்கும் ஆங்கில பெயர்களுக்கு தமிழ் பெயர்கள் மாற்றுவதில் கடுமையாக உழைக்கின்றார்கள், 24 மணி நேரமும் சிந்திக்கின்றார்கள்

உலகில் தன் மொழி சொற்களை 100% கொண்ட மொழி என எதுவுமில்லை. எல்லா மொழியிலும் எல்லா மொழி சொற்களும் கலந்தே இருக்கின்றன‌

இல்லாவிட்டால் அரசியலில் நேர்மையானவர்கள் அனாதை ஆவது போல பல மொழிகள் ஓரங்கட்டபடும்

ஆங்கிலத்தின் ஸ்பெஷலே எல்லா மொழி வார்த்தைகளையும் கிரகித்து தன்மொழியாக்கி கொண்டதுதான்

அது இருக்கட்டும்..

சில தமிழர்கள் இப்பொழுது செல்பி எனப்படும் சொல்லுக்கு தமிழாக்கம் செய்துகொண்டிருக்கின்றார்கள்

முதலில் “சுய படம்” என்றார்கள், பின் யோசித்தார்கள். அவனவன் எடுக்கும் படம் அவனுக்கு சுயம் தானே, அவன் எடுக்கும் படத்தில் அவன் தானே இருப்பான் என குழம்பினார்கள்

பின் “சுயமி” என அழைத்தார்கள்.

அது ஏதோ விஷமி போல இருப்பதாக பின் குழம்பினார்கள்

மறுபடி அறிஞர் கூட்டம் கூடி ஆராய்ந்து “தன் படம்” என செல்பி அழைக்கபடும் என முடிவினை சொல்லிவிட்டது

ஒருவன் தான் எடுக்கும் படத்தில் அவந்தானே இருப்பான், அப்படியானால் “அவன் படம்” என சொல்லலாம் என புறக்கணித்தது ஒரு குழு

முடியாது சொந்தமாக அவனே எடுப்பதால் “சொந்த படம்” என சொல்லலாம் என ஆலோசனை கொடுத்தது

அது ஏற்றுகொள்ளபடவில்லை, அப்படியானால் கமலஹாசன், தனுஷ் போன்றவர்கள் எடுப்பது குழப்பும் அல்லவா? என சொல்லி தலையினை சொறிந்தார்கள்

“போன் படம்” என சொல்லிபார்த்து விட்டும் தலையாட்டிவிட்டார்கள், “கேமரா படம்” என சொல்வோமா? என ஆலோசித்துவிட்டு , கேமராவில்தானே படம் எடுக்கின்றார்கள்? வரையவா செய்கின்றார்கள் என குழம்பிவிட்டார்கள்

இறுதியில் தன் படம் என்பதே கொஞ்சநாளைக்கு இருக்கட்டும் என விட்டுவிட்டார்கள், ஆராய்ச்சி தொடர்கின்றதாம்

நம்முடைய கருத்து என்னவென்றால் , இந்த இணைய உலகில் செல்பி சொந்தரவு தாங்க முடியவில்லை, பிணத்தோடு எல்லாம் செல்பி எடுக்கும் அளவு நிலை மோசமாகிவிட்டது

அதனால் “தன் படம்” என்பதை கூட “தம்பட்டம்” என மாற்றி கொள்ளலாம்

“சுய தம்பட்டம்” இன்னும் நல்ல பெயராக இருக்கும்..

தமிழனுக்கு வாசிக்க தெரிந்துவிட்டதே!!!

Image may contain: one or more people and text

வார்த்தை பிழையோ, உச்சரிப்பு பிழையோ வந்துவிட கூடாது என பார்த்து பார்த்து வளர்க்கபட்ட கட்சியில் இன்று போஸ்டர் அடிப்பதை கூட அசால்டாக பிழையாக அடிக்கின்றார்கள்

அச்சடிக்க சொன்னவன், அச்சடித்தவன், ஒட்டியவன் என மூன்று ரகமுமா வாசிக்க தெரியாதவனாக இருக்க முடியும்?

என்ன செய்ய?, மற்ற தமிழனுக்கு வாசிக்க தெரிந்துவிட்டதே.

தமிழனுக்கு வாசிக்க சொல்லிகொடுத்தது எவ்வளவு தவறாய் போயிற்று

 
 

இன்று உலக தாய்மொழி தினம்

இன்று உலக தாய்மொழி தினம்

நமக்கு தாய்மொழி, தந்தை மொழி எல்லாம் தமிழ்

தமிழுக்கு பல சிறப்புகள் உண்டு, சொன்னால் சொல்லிகொண்டே இருக்கலாம், செம்மொழி, ஆதிமொழி, தமிழின் வார்த்தைகள் எண்ணமுடியாதவென அதன் சிறப்புகள் ஏராளம்

அதனைவிட மகா சிறப்பு அது இளமை குன்றாதது, அதனால்தான் சுந்தரம்பிள்ளை “உன் சீரிளமை திறம் வியந்து , செயல் மறந்து வாழ்த்துவோமே.” என தமிழை வியந்து பாடினார்

உலகில் இளமை குன்றாத விஷயங்களில் தமிழும் ஒன்று, அதனை போல குஷ்பூவும் ஒன்று

குஷ்பூ தமிழை போல அப்படியே இருக்கின்றார், தமிழை போல தன்னை புதுப்பித்துகொண்டே இருக்கின்றார்

அதனால் இப்படி சொல்லலாம்

தமிழும் அவரும் ஓரே இனம்….

மலேசிய செந்தமிழ்…..

காலையில் மலேசிய தமிழர்கள் மற்றவர்களிடம் கேட்கும் விஷயம் “பசி ஆறியாச்சா?” அல்லது “பசி ஆற வாரீங்களா?”

மிக நல்ல தமிழ் வார்த்தை, இது போன்ற பல அழகான தமிழ் விஷயங்கள் அவர்களிடம் உண்டு.
மிக சிறிய குழந்தைகளை கூட “அவங்க, வாங்க போங்க” என அவர்கள் மிக மரியாதையாக அழைப்ப்பார்கள், ஓரளவு தூய தமிழ் வாழ்கின்றது,

“அய்யா” என்றுதான் தமிழில் மரியாதையாக தொடங்குவார்கள், சார் எனும் வார்த்தை எல்லாம் வராது

யாழ்பாண தமிழர்களின் சில தமிழ் கலாச்சார, பழக்க வழக்க தாக்கம் அவர்களிடம் மிக அழகாக தெரியும். ஒரு தமிழனாய் அதனை ரசித்திருக்கின்றேன்

யூஸ் செய் என்றெல்லாம் அவர்கள் தமிழ் பெரும்பாலும் கலந்து வராது, “பாவித்து கொள்” என்றே தூய தமிழில் பேசுவார்கள்.

பிரசவம் என்று கூட சொல்ல மாட்டார்கள், “புறம் தருவித்தல்” என மிக அழகான அர்த்தமுள்ள தமிழில் சொல்வார்கள்

சபதம் எனும் வார்த்தை கூட பெரும்பாலும் வராது, அது சூளூரை என்றே சொல்லபடும்,

பார்க்கிங் ஏரியா என்பது வாகன தரிப்பிடம் என்றே அழைக்கபடும், ஈழத்திற்கு அடுத்தபடியான சுத்தமான தமிழை இங்கே ரசிக்கலாம், தமிழகத்தில் அது தமிழ்தாயினை காப்போம் என்பவர்களாலே விரட்டபட்டுவிட்டது

தமிழ் அப்படி வாழ்கிறது, டீன் ஏஜ் என்பதற்கு பதின்ம வயதினர் என்பதும், பிரிந்த தாய்க்கு தனித்து வாழும் தாய்மார் என்பதும், மழை வெள்ளத்தில் திறக்கபடும் முகாம்களுக்கு “துயர் துடைப்பு மையம்” என பெயர் வைப்பதிலும், தமிழ் தனித்து வாழ்கின்றது,

இன்னும் ஏராளமான விஷயங்களை சொல்லலாம், தமிழுக்காக‌ உறுதியாக சொல்லலாம், தமிழ் தமிழ்நாட்டில் குற்றுயிராய் கிடந்தாலும் இங்கு அது இளமையாகத்தான் வாழ்கின்றது.

தினமும் வானொலியிலும், இரவு தொலைக்காட்சி செய்தியிலும் அவர்கள் தமிழ் செய்தி வாசிக்கும் அந்த உச்சரிப்பும், தமிழ் அழகும் அப்படி சிலாகிக்க கூடியவை

அதுவும் பெரும்பாலும் தொலைக்காட்சி செய்தி முடியும் போது திருக்குறள் சொல்லி, அதற்கு பொருளும் சொல்லி முடிக்கும் போது, தமிழக தனியார் தொலைகாட்சிகளும் அவை தமிழை படுத்தும் இம்சையும் கண்ணில் வந்து போகும்.

தமிழக தொலைக்காட்சி செய்தி
வாசிப்பாளர்களும், செய்தி தயாரிப்பவர்களும் ஆரம்ப பாடம் படிக்கவேண்டிய இடம் மலேசிய தமிழ் செய்தி வாசிப்பும், தயாரிப்பும்

இதனை எல்லாம் சொல்லாமல், தமிழர்களின் அரசியலை பேசபோகிறேன் என சொல்லி, நல்ல விஷயம் 95% மறைத்து வெறும் 5% கருப்பு பக்கத்தினை மட்டும் வணிக நோக்கில் காட்டியதால்தான், கபாலியினை சாட நேர்ந்தது

சமீபத்தில் ஒரு பேட்டியில் கண்டேன் இயக்குநர் மதனிடம் சொல்கிறார், நான் மலேசியா சென்று அவர்கள் வாழ்க்கையினை கண்டு படித்தேன்,
படமெடுத்தேன்.

இயக்குநர் மலேசியா வந்தேன், ஸ்டடி செய்தேன் என் பேட்டியில் மதனிடம் ரீல் விடலாம்,, உண்மை அது அல்ல‌

அவர் வந்து ஹோட்டல் ரூமில் தங்கி இருந்து, ரவுடிகளிடம் கதை கேட்டிருக்கவேண்டும் அதனை மட்டுமே செய்து முழு மலேசிய தமிழரையும் படித்துவிட்டேன் என அவசரமாக கபாலி படம் எடுத்திருக்கவேண்டும்

இல்லை என்றால் அப்படி ஒரு குப்பை படம் மலேசிய தமிழரை பற்றி வந்திருக்காது.

அவர்களின் உண்மை பக்கம் தமிழ் பேசும் முறை, தமிழை காக்கும் முறை என்பதில் மகத்தானது
அரசியல் மற்றும் வணிக நோக்கம் தவிர்த்த தமிழனாய் அதை ரசிக்கலாம் வரவேற்கலாம், மற்றபடி கபாலிதான் முழுதாய் பேசுகிறது என எவனாவது சொன்னால் அது முழுக்க முழுக்க அபத்தமானது, களையவேண்டியது

அப்படி நுனிப்புல் மேய்ந்து விட்டு அவசர அவசரமாக ஒரு படம் வந்திருக்கின்றது, இயக்குநர் அப்படி கலாச்சார கொலை செய்திருக்கின்றார் என்பதை எப்படி சொல்ல முடியும்

இப்படித்தான் சொல்ல முடியும்

நல்ல விஷயங்களை மறைத்து ஒரு குறிப்பிட்ட வட்டத்தினை மட்டும் எடுத்து ஒருவித வன்மத்துடன் திட்டமிட்டு எடுக்கபட்ட படம் கபாலி, என்பதை தவிர சொல்ல ஒன்றுமே இல்லை.

அதில் எவ்வித உலகளாவிய அனுபவமோ, பெருந்தன்மையோ , சுத்த தமிழ் உணர்வோ அறவே இல்லை, மகா குறுகிய மனப்பான்மை அது.

எமக்கு ஆச்சரியம் என்னவென்றால் இதெல்லாம் மதனுக்கு தெரியும், அவரின் உலக ஞானமும் கலாச்சார அறிவும் அப்படியானது

பேட்டியில் இந்த தமிழ் வார்த்தைகள், அவர்கள் பயன்படுத்தும் விதங்களை எல்லாம் மதன் பொதுமேடையில் கேட்டு ரஞ்சித்தின் முகத்தில் கரிபூச கொஞ்ச நொடி ஆகியிருக்காது

ஆனால் மதன் செய்யவில்லை, இதுதான் பெருந்தன்மை. மேடை நாகரீகம், பொது நாகரீகம்

சல்யூட் மதன்

மொழித் திணிப்பு….

வெள்ளையன் ஆங்கிலத்தை திணித்தானாம், ஒரு கும்பல் வாதிட்டுகொண்டிருக்கின்றது

உலகெல்லாம் ஆண்ட அவன் உங்களுக்காக தமிழ்படித்திருக்கமுடியுமா? உலகில் வாழ எது அவசியமோ அதனை நாம்தான் கற்றுகொள்ளவேண்டும்,.

எல்லா நாட்டவரும் எல்லா மொழியும் கற்கின்றார்கள், ஆனால் தன் சொந்தமொழி அடையாளங்களை காத்துகொள்கின்றார்கள். நாம் அதனைத்தான் செய்யவேண்டும், தமிழை காத்துவிட்டு அந்நிய மொழிகளை கற்கலாம், தவறில்லை

பாரதி அப்படித்தான் தமிழனாய் வாழ்ந்தான், ஆனால் எல்லா மொழிகளும் அறிந்திருந்தான்.

ஒரு மனிதனுக்கு கூடுதலாக கொஞ்சம் மொழிகள் தெரிவதில் என்ன தவறு வந்துவிடமுடியும்?

யாரும் எந்த மொழியினையும் யார்மீதும் திணித்துவிட முடியாது, தேவை என்றால் அவனவன் சொந்தமாக கற்றுகொள்வான், இது மானிட யதார்த்தம்.

தென்னகத்தில் மலையாளி, கன்னடன், தெலுங்கன் என எல்லோரும் ஹிந்தி கற்கின்றார்கள் அதற்காக அவர்கள் மொழி அழிந்துவிடவில்லை, வளரத்தான் செய்கிறது

ஆயிரம் சர்ச்சைகள் இருந்தாலும் யாழ்பாணத்தார் தமிழ்பேசும் போது மற்றமொழி கலக்காமல் பார்த்துகொள்வார்கள், நிச்சயம் அந்த பண்பு பாராட்டதக்கது. ஆனால் ஐரோப்பாவில் எல்லா மொழியும் படிக்கத்தான் செய்கின்றார்கள்.

மலேசியாவில் வாழும் சீனருக்கு, சீனாவின் பூர்வீகம் தெரியாது, ஆனால் மலாய்மொழி தெரியும், கூடவே சீனமும் தெரியும், அதனை மறந்துவிடவில்லை அவர்கள்.

தொலைந்துவிட்ட எபிரேய மொழியினை மீட்டு அசத்தி இருக்கின்றது இஸ்ரேல், ஆனால் அவர்களின் பன்னாட்டு மொழிபுலமை யாருக்கும் சாத்தியமில்லை

இது வியாபார உலகம், பல இனங்களோடு பழகாமல் நாம் ஒன்றும் கிழித்துவிட முடியாது. அந்த இனங்களோடு பழக சில மொழிகளை கற்றே ஆகவேண்டும்.

விட்டால் கணிப்பொறி மொழிகளையும் பில்கேட்ஸ் திணித்தான், அமெரிக்கன் திணித்தான் என கிளம்விடுவார்கள் போல‌.