கில்லாடி கிளைவ் : 15

கில்லாடி கிளைவ் : 15

லண்டனில் பெரும்புள்ளியாக மாறினார் கிளைவ், சும்மாவே நாம் ஆளபிறந்தவர்கள் என்றால் மகிழும் பிரிட்டானியர், கிளைவ் நிஜமாகவே இந்தியாவினை ஆள தொடங்கிவ்ட்டார் என்பதால் மதித்து மதித்து வணங்கினார்கள்
அவர் பார்லிமென்ட் எம்பி ஆகிவிட்டு இந்தியாவிற்கு என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருக்கும் பொழுது பெரும் விபரீதங்கள் உருவாகின‌
முதலாவது கிளைவே உருப்பட்டுவிட்டார், நமக்கென்ன என ஜென்டில்மேன்கள் எல்லாம் கிழக்கு நோக்கி கிளம்பினார்கள், அதில் சிலர் வசமாக சுருட்டி கொண்டு வந்து செட்டில் ஆனார்கள், அதாவது உடனே கிழக்கிந்திய கம்பெனியில் சேர்ந்து இந்தியா வந்து கிடைப்பதை சுருட்டி கொண்டு ஓடினார்கள், இது பிரிட்டன் சமூகத்தை குழப்பியது
இரண்டாவது கிளைவ் கொட்டி கொடுத்த லாபத்தை கண்ட கிழக்கிந்திய கம்பெனி மலைத்து போயிருந்தது, மாபெரும் வைரசுரங்கமாக அது இந்தியாவினை கண்டது , அதன் பங்குதாரர்கள் கடும் உற்சாகம் அடைந்தனர், டைரக்டர் போர்டு ஆப் டைரக்டர் போன்ற பதவிகளுக்கு கடும் போட்டி நிலவிற்று
இதில் கிளைவின் எதிர்களும் உள்ளே வந்தனர், அவர்களில் சாலிவன் என்பவர் முக்கியமானவர். அதாவது பரம்பரை பணக்காரர்
எப்பொழுதுமே பரம்பரை பணக்காரர்களுக்கும் புது பணக்காரர்களுக்கும் ஒத்துவராது, டாட்டா அம்பானி முதல் நமது ஊர் மூப்பனார் சிவாஜிகணேசன் வரை ஏராள உதாரணம் உண்டு
இதனால் சாலிவான் டைரக்டர் ஆவதை முடிந்தவரை தடுத்துபார்த்தார், காரணம் அவர் பெரும்புள்ளி எனினும் கிளைவ் வங்கத்தில் அவருக்கு சாதகமான செயல்களை செய்து கொடுக்கவில்லை என்பதால் முன்பகை இருந்தது
இந்நிலையில் அவர் டைரக்டர் ஆனார், இருவரும் கோஷ்டி கட்டினர் என்றாலும் சாலிவன் கை ஓங்கி இருந்தது
ஐரோப்பிய நிலை இப்படி இருக்க, இந்திய நிலை எப்படி இருந்தது என்றால் மகா சிக்கலாக இருந்தது
ஆம் ஆங்கிலேயர் இந்தியாவினை மோசமாக சுரண்டுகின்றனர் எனும் பேச்சின் தொடக்கம் அப்பொழுதுதான் நடந்தது
அதாவது கட்சி தலைவர்கள் அல்லது தியாகிகள் நல்ல நோக்கத்துடன் தொடங்குவார்கள், பின்பு வருபவர்கள் சொதப்பி தொலைப்பார்கள், தீரா ஊழலில் சிக்குவார்கள்
இதுதான் பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனியிலும் நடந்தது
கிளைவ் மிக கவனமாக வென்று அதிகாரத்தை பிடித்தான், அரசனின் சொத்துக்களை கப்பமாக பெற்றானே அன்றி பொதுமக்களை தொட்டு கூட பார்த்ததில்லை
ஆனால் கிளைவ் லண்டனில் இருந்த காலத்தில் நிலமை மாறிற்று, வங்கத்தில் மீர் ஜாபர் கொடுத்த கப்பம் போதாதென்று அவரை நீக்கிவிட்டு அவர் மருமகன் மீர் காசிம் என்பவரை நவாபாக நியமித்தது கம்பெனி
மீர் காசிமிடம் ஆளாளுக்கு கறந்தார்கள், போதா குறைக்கு வெள்ளையரின் பொருட்களை அதிக விலைக்கு வாங்கும்படி மக்கள் நிர்பந்திக்கபட்டனர்
பல வியாபாரிகள் பிரிட்டன் கொடியோடு வியாபாரம் செய்து அரசுக்கு வரவேண்டிய வரிகளை கொடுக்காமல் டபாய்த்தனர்
வங்கம் நாசமாயிற்று, தங்கம் விளையும் அந்த பூமி அந்த முறையற்ற கம்பெனியரால் சூறையாடபட்டது, எங்கும் குழப்பம்
இன்னும் குழப்பத்தை கூட்ட மறுபடி மீர்காசிமை விலக்கிவிட்டு மறுபடியும் மீர் ஜாபரை கொண்டு வந்தார்கள்
பாட்னாவிற்கு தப்பி ஓடிய மீர்காசிம் 100க்கும் மேற்பட்ட ஆங்கிலேயரை கொன்றுவிட்டு அயோத்தி சுல்தானிடம் சரணடைந்தான்
விஷயம் லண்டனுக்கு சென்றது, கம்பெனி தலைக்கு மேல் கை வைத்து உட்கார்ந்தது, இப்பொழுது போல் அல்ல நினைத்தவுடன் பயணிக்க முடியாது, கடல் அமைதியாக இருந்தால் இந்தியாவினை அடைய‌ 8 மாதம் ஆகலாம், கடல் கோளாறு செய்தால் 1.5 வருடம் ஆகலாம்
இந்த கால இடைவெளியில் கிழக்கிந்திய கம்பெனியும், லண்டனில் இருந்து கிளைவ் காட்டிய வழியில் வந்த பிரிட்டிசாரும் வங்கத்தை பிழிந்து தங்கமாக சம்பாதித்தனர்
அண்ணா தொடங்கிய கட்சி இப்பொழுது யாருக்கு கனத்த லாபம் கொட்டி கொடுக்கின்றது என்பது தெரியாததல்ல, அப்படித்தான் அன்றைய கிளைவ் இல்லா வங்கமும் இருந்தது
(இந்த குழப்பமான காலத்தில்தான் ஆற்காடு நவாபையும் ஆங்கிலேயர் கசக்கி பிழிய , அவர் மதுரையினை ஆண்ட மருதநாயகத்திடம் அதிக கப்பம் கேட்டு மிரட்ட அவன் கொடுக்க முடியாது என சீற, அந்த சண்டை அப்பொழுதுதான் நடந்திருக்கின்றது
அவனும் கொல்லபட்டான்
நிச்சயம் இங்கு கிளைவ் இருந்திருந்தால் மருதநாயகம் கிளர்ச்சி செய்திருக்கமாட்டான் என்கின்றது வரலாறு)
வரலாறு மிகபெரும் காட்டாட்சி என அதைத்தான் சொல்கின்றது, கிளைவ் வழியில் எல்லோருக்கும் பணக்காரன் ஆகும் ஆசை வந்து வலுகட்டாயமாக சுரண்டி இருக்கின்றார்கள்
வங்கத்து மக்களுக்கும் வேறுவழி தெரியவில்லை, எதிர்க்கவும் முடியவில்லை . அதுவரை வாழ்வாங்கு வாழ்ந்த வங்கம் இக்காலத்தில் மட்டும் 3 லட்சம் ஏழைகளை உருவாக்கிற்று என்கின்றது வரலாறு
தங்க முட்டை இடும் வாத்தை கதற கதற அறுத்தது போல் அறுத்திருக்கின்றார்கள், மிக மிக கொடூரமான ஆட்சியாக அது இருந்திருக்கின்றது
வெள்ளையர் என்றாலே காட்டுமிராண்டி சுரண்டலாலர்கள் என இந்தியாவின் மற்ற பகுதிகள் எல்லாம் மிரண்டிருக்கின்றன‌
அங்கே கம்பெனிக்குள் யார் கை ஓங்குவது என மல்லுகட்டி கொண்டிருந்த சாலிவனும் கிளைவும் இதனால் தங்கள் சண்டையினை நிறுத்திவிட்டு கம்பெனி விவகாரங்களுக்கு வந்தார்கள்
கம்பெனி இந்த சீர்கேட்டை சரிபடுத்தவும் மறுபடியும் வங்கத்தில் சட்டம் ஒழுங்கை சீர் படுத்தவும் யாரை அனுப்பலாம் என சிந்தித்த கம்பெனி கிளைவிடம் சரணடைந்தது
ஏன் அந்த சாலிவனை அனுப்ப வேண்டியதுதானே என எகத்தாளமாக கேட்ட கிளைவ் முன்னால் பல்லை கடித்து நின்றான் சாலிவன்
இந்த அவமானத்தை உள்ளே வைத்து கொண்டு, கிளைவ் இல்லையேல் கிழக்கிந்திய கம்பெனியும் அதன் எதிர்காலமும் இல்லை என சொல்லி நகர்ந்தான் சாலிவன்
கிளைவ் இந்தியா திரும்பி நிலமையினை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும் என கம்பெனி மன்றாடியது
கிளைவ் மறுபடியும் தான் ஒரு மிகபெரும் ராஜதந்திரி, வில்லாதி வில்லன் என்பதை நிரூபித்தான் எப்படி?
கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒவ்வொரு எதிரியினையும் தன் வீரத்தாலும் தந்திரத்தாலும் வீழ்திய கிளைவ், இந்த சூழலை அட்டகாசமாக பயன்படுத்தினான்
எப்படி?
அமைதியாக சொன்னான் , “நான் வங்கம் செல்கின்றேன் ஆனால் இந்த சாலிவன் டைரக்டராக இருந்தால் தொல்லை வரும், நிச்சயம் என்னை எங்காவது சிக்க வைப்பார் தொல்லை கொடுப்பார்
அவரை பதவியிலிருந்து நீக்காதவரை என்னால் இந்தியாவிற்கு செல்லமுடியாது , நீங்களே செல்லுங்கள்..”
தன்னை விட்டால் யாருமில்லை என்பதை அட்டகாசமாக உணர்ந்திருந்த கிளைவ் , இடம்பார்த்து சாலிவனை அடித்தார்
பதறிய கம்பெனி சாலிவானை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி, கிளைவின் காலில் விழுந்து மன்றாடியது
தன் பெரிய எதிரியினை வீழ்த்திய வெற்றியுடன் மறுபடி இந்தியா கிளம்ப தயாரானான் கிளைவ்
(தொடரும்..) [ November 4, 2018 ]
Image may contain: 1 person

கில்லாடி கிளைவ்

கில்லாடி கிளைவ் 14

டச்சுக்காரர்கள் ஜாவா தீவிலிருந்து வந்து ஹூக்ளி பகுதியினை முற்றுகை இட்டார்கள், கிளைவ் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்
காரணம் ஐரோப்பாவில் நிலமை வித்தியாசமாயிருந்தது, பிரெஞ்ச்க்காரர்கள் எந்நாளும் அவர்களுக்கு எதிரி, போட்டு சாத்தினால் சிக்கல் இல்லை. ஆனால் டச்சுக்காரர்கள் ஆங்கிலேயருக்கு நண்பர்கள்
கப்பல் போக்குவரத்திலும் சரக்கை அனுப்பவதிலும் டச்சுகாரர்கள் கப்பலையும் அடிக்கடி பயன்படுத்தும் ஒப்பந்தமும் உண்டு
இங்கு கிளைவ் அவர்களை அடித்துவிட்டால் லண்டனில் இருந்து ஆட்சேபனை வரும், சிக்கல் வரும். ஆனால் அதற்காக டச்சுகாரர்களை இங்கு அனுமதிக்கவு முடியாது, பின் எவ்வளவு சிரமபட்டு வங்கத்தைபிடித்தோம்? ஆற்றில் மீன் பிடிக்கவா?
ஆனால் நிச்சயம் மோத வேண்டும், ஆம் யுத்தத்தை நாம் தொடங்கவில்லை டச்சுக்காரர்கள்தான் தொடங்கினார்கள் என சொல்லிவிடலாம்
மீர்ஜாபர் ஒரு தவறு செய்திருந்தான், இங்குதான் டச்சுக்காரர்களை மதித்தார்களே தவிர ஐரோப்பாவில் அவர்களை கண்டு யாருக்கும் பயமுமில்லை பெரும் மரியாதையுமில்லை
ஆனால் மீர்ஜாபரோ அவர்களை பிரிட்டிசாரோடு சரிக்கு சமமாக நினைத்து அழைத்து வந்தான்
இன்றும் பிரிட்டனின் கடற்படை வலுவானது, அன்றும் அப்படித்தான் இருந்தது, எப்படி என்றால் மற்ற ஐரோப்பிய நாடுகளை போல் இல்லாமல் பிரிட்டன் என்பது தனி தீவு, ஜூலியஸ் சீசர் அதனை கைபற்றிய பொழுது ரோமரின் கடற்படையின் வீரம் தெரிந்தது
அதன் பின் பிரிட்டானியர் தங்கள் பாதுகாப்பே கடலில்தான் என இருக்கின்றது என மிக கவனமாயினர், பாதுகாப்பு மட்டுமல்ல, வியாபாரமும் கடல்வழி என்பதால் கடற்படைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தனர்
குறிப்பாக ஆங்கில கால்வாயில் அவர்கள் நடத்திய போர்கள் அவர்களுக்கு கனத்த அனுபவத்தை கொடுத்தன, இதனால் கடற்போக்குவரத்திலும் படையிலும் வியாபாரத்திலும் அவர்கள் கொம்பன் சுறாவாக இருந்தனர்
பின்னாளில் நெப்போலியன், ஹிட்லர் என பெரும் ஜாம்பவான்களே பிரிட்டிஷ் கடற்படையிடம் மண்டியிட்டனர்
அப்படிபட்ட கடற்பலத்தை அன்றே பெற்றிருந்த பிரிட்டிசார் டச்சுகாரர்களை விடுவார்களா?
நிலத்தில் கிளைவும், கடலில் வாட்சனும் சுற்றிகொள்ள டச்சுபடை திணறியது, இவ்வளவிற்கும் ஆந்திர போர்களுக்கு பெரும் படையினை அனுப்பி இருந்தார் கிளைவ்
டச்சுபடைகளை முற்றுகை இட்டு பிடித்த கிளைவ் பெரும் சேதம் எல்லாம் விளைவிக்கவில்லை, “திசைமாறி வந்துவிட்டீர்கள் சேதாரத்திற்கு பணம் செலுத்திவிட்டு செல்லுங்க, இனி இந்தபக்கம் உங்களை பார்த்தேன் அவ்வளவுதான்” என சொல்ல்விட்டு மீர்ஜாபரை பார்க்க சென்றான்
தந்திரசாலியான மீர்ஜாபரோ அதற்கு முன்பே அலறினான், “அய்யா கிளைவ் அவர்களே, இந்த வங்கநாட்டின் மீது படையெடுத்த டச்சுக்காரரை விரட்டி எங்களை காத்த கடவுள் நீங்கள்..” என ஆரம்பித்துவிட்டான்.
டச்சுகாரர்களை அழைத்துவந்தது இவன் என கிளைவிற்கும் தெரியும், ஆனால் காட்டவில்லை.
யோசித்தான் கிளைவ் “நாம் என்ன மீர்ஜாபரை கொல்ல வந்தோமா? இல்லை ஆள வந்தோமா?
நமக்கு தேவை பணம், வியாபாரம் செய்ய அடிமை தேசம் அது போதும், இந்த இந்தியர்களே இப்படித்தான், இவன் தலையினை சீவிவிட்டு இன்னொரு நவாபினை வைத்தாலும் அவனும் இதைத்தான் செய்வ்வான் எல்லாம் நாற்காலி படுத்தும் பாடு”
ஆம் உண்மையும் அதுதான், அதனால் கிளைவ் சந்தர்பத்தை அழகாக பயன்படுத்தினான். டச்சுகாரர்களை விரட்டிய வகையில் ஏக செலவு, பெரும் தொகையினை கொடுத்துவிடுங்கள்
நன்றி கொல்லுதல், பழிவாங்குதல் எல்லாம் தாண்டியது வியாபாரம் என ராஜதந்திரமாய் நின்றான் கிளைவ், மறுபடியும் கஜானாவினை திறந்துவிட்டான் மீர்ஜாபர்
கொடுத்த மீனில் கிளைவிற்கும் பங்கு சென்றது, ஓரளவு அமைதி திரும்பியதை அடுத்து லண்டன் செல்ல முடிவெடுத்தார் கிளைவ்
லண்டன் அவருக்கு வரலாறு காணா வரவேற்பினை அளித்தது, ஆம் யானை படை வைத்திருப்பவர்கள் இந்திய அரசர்கள், அவர்களின் படைபலம் பிரிட்டிஷ் மக்கள் தொகையினைவிட அதிகம் என சொல்லபட்ட காலங்களில் இந்திய அரசர்களை வென்று பிரிட்டன் ஆதிக்கத்தை தொடங்கி வைத்துவிட்டு வரும் கிளைவிற்கு அப்படி வரவேற்பு இருந்தது
ஏற்கனவே டூப்ளேவினை அடித்துவிட்டு லண்டனுக்கு வந்ததை விட இம்முறை அமோக வரவேற்பு காரணம் ஆற்காடு, ஆந்திரா, வங்கம் என பெரும் பகுதிகளை அதாவாது பிரிட்டனை விட பெரும் பரப்பினை பிடித்து காட்டி இருந்தான் கிளைவ்
லார்டு எனப்படும் மிகபெரும் பட்டம் அவருக்கு கொடுக்கபட்டது, ஐஸ்லாந்து நாட்டு லார்டு பட்டமும் வந்தது
கிளைவினை பெற்றவர்களுக்கும் உடன்பிறந்தோருக்கும் நம்பவே முடியவில்லை, இங்கிலாந்து நாட்டின் பாதுகாவலர் ஜார்ஜ் வாழ்க, ஜீசஸ் வாழ்க, மாமன்னர் வாழ்க, அப்படியே கிளைவும் வாழக, அவரால் நாங்களும் வாழ்க என சொல்லிகொண்டார்கள்
மாபெரும் உயரத்தை எட்டினான் கிளைவ், அவர்களின் மிகபெரும் தளபதியான மால்பரோ (சிகரெட் கம்பெனி அல்ல, அப்படி ஒரு வீரன் அவர்களுக்கு உண்டு) போன்ற மிகபெரும் வீரனாக அவனை கொண்டாடினார்கள்
இன்னும் சிலர் பிரிட்டனை அச்சுறுத்திய ரஷ்ய தளபதி பிரெடரிக் போன்று நமக்கு கிளைவ் என்றனர், பிரிட்டனின் புகழ்மிக்க தளபதியான உல்ப் என்பவருக்கு அடுத்து கிளைவ் பிரிட்டனின் மிகபெரும் கவுரவம் என அரச மாளிகையில் சொல்லி அரசனே அவரை கொண்டாடினான்
தேனை எடுத்தவன் கையினை நக்க மாட்டானா என்றொரு பழமொழி உண்டு, கிளைவிற்கும் அப்படி புறங்கையில் தேன் சேர்ந்தது அதாவது இந்திய அரசர்கள் அவருக்கு முன்னால் அல்ல , அவரின் குதிரை முன்னால் கொட்டியதே பெரும் தங்கமும் வைரமுமாக இருந்தது
இந்திய அரசர்கள் கொட்டியது கிளைவின் கால் முட்டுவரை தங்கமாக இருந்தது என்கின்றது வரலாறு
இதனால் லண்டனில் மிகபெரும் செல்வந்தர் ஆனார் கிளைவ், பெரும் மாளிகையும் ஆட்களுமாக திடீரென மாபெரும் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
அவர் நீர்குடிக்கும் குடுவை கூட தங்கத்தில் வைரம் பதித்ததாக இருந்த அளவு செல்வத்தில் திளைத்தார்
(சமீபத்தில் அக்குடுவை ஏலத்திற்கு வந்து பெரும் தொகைக்கு சென்றது..)
அப்பொழுதே பணமாக இல்லாமல் தங்கமாக லண்டனுக்கு ஏகபட்ட கட்டிகளை கடத்தி இருந்தான் கிளைவ், அவன் வீட்டு செங்கற்களை விட தங்க கட்டிகள் அதிகமாய் இருந்தன‌
ஒரு கட்டத்தில் அரசனை விட அவர் அதிகம் சம்பளம் கிம்பளம் எல்லாம் பெறுகின்றார் என்ற செய்தியும் வந்தது
19 வயதுவரை ஒன்றுமில்லாமல் இருந்து 32 வயதில் செல்வத்தின் உச்சத்தை எட்டியவர் கிளைவினை போல இன்றுவரை வரலாற்றில் எவருமில்லை
கிளைவின் சகோதரிகள் உடன்பிறவா சகோதரி போல பெரும் மகாராணி ஆயினர், அவரின் சகோதரர்களும் குடும்பத்தாரும் இங்கிலாந்தில் செல்வந்தர் ஆயினர்
கிளைவிற்கு நன்றியும் இருந்தது, அப்பொழுது ஓய்விலிருந்த கமான்டர் லாரன்ஸுக்கு பெரும் தொகை கொடுத்தான், ஆம் சென்னை கோட்டையில் கிளைவினை கைதூக்கிவிட்டவர் அல்லவா? அந்த நன்றி கடனுக்காக‌
தனக்கு உதவியர்களை தேடி தேடி கொடுத்தான் கிளைவ்
அதன் பின் பெரும் நிலங்களுக்கு சொந்தக்காரன் ஆனான், அவனின் மாபெரும் கனவான லண்டன் பாராளுமன்றத்தின் அங்கத்தினர் ஆகுதல் எனும் கனவினை நோக்கி நடைபோட்டான்
இம்முறை வெற்றிகிட்டியது கிளைவ் லண்டன் பாராளுமன்றத்தின் அங்கத்தினர் ஆனார், பெரும் மதிப்புவாய்ந்த பதவி அது
எந்த லண்டன் தெருக்களில் பொறுக்கி என்றும், ரவிடி என்றும், உருபடாதவன் என தூற்றபட்டானோ அதே தெருக்களில் மக்கள் குனிந்து போற்ற வலம் வந்தான்
எல்லாம் இந்திய அரசர்கள் அவனுக்கு செய்த உதவி
பாராளுமன்றத்தில் அவன் அதிகம் பேசவில்லை எனினும் இந்தியருக்கு ஏதாவது நலதிட்டங்கள் செய்யவேண்டும், அம்மக்களும் லண்டன் மக்கள் போல சகல உரிமை பெற்று வாழவேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று
இந்திய மக்களுக்கு ஏதும் செய்ய அவன் திட்டமிட்டான், ஆனால் லண்டனில் பலர் வேறுமாதிரி கனவு கண்டனர்
பொறுக்கி கிளைவே இன்று ராஜாவாகிவிட்டான், நாமும் ஆகமுடியாதா?
இந்தியா சென்றால் அள்ளிகொண்டுவரலாம் என பலர் கிளம்பினர், கப்பல் கப்பலாய் கிளம்பினர்
இந்நிலையில் கிழக்கிந்திய கம்பெனியின் ஆடிட்டர்கள், டைரக்டர்கள் பக்கம் இருந்தும், அரச கணக்கீட்டாளர்கள் பக்கம் இருந்தும் ஒருமுணுமுணுப்பு கேட்டது
என்ன சர்ச்சை அது?
நமது தமிழக பாஷையில் சொல்வதென்றால் கிளைவ் மேல் “வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு” சர்ச்சை அது
அவர்கள் கணக்குபடி கிளைவ் என்பவன் சாதாரண மேனேஜர் அல்லது கமாண்டர், கம்பெனி சொல்வதை செய்ய வேண்டும்
கம்பெனி வருமானத்தை விட கிளைவ் வருமானம் பெருகி இருப்பது எப்படி என நெளிய ஆரம்பித்தார்கள்
அவர்கள் யாரும் இந்தியா வந்தவர்களுமல்ல, இங்குள்ள செல்வம் பற்றி அறிந்தவர்களுமல்ல, கிளைவ் அளவு உயிரை பணயம் வைத்து போர் நடத்தியவர்களுமல்ல‌
சும்மா நமது ஊர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் போல அறிக்கை பிரகாரம் ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள்
கிளைவோ இப்பொழுது லண்டன் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிவிட்டாலும் இந்தியருக்கு ஏதும் செய்யவேண்டும் என்ற நல்ல யோசனையில்தான் இருந்தான்
(தொடரும்..)

[ October 30, 2018 ]

Image may contain: 4 people
No automatic alt text available.

கில்லாடி கிளைவ் 13

கில்லாடி கிளைவ் 13

மீர்பாஜபர் நவாப் ஆனவுடன் அரசின் கஜானா கிளைவிற்காக திறந்துவிடபட்டது, கிட்டதட்ட 9 லட்சம் பவுண்ட் அளவிற்கு அங்கிருந்த செல்வம் கிழக்கிந்திய கம்பெனிக்கு கிடைத்தது
கிளைவ் நினைத்திருந்தால் இதில் பெரும் பகுதியினை சுருட்டி இருக்கலாம், ஆனால் அவன் எடுக்கவில்லை. அவ்வளவும் கம்பெனிக்கே சென்றது
இதனிடையே ஒரு சுவாரஸ்ய சம்பவமும் நடந்தது, கிளைவின் வெற்றியினை அறியாத கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தை மாற்றி அமைத்து பல அதிகாரிகளை அனுப்பியது, மேல் மட்ட பெயரில் கிளைவின் பெயர் இல்லை
காரணம் அக்கால தொலைதொடர்பு முறை அப்படி இருந்தது
ஆனால் வந்து இறங்கிய அதிகாரிகள் கிளைவின் அதிரடியினையும் அவனின் பெரும் வெற்றிகளையும் கேள்விபட்டு அவனை முக்கிய பொறுப்பில் அமர்த்தினார்கள்
கிளைவின் வங்க‌ வெற்றி தாமதமாக பிரிட்டனுக்கு தெரிய வர, அவரை முக்கிய பொறுப்பில் அமர்த்தி அடுத்த லிஸ்டை வெளியிட்டது
அந்த விஷயம் கிளைவினை எட்டியபொழுது இங்கு நிலமை ஏற்கனவே அப்படித்தான் இருந்தது, ஆம் கிளைவ் உச்ச தலைவராயிருந்தார், அவர் செல்வாக்கு கூடி இருந்தது
எவ்வளவு செல்வாக்கனவர் என்றால், இந்திய சிற்றரசர்கள் அவரின் குதிரையினை விழுந்து விழுந்து வணங்கினர் என்றால் நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.
கிளைவ் இந்தியாவில் அந்த டூப்ளேயினை விட பெரும் செல்வாக்கோடு வலம் வந்தார்
அப்பொழுது பிரெஞ்ச் ஆதிக்கம் கோதாவரி விசாகபட்டினம் பகுதியில் மிகுந்திருந்தது, அதை முடக்க ஆந்திர போர்களை தொடங்கினார் கிளைவ்
அவரின் அதிரடியில் கோதாவரி, கிருஷ்ணா, கடப்பா, விசாகபட்டினம் பகுதிகள் பிரிட்டிசாருக்கு கிடைத்தன. இப்பொழுது நெல்லை பகுதி முதல் விசாகபட்டினம் வரை பிரிட்டானியர் ஆதிக்கம் வந்தது, ஒரே உபயம் கிளைவ்
இடையில் ஒரிசா மட்டும் இல்லை
இந்நிலையில் மீர்ஜாபரின் மகனின் அட்டகாசம் எல்லை மீறியது, கிளைவ் அதை எல்லாம் கண்டுகொள்ளவில்லை ஆனால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டது
இந்த சூழ்நிலையினை பயன்படுத்த விரும்பினான் அயோத்தி சுல்தான் சுஜா உத்தவ்ல்லா. அவன் வங்கம் மேல் படையெடுப்பதாக அறிவித்தான்
அலறிய மீர்ஜாப்ர் கிளைவினை நாடினான், அயோத்தி சுல்தானை விரட்டிவிட்டு மீர் ஜாபரை நிறுத்தினான் கிளைவ்
கொஞ்சநாள் நிலமை சுமூகமாக சென்றபொழுது அடுத்த ஆபத்து டெல்லியிலிருந்து வந்தது
அதாவது முகலாய மன்னரான இரண்டாம் ஆலம்கீர் என்பவரை அவர் மந்திரியே சிறைவைத்தான், அதில் ஆலம்கீரின் மகனான ஷா ஆலம் என்பவன் தப்பினான்
தப்பியவன் என்ன செய்தான் என்றால் பெரும் படை திரட்டினான், மராட்டியர் பஞ்சாபியர், தக்காணம், என பெரும் எண்ணிக்கை கொண்ட படை அது
தந்தையினை மீட்க பல இடங்களில் ஆதரவு கோரினான் ஷா ஆலம். ஆம் டெல்லி முகலாய மன்னருக்கு முன்பு கட்டுபட்டவர்கள்தான், மன்னருக்கு ஆபத்து என்றால் அவர்கள் வரவேண்டும்
அப்படி வங்கத்து மீர்ஜாபருக்கும் அழைப்பு விடுத்தான் மீர் ஜாபரோ யோசித்து கொண்டிருந்தான்
மிக பெரும் தந்திரசாலியான மீர் ஜாபருக்கு இப்பொழுது ஆங்கிலேயர் பக்கமா இல்லை ஆலம் ஷா பக்கம் நிற்க வேண்டுமா என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டபொழுது அவன் அட்டகாசமான முடிவெடுத்தான்
போரில் தான் கலந்து கொள்ளவில்லை என்றும் அதே நேரம் பெரும் பணத்தை கொடுப்பதாகவும் உறுதி அளித்தான்
உறுதி அளித்தானே தவிர கொடுக்கும் திட்டமெல்லாம் இல்லை மாறாக கிளைவிற்கு கடிதம் எழுதினான்
கிளைவோ ஆலம்ஷாவிற்கு நீர் பணம் கொடுத்தால் எல்லோரும் உம்மை பணம் கேட்டே மிரட்டுவார்கள் என்பதால் கொடுக்க வேண்டாம் என சொல்லிவிட்டான்
கொடுத்தால் கிளைவ் அடிப்பார் கொடுக்காவிட்டால் ஆலம் ஷா அடிப்பான் என சிந்தித்த மீர்ஜாபர், பாட்னா சுல்தானை வைத்து ஆடினான்
பாட்னா சுல்தானை ஆலம் ஷாவிற்கு எதிராக ஏவிவிட்டான் மீர் ஜாபர், இதனால் ஆலம்ஷாவின் படைகள் பாட்னாவினை முற்றுகை இட்டது
இந்நேரம் பாட்னா சுல்தான் உதவி கேட்பதாக கிளைவிடம் சொல்லிவிட்டான் மீர் ஜாபர்
கிளைவும் நடக்கும் விஷயத்தை கவனித்து கொண்டே இருந்தான், பாட்னா விழுந்தால் அடுத்தால் ஆலம் ஷா மீர் ஜாபர் மேல் பாய்வார் என்பது அவனுக்கு தெரியும்
இதனால் பெரும் படையுடன் கிளம்பினான் கிளைவ், ஆனால் ஆலம் ஷாவின் படையுடன் ஒப்பிடுகையில் கிளைவின் படை வழக்கம் போல் சிறியது
எனினும் கிளைவ் வருகின்றான் என்றவுடன் ஆலம்ஷாவின் படையினர் ஓட்டமெடுத்த்தனர், கூலிக்கு வந்த பிரெஞ்ச் படையினர் மட்டும் நின்றனர், அவர்களை பின்மண்டையில் அடித்துவிரட்டிவிட்டு பாட்னாவினை காத்தான் கிளைவ்
பின் என்ன ஆகும்? பாட்னா கிளைவின் செல்வாக்கினை ஏற்று கொண்டது
ஆலம்ஷாவினை கிளைவ் விரட்டிவிட்டதும், பல சாகசங்களை செய்ததும் மீர் ஜாபரின் மனதை மிகவும் யோசிக்க வைத்தது
ஆம் அவன் தன் மகனை அடுத்த நவாப் ஆக்க எண்ணம் கொண்டிருந்தான், ஆனால் மகனோ மிகபெரும் அயோக்கியனாய் இருந்தான் வங்க மக்கள் அவனை விரும்பவில்லை
நாளை சிக்கல் என்றால் தன்னை விரட்டிவிட்டு இன்னொரு நவாபினை பிரிட்டிசார் நியமிப்பர் என்பதை உணர்ந்த ஜாபர் பெரும் நயவஞ்சக திட்டமிட்டான்
பன்னீர் செல்வம் எடப்பாடியினை விரட்ட திட்டமிடுதல் போல, எடப்பாடி சில நேரம் மோடியோடு ஆடுவது போன்ற சாயல் அது
கிளைவினை வெல்ல பிரெஞ்சிக்காரர்களால்தான் முடியவில்லை , ஆனால் இன்னொருவர்களால் முடியலாம்
அவர்கள் இந்தியாவில் அதிகம் இல்லையே தவிர இந்தோனேஷியா முதலான கிழக்காசிய பகுதி எல்லாம் அவர்கள்தான் ஆள்கின்றார்கள்
அவர்களை அழைத்து இந்த பிரிட்டானியரை விரட்டினால் என்ன?
ஆம் டச்சுகாரர்களுக்கு தூதுவிட்டான் மீர் ஜாபர், “வங்கம் பக்கம் வந்து வெள்ளையரை விரட்டிவிட்டு இங்கு வியாபாரம் செய்யவும், உங்களை வங்கத்து நவாப் உள்ளன்போடு வரவேற்கின்றார்”
டச்சுக்காரர் துணையோடு கிளைவினை விரட்டும் மாபெரும் வஞ்சக திட்டத்தில் இறங்கினான் மீர்ஜாபர்.
ஏற்கனவே மிக அணுக்கமாக மீர்ஜாபரை கண்காணித்த கிளைவிற்கு பொறி தட்டிற்று
டச்சுக்காரரோ இந்தோனேஷியாவில் இருந்து இந்தியா வரை தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்த 11 கப்பல்களில் ஜாவா தீவிலிருந்து கிளம்பினர் [ October 20, 2018 ]
(தொடரும்..)
Image may contain: 3 people

கில்லாடி கிளைவ் 12

கில்லாடி கிளைவ் 12

உண்மையில் இந்திய வரலாற்றை மாற்றியவன் யாரென்றால் அந்த மீர்ஜாபர், மிக பெரும் பேராசைக்காரனும் அதே நேரத்தில் மகா தந்திரகாரனுமாகவும் இருந்தான்
நவாபின் படையில் இருந்து கொண்டே கிளைவுடன் தொடர்பில் இருந்து, பின் யுத்தத்தில் கிளைவுடன் வருவதாக உறுதியும் சொல்லிவிட்டு கடைசியில் படையினை கலைத்துவிட்டு இருவருக்கும் பொதுவாக இருந்து கொண்டான்
நவாபினை தப்பி ஓடும்படி திட்டமிட்டு கொடுத்தவனும் அவனே, கிளைவிடம் சென்று தன்னை மன்னிக்கும்படி நின்றதும் அவனே
கிட்டதட்ட தமிழகத்து பன்னீர் செல்வத்தின் சாயல் அவனிடம் இருந்தது
மீர் ஜாபர் துரோகி என தெரிந்தாலும் வெளிகாட்டவில்லை கிளைவ், அவனுக்கு தேவை வங்கத்தில் தனக்கு தலையாட்டும் நவாப், இவனை நவாப்பாக்கிவிட்டு அவன் போக்கில் இருந்தாலும் மனம் நம்பவில்லை
அந்த ஓர்மிசென்ட் என்றொருவனை பார்த்தோமே நினைவிருக்கின்றதா? அவன் தன் பத்திரத்தோடு சபைக்கு வந்தான்
எந்த பத்திரம்?
வெள்ளை பத்திரம் ஒன்றை கிளைவ் மோசடியாகவும், சிகப்பு பத்திரம் ஒன்றை ஓர்மிசென்டிற்காகவும் எழுதினான் என பாத்தோமல்லவா? அந்த பத்திரத்தோடு வந்தான்
சபை கூடிற்று, தன் சிகப்பு பத்திரத்தை எடுத்து வாசித்தான் அதில் 3 லட்சம் பொன்னும் இன்னும் பல சலுகைகளும் இருப்பதாக எழுதபட்டு வாட்சன் முதலானோர் கையெழுத்தும் இருப்பதாக வாசித்துவிட்டு எப்பொழுது தரபோகின்றீர்கள் என்றான்
தர்க்கம் நீண்டது
“என்ன சொல்கின்றீர் ஓர்மிசென்ட், நாங்கள் ஒப்புகொண்டோமா?
ஆம் நீங்களே ஒப்புகொண்டு எல்லோரும் கையெழுத்து போட்டிருக்கின்றீர்கள் பாருங்கள்
இல்லை நாங்கள் சிகப்பு பத்திரத்தில் கையெழுத்து போடவே இல்லை, வெள்ளை பத்திரத்தில்தான் போட்டோம்
இல்லை இது மோசடி
எது மோசடி, நானும் சபையாரும் வாட்சனும் கையெழுத்திட்ட வெள்ளை பத்திரம் இதோ, 5 ஆயிரம் பொன்னுக்குத்தான் எழுதியிருக்கின்றொம் நீர் பொய் பத்திரம் வைத்திருக்கின்றீர்”
ஓர்மிசென்டுக்கு தலை சுற்றியது, ஆம் அப்படி ஒரு பத்திரம் தயாரித்தது கிளைவ் தவிர யாருக்க்கும் தெரியாது, வாட்சனே வெள்ளையில்தான் கையெழுத்திட்டார்
வசமாக தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த ஓர்மிசென்ட் அழுதான் புரண்டான்
கிளைவ் மெதுவாக சொன்னான், நீ வீரனென்றால் வீரத்தில் சந்திதிருப்பேன் நீ துரோகி, துரோகத்தால் சாய்த்தேன்
இதன் பின் ஓர்மிசெண் கிட்டதட்ட பைத்தியம் நிலைக்கு சென்றான் என்கின்றது வரலாறு, அவனும் என்ன செய்யமுடியும்? சதி ஆலோசனையினை சொல்லிவிடுவேன் என மிரட்டித்தான் காரியம் சாதிக்க எண்ணினான் , இனி என்ன செய்ய முடியும்? நவாபையே காணவில்லை
எண்ணி எண்ணி அழுது செத்தும் போனான் ஓர்மிசென்ட்
நிச்சயம் கிளைவ் செய்தது துரோகம் சந்தேகமில்லை ஆனால் துரோகிகளிடம் வாளா வீசமுடியும்? துரோகத்தால்தான் சரிக்க முடியும்
கிளைவிற்கு இந்தியர் மேல் மரியாதை ஏன் இல்லை என்றால் இம்மாதிரி ஆட்களால்தான்
பிரிட்டானியரின் அரச விசுவாசம் பிரசித்திபெற்றது, இன்றுவரை பிரிட்டன் அரச குடும்பத்தின் மீது மக்கள் கொண்டிருக்கும் அபிமானம் அப்படி
அரச விசுவாசம் என்பது ரத்தத்தில் கலந்தது, பின்னாளில் அகண்ட இந்தியாவினையே விக்டோரியா ராணி கேட்டவுடன் கொடுத்தது கம்பெனி
ஆனால் இந்தியர் நிலை?
மன்னனை சுற்றி ஒருவனும் விசுவாசமாக இந்தியாவில் இல்லை, பூராவும் சுயநலம். எங்கிருந்தோ வந்த தனக்காக வெறும் அதிகாரத்திற்காக அரசனையே காட்டி கொடுக்க இந்தியர் ரெடி
இதில்தான் அதுவும் மீர் ஜாபர், இந்த ஓர்மிசென்ட் போன்றோரை பார்த்தபின்புதான் நெல்லில் இருந்து உமி நீங்குவது போல் கிளைவின் இந்தியர் மீதான அபிமானம் கீழானது
இந்தியர் பதவிக்காகவும் அதிகாரத்திற்காகவும் எந்த இழி செயலையும் செய்வர் என மனமார நம்பினான், இந்திய ஆட்சியாளர்களும் அதை நிரூபித்தனர்
சிராஜின் கொடுங்கால் ஆட்சியே தான் இங்குகாலூன்ற வாய்பாயிற்று என கருதிய கிளைவ், நல்லாட்சி கொடுக்க தொடங்கினான்
வியாபாரமோ ஆட்சியோ ஆங்கிலேயர் நேர்மையானவர்கள், நாணயமானவர்கள் யாரையும் ஏமாற்றமாட்டார்கள் என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட கடும்பாடுபட்டான்
அது வேலையும் செய்தது, வெள்ளையர் வங்க மக்களின் அனுதாபத்தை உடனே பெற்றனர்
மக்களுக்கு வசதி பெருக பெருக வெள்ளையர்களை அவர்கள் எதிரிகளாக கருதவில்லை கிளைவ் எதிர்பார்த்தது இதுதான்
இந்நேரம் இந்த மீர்ஜாபரின் நரிமூளை வேறுவிதமாக சிந்தித்தது
எப்படியும் இனி வெள்ளையர் நம்பக்கம் ஆனால் அடிபட்ட பாம்பான உத்தவ்லா சும்மா இருக்கமாட்டார், நிச்சயம் வந்து தன்னை நொறுக்குவார் என்ன செய்யலாம்?
தன் ரகசிய படையினை நவாபிடம் அனுப்பினான், அவர்கள் செய்தி சொன்னார்கள்
நவாபே மீர்ஜாபர் உங்கள் விசுவாசி, இப்பொழுதும் நாட்டை உங்களிடம் ஒப்படைக்க துடிக்கின்றார். அவர் ராஜதந்திரமாக வெளளையரிடம் நடிக்கின்றார், இப்பொழுது நீர் வரவேண்டும் வந்து அரியணையில் அமரவேண்டும் அதன் பின் கிளைவிற்கு இருக்கின்றது வேட்டு
நவாபும் அதை நம்பி சென்றான், மீர்ஜாபரை நம்பி சென்றான்
நம்பி வந்தவனை தன் வாளால் வெட்டி கொன்றான் மீர்ஜாபர்
அப்படி ஒரு மிக தந்திரமான மனமும் மூர்க்கமான குணமும் அவனிடம் இருந்திருக்கின்றது
கிளைவ் துடித்து போனான், நிச்சயம் சிராஜ் உத்தவ்லாவினை கொல்வதை அவன் விரும்பவில்லை. மீர் ஜாபரின் கீழ்தரமான புத்தி அவனுக்கு கடும் எச்சரிக்கையினை கொடுத்தது
என்றாவது ஒரு நாள் மீர்ஜாபர் தனக்கு எதிராக திரும்புவான் அதற்கு தயாராக இருக்கவேண்டும் என மகா எச்சரிக்கையாக இருந்தான் கிளைவ்
மீர்ஜாபரோ எந்த புள்ளியில் வெள்ளையரை விரட்டலாம் என திட்டமிட்டு கொண்டிருந்தான்
வீரத்தில் மட்டுமல்ல சாதுர்ய்யத்திலும் தேர்ந்தவனான கிளைவ் அதற்கான சந்தர்ப்பத்தை பார்த்துகொண்டிருந்தான்
அது டச்சுகாரர் வடிவில் வந்தது [ October 11, 2018 ]
(தொடரும்)
Image may contain: one or more people and text

கில்லாடி கிளைவ் 11

கில்லாடி கிளைவ் 11

பிளாசியில் ஒரு கரையில் இருந்தான் கிளைவ், 1 கிமி தொலைவில் இருந்தது நவாப் சிராஜ் உத்தவ்லாவின் படை
எண்ணிக்கையில் பெரும் மடங்கு நவாபின் படை. நால்வகை படைகளும் கூடவே பீரங்கி படைகளும், துணைக்கு பிரெஞ்சிக்காரரின் துப்பாக்கி படையும் இருந்தது
அக்கால பிரஞ்காரர்கள் இன்று பழனிசாமி அரசுக்கு பாஜக முட்டு கொடுப்பது போல கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரானவர்களுக்கு துணைக்கு வந்து கொண்டே இருந்தனர்
பிளாசி மாமமரத்தின் அடியில் தனியே அமர்ந்தான் கிளைவ், அவன் உள்ளம் பெரும் வருத்தத்திலும் குழப்பத்திலும் இருந்தது.
ஆம் மீர்ஜாபர் படையுடன் தன்னோடு வரவேண்டும் என்பதுதான் அவனின் திட்டம், ஆனால் ஜாபரோ வருவதாக இல்லை
இதோ யுத்தம் தொடங்கபோகின்றது, இதுவரை வராத ஜாபரா இனி வரப்போகின்றான்? எப்படி எல்லாம் இந்தியாவில் துரோகிகள் இருக்கின்றார்கள்
ஓர்மிசென்ட், மீர்ஜாபர் என அவன் நினைவில் வந்துகொண்டே இருந்தார்கள், அவனோ யுத்தத்தில் வெல்ல வாய்ப்பில்லை என்றே கருதினான், தற்கொலை என்ணம் கூட வந்து போயிற்று
சாவதே சவாம் களத்தில் சாவோம் என என எண்ணி விடிந்ததும் யுத்த களம் சென்றான்
இந்திய வரலாற்றின் மிக மிக முக்கியமான யுத்தம் அது
ஆம், இந்தியாவின் மிக முக்கியமான அரசான முகலாய அரசில் பஞ்சாப் டெல்லி வங்கம் ஆகியவை மகா முக்கியமான பகுதிகள்
வங்கத்தில் ஆதிக்கம் செலுத்துவோர் அப்படியே முன்னேற வாய்ப்பு பிரகாசமாக இருந்தது, இது பிரெஞ்ச்காரருக்கும் தெரியும்
இந்தியாவினை யார் ஆளபோகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் அந்த யுத்தம் தொடங்கியது, பிளாசி போர்
அது ஜூன் 23, 1757
60 ஆயிரம் வீரர்கள் இருந்த நவாபின் படையினை நேருக்கு நேர் எதிர்கொண்டான் கிளைவ், அவர்களை முன்னேற விட்டால் தொலைத்துவிடுவார்கள் என்பது அவனுக்கு தெரியும்
ஆம் ஆள் அம்பு, கோடாரி, கத்தி என வந்தால் நொறுக்கிவிடுவார்கள்
இதனால் தன் பீரங்கிபடையினை முதலில் தாக்க உத்தரவிட்டான், அதற்கு தக்க பலன் இருந்தது
கிளைவின் பீரங்கிதாக்குதலில் நவாபின் படைகள் சமநிலை இழந்தன, முக்கியமாக நவாபின் பீரங்கி படைகள் சரியாக இயங்கவில்லை
நவாபின் படை பெரும் படைதான், ஆனால் யுத்த தயாரிப்பு இல்லாமல் இருந்தது , இதை பயன்படுத்தினான் கிளைவ்
நிச்சயம் கொஞ்சம் தாக்குபிடித்திருந்தால் நவாப் கிளைவ் படைகளை நொறுக்கி இருக்கலாம், ஆனால் பின் வாங்க உத்தரவிட்டதுதான் பெரும் தவறாயிற்று
கிளைவின் பீரங்கிக்கு பதில் சொல்லமுடியாமல் நவாப் படைகள் பின் வாங்க, முன்னேறினான் கிளைவ்
இந்த மீர்ஜாபர் என்பவர் என்ன செய்தார் என்றால், மிக மிக சாமார்த்தியமான விஷயத்தை செய்தான்
என்ன செய்தான்?
கிளைவ் சொன்னபடி அவனோடு ஓடியிருந்தால் நவாப் விட்டிருக்கமாட்டான், ஒருவேளை கிளைவ் பக்கம் தோற்றுவிட்டால் தன் கதி அதோ கதி
அதே நேரம் கிளைவினையும் பகைக்க முடியாது, இருவருக்கும் பொதுவான காரியத்தை செய்ய வேண்டும்
உண்மையில் மிகபெரும் தந்திரமான காரியத்தை செய்தான் மீர்ஜாபர்
நவாபோடு யுத்தம் செய்ய சென்றவன், யுத்தம் நடக்கும்பொழுது தன் படையினை கலைத்துவிட்டு ஓடிவிட்டான்
மீர்ஜாபர் ஓடியபின் கிளைவிற்கு யுத்தம் எளிதாயிற்று, அசால்ட்டாக அடித்தான்
ஆனாலும் அவன் அடிமனதில் ஆச்சரியம் இருந்தது, எப்படிபட்ட மனிதர் இந்த மீர்ஜாபர், காலத்தை கணித்தே முடிவு எடுக்கும் மாபெரும் தந்திரசாலி இவரிடம் மிக கவனமாக இருக்க வேண்டும்
நவாப் படைகள் தோற்று ஓடின, அவர்களுக்கு 500 பேர் செத்தனர், கிளைவ் படைக்கு இழப்பு வெறும் 40 பேர்
கிளைவ் பிடித்த நிலபரப்பு கிரேட் பிரிட்டனை விட பெரியது, அது இங்கிலாந்தில் பெரும் சாதனையானது
பின்னாளில் சூரியன் அஸ்தமிக்கா பெரும் சாம்ராஜ்யமான பிரிட்டன் இப்படித்தான் தொடங்கியது, தொடங்கியவன் கிளைவ்
யுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி வங்கத்தை கைபற்றி அலறவிட்டிருந்தான் கிளைவ், மீர் ஜாபர் அவனை பாராட்டி கடிதம் எழுதினான்
(அதற்கு முன்பு மிர் ஜாபர் என்ன செய்தான் என்றால் அவன் நவாப் சிராஜ் உத்தவிலாவிடமே சென்றான், பெரும் படை திரட்டி ஆங்கிலேயரை வெல்வோம் என்றான், நவாபும் சரி என்றார்
ஆனான் நபாபே நீர் இங்கு இருக்க முடியாது, அயோத்தி சுல்தானிடமோ இல்லை பாட்னாவிற்கோ சென்றுவிடுங்கள் என சொல்லி அவரை அனுப்பி வைத்தான்
சிராஜ் உட்டவ்ளா பாட்னாவிற்கு தப்பினான், பெரும் படை திரட்டி கிளைவினை வெல்லும் வெறி இருந்தது)
கிளைவும் அவனை தன்னை வந்து சந்திக்குமாறு கட்டளையிட்டான், ஓடிவந்து நின்றான் மீர்ஜாபர்
தன் கோபம் எதையும் வெளிகாட்டிகொள்ளாமல் தகுந்த நேரத்தில் நீர் ஓடியதாலே வெற்றி சாத்தியமாயிற்று, இனி நீரே நவாப் என அறிவித்தான் கிளைவ்
மீர் ஜாபர் வங்கத்து நவாபானார், கிழக்கிந்திய கம்பெனிக்கு வருமானம் கொட்டியது
கிளைவின் கீர்த்தி பெருகியது, கிட்டதட்ட 30 வயதிற்குள் பிரிட்டனை விட பெரும் நாட்டை வளமான நாட்டை பிடித்து காட்டியிருந்தான் [ September 30, 2018 ]
Image may contain: 3 people

கில்லாடி கிளைவ் : 10

கில்லாடி கிளைவ் : 10

நவாபிற்கு எதிராக சதியாலோசனை முடிவில் மீர்ஜாபரை நவாப் ஆக்குவது என முடிவு செய்யபட்டது. அதாவது வெள்ளையர் நவாபோடு யுத்தம் தொடுப்பார்கள், நவாபின் படை தளபதியான மீர் ஜாபர் ஒரு பங்கு படையோடு கிளைவ் பக்கம் வந்துவிட வேண்டும், அதன் பின் நவாப் சிராஜ் உத்தவ்லாவினை விரட்டிவிட்டு மீர் ஜாபரை நவாப் ஆக்கலாம்
திட்டம் இறுதிசெய்யபட்டது, அப்பொழுதுதான் ஓர்மிசென்ட் தான் மிகபெரும் வியாபாரி என்பதை நிரூபித்தான்
அதாவது மீர்ஜாபர் நவாப், வெள்ளையருக்கு பெரும் கப்பம், ஆனால் தனக்கு என்ன என கணக்கிட்ட ஓர்மிசென்ட் தந்திரமான காரியத்தை செய்தான்
அதாவது இருவருக்கு தெரிந்தால் ரகசியம், மூன்றாவது ஒருவருக்கு தெரிந்தால் அம்பலம் என்பதை அமல்படுத்தினான்
தன் ஆட்களிலே ஒருவனை அரசு உளவாளியிடம் தகவலை போட்டு கொடுக்க சொன்னான் , விஷயம் நவாபினை எட்டியது, என்ன விஷயம்
மன்னர் மன்னா உங்களை ஒழித்துகட்ட நாட்டில் சதியாலோசனை நடக்கின்றது, ஆங்கிலேயரும் கலந்திருக்கலாம்
மிக நுட்பமான தந்திரம் ஓர்மிசென்டுடையது, அதாவது யார் சதியாலோசனையில் உண்டு என்பதை சொல்லாமல் மீர் ஜாபரை எல்லாம் மறைத்து வெள்ளையரை மட்டும் சிக்கலில் இட்டான்
நவாப் இதுபற்றி கொதித்தெழுந்த நேரம் சும்மா நலம் விசாரிக்க சென்றான் ஓர்மிசென்ட் , நவாப் இந்த சதியாலோசனை பற்றி ஓர்மிசென்டிடமே கேட்டார், அய்யா ஓர்மிசென்ட் இங்கு எனக்கெதிராக சதி நடக்கின்றதாம், உமக்கு ஏதும் தெரியுமா? இந்த வெள்ளையர் திட்டமாமே என உறுமினான்
ஓர்மிசென்டோ அட்டகாசமாக நடித்தான், அய்யா வெள்ளையர்கள் உங்களுக்கு அஞ்சி ஒடுங்கி கிடக்கின்றனர், நேற்று கூட நீங்கள் இல்லை என்றால் அவர்கள் வியாபாரம் இல்லை என கண்ணை கசக்கினார்கள் அவர்களாவது சதியாவது என சொல்லி நவாபினை நம்ப வைத்தான்
அங்கு நவாபினை நம்ப வைத்துவிட்டு இந்த சதி கூட்டத்தை கூட்டி புன்னகைத்தான்
அன்புடையீர் உங்கள் சதிதிட்டம் நவாபிற்கு தெரிந்துவிட்டது, ஆனால் அவரை நம்ப வைத்து உங்களை காப்பாற்றி இருக்கின்றேன், நான் நினைத்தால் நொடியில் நவாபிடம் உங்களை பற்றி சொல்லி நொடியில் கொல்லமுடியும், உங்கள் குடுமி, உயிர் எல்லாம் என் கையில், எப்படி வசதி?
மொத்த சதி ஆலோசனை கூட்டமும் திகைத்தது, கிளைவிற்கோ கடும் ஆத்திரம். இந்த மனிதன் இவ்வளவு கீழ்தரமானவனா என கடும் கோபம் கொண்டாலும் வெளிகாட்டவில்லை மாறாக பேரம் பேசினான்
ஓர்மிசென்ட் உம்மை நன்றாக அறிவேன், சுற்றி வளைத்து பேச வேண்டாம். உமது லாபம் என்ன அதை சொல்லும்
கிளைவ் நேரடியாக விஷயத்திற்கு வந்ததை புரிந்த ஓர்மிசென்ட் சொன்னான், நீங்களும் நவாபும் சண்டையிடுங்கள் சாவுங்கள் ஆனால் ரகசியம் காக்க எனக்கு 3 லட்சம் பவுண்டுகள் கொடுங்கள், இல்லாவிட்டால் அவ்வளவுதான்
கிளைவ் அதிர்ந்தான், அது மிகபெரும் பணம் அன்று கிட்டதட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவு பெரிது
கிளைவ் மெதுவாக சொன்னான், இப்பொழுது பணமில்லை ஆனால் மீர் ஜாபர் நவாப் ஆனவுடன் உமக்கு கொடுக்கபடும், இப்போது எங்களை காட்டிகொடுக்காமல் இரும்
ஆனால் ஜெகஜால கில்லாடியான ஓர்மிசென்ட் அப்படியானால் எனக்கு 3 லட்சம் பவுண்ட் கடன்பட்டதாகவும், இன்னும் சில நிபந்தனைகளுக்கு கட்டுபடுவதாகவும் எழுதி கொடுங்கள் என மிரட்டினான்
கிளைவ் யோசித்தான், நாங்கள் ஆலோசித்து நாளை எழுதி கொடுக்கின்றோம் என சொல்லி அப்போதைக்கு அவனை அனுப்பிவிட்டான்
இந்தியாவினை யார் ஆளபோகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் பத்திரம் அது, அதை எப்படி எழுதலாம் என யோசித்தான் கிளைவ்
ஓர்மிசென்டின் துரோகத்தை துரோகத்தால் வெல்ல துடித்தான்
அட்டகாசமாக திட்டமிட்டான், இரு ஆவணங்களை தயார் செய்தான், முதலாவது வெள்ளை காகிதத்தில் எழுதபட்டது அதுதான் உண்மையானது அதில் ஓர்மிசென்டின் நிபந்தனை எல்லாம் இல்லை
இரண்டாவது சிவப்பு காகிதத்தில் ஒன்றை தயாரித்தான் அது போலியானது, அதில் ஓர்மிசென்ட் மகிழுமாறு நிபந்தனைகளை எழுதியிருந்தான்
இதில் ஒரு சிக்கல் வந்தது, கமிட்டியின் மற்ற உறுப்பினர்களான மீர் ஜாபர், வாட்சன், மார்வாடி பார்ட்டி உண்மையான வெள்ளை ஆவணத்தில் மட்டும் கையெழுத்திட்டது.
கிளைவ் சிகப்பு நிற காகிதத்தில் ஒரு ஆவணத்தை ஓர்மிசென்டின் கோரிக்கையினை நிறைவேற்றுவது போல் எழுதி வாட்சன், மீர் ஜாபர் போன்றோரின் கையெழுத்தை அவனே போட்டுகொண்டான்
மறுநாள் சிகப்பு காகிதத்தை ஒர்மிசென்டிடம் ஒப்படைத்து தாங்கள் எல்லோரும் ஓர்மிசென்டிடம் சரணடைந்ததாக சொல்லிகொண்டான்
ஓர்மிசென்டிற்கு ஏகபட்ட மகிழ்ச்சி, தான் மிகபெரும் சாமார்த்தியசாலி என நினைத்து கொண்டார்
கிளைவோ அவர் இப்போது மகிழட்டும் நாளை சபையில் அதை அவர் கொண்டுவந்தால், வாட்சன் மீர் ஜாபர் கையெழுத்திட்ட வெள்ளை காகித ஆவனமும் வாசிக்கபடும் அதில் ஓர்மிசென்டுக்கு ஒன்றும் சாதகமாக இல்லை
ஆளுக்கொரு பத்திரம் வைத்திருந்தால் இரண்டும் உண்மை இல்லை என்றாகிவிடும் என மனதிற்குள் மகிழ்ந்தான் கிளைவ்
கிளைவோ இப்போதைக்கு சதிதிட்டம் மன்னருக்கு தெரியாமல் மறைக்கபட்டாலும் இந்த ஓர்மிசென்ட் என்றேனும் ஒருநாள் சொல்லிவிடுவான் அதற்குள் யுத்தம் தொடங்க முடிவெடுத்தான்
தன் திட்டத்தை இறுதி செய்தான், நவாபினை வம்புக்கு இழுத்து போர் தொடங்குவது, போரில் மீர் ஜாபர் வந்து தன்னோடு இணைந்துகொள்ள வேண்டும்
அதனால் நவாப் தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இன்னும் சில லட்சங்களை நஷ்ட ஈடாக தரவேண்டும் என வம்பிழுத்து கடிதம் எழுதினான் கிளைவ்
நவாப் சிராஜ் உட்வாலா துடித்தெழுந்தார், என்னடா இது? அன்றுதான் நலம் விசாரித்து கடிதம் எழுதினான் கிளைவ், இன்று மிரட்டுகின்றானா, ம்ம்ம் படை கிளம்பட்டும் என உத்தரவிட்டான்
40 ஆயிரம் வீரர்கள், 100 பீரங்கிகள் அவற்றை இழுக்க மாடுகள், யானைகள், ஆயிரம் பிரெஞ்ச் வீரர்கள், என பெரும் படை புறப்பட்டது
அந்த வீரர்களில் பெரும்பாலும் பஞ்சாப், ராஜபுத் வீரர்களும் இருந்தது, தென்னக வீரர்களை விட அவர்கள் உடல்வாகு வலுவாக இருந்ததாக கிளைவிற்கு தோன்றிற்று
கிளைவின் படை நவாபின் படையினை விட 20 மடங்கு சிறியது, கிளைவின் ஒரே நம்பிக்கை மீர் ஜாபர் தம்மிடம் ஓடிவருவான் என்பது
யுத்தம் தொடங்க இடமும் குறிக்கபட்டது, ஹூக்ளி நதிகரையின் பிளாசி தேர்வானது
ஆம், இந்தியாவில் ஆங்கிலேயரை வலுவாக காலூன்ற செய்த பிளாசிபோர் தொடங்க இருந்தது
ஆனால் யுத்தம் தொடங்க ஒரு நாள் இருந்தபொழுதும் மீர் ஜாபர் வந்து சேரவில்லை, ஆம் நவாப் முன் அஞ்சி நடுங்கி நின்றான் ஜாபர்
கிளைவிற்கோ கலக்கம் வந்தது, தன் வாழ்நாளில் முதன் முறையாக கலங்கி நின்றான் கிளைவ்
மீர் ஜாபர் வருவதாக தெரியவில்லை, ஆற்றை கடந்தால் பிளாசி, இச்சிறியபடை ஆற்றை கடந்து நவாபினை எப்படி வெற்றிபெறும் என யோசித்த கிளைவ் தன் படையினரிடமே ஆலோசனை கேட்டான்
போரை நிறுத்திவிட்டு ஓடலாம் என்றனர் படைகள், திகைத்தான் கிளைவ்
மீர்ஜாபரும் வராத நிலையில் தனியாக மாமரத்து அடியில் இருந்து சிந்திக்க தொடங்கினான், அவனின் உள்ளுணர்வு போரை தொடங்க சொன்னது
அந்த போர் தொடங்கியிராவிட்டால் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியே இல்லை
வருவது வரட்டும் என ஆற்றை கடந்தான் கிளைவ், நவாபினை விட்டு கிளைவ் பக்கம் செல்ல அஞ்சியபடி நின்றிருந்தான் மீர்ஜாபர்

(தொடரும்..)

Image may contain: 1 person, outdoor

கில்லாடி கிளைவ் : 09

கில்லாடி கிளைவ் : 09

கடும் கோபத்தில் வந்த கிளைவ் தன் ஆட்டத்தை தொடங்கினார், ஹூக்ளி கரையோர நகரங்களை எல்லாம் பிடித்தார்

இறுதியாக நவாப் பிடித்திருந்த வில்லியம் கோட்டையினை மீட்டார், நவாபின் படைகள் அலறி அடித்து தலைநகருக்கு திரும்பின‌

தரைப்போரில் கிளைவ் அடிக்க, கடற்பாதுகாப்பினை வாட்சன் செய்து கொண்டிருந்தார், நவாப் படைகள் இந்த வியூகத்தில் சிக்கின‌

நவாப் சிராஜ் உட் டவ்ளா அப்பொழுது முர்ஷிதாபாத் எனும் தன் தலைநகரத்தில் மல்லாக்க கிடந்தார், வில்லியம் கோட்டையினை வெள்ளையர் கைபற்றியசெய்தி தெரிந்ததும் அவனுக்கு வியர்த்தது

காரணம் ஆங்கிலேயர் ஒரு நாளும் இங்கு ராணுவ வெற்றி பெறுவார்கள் என அவன் நம்பவில்லை, அவன் என்ன மொத்த இந்தியாவும் அப்படித்தான் எண்ணி இருந்தது

நவாபின் படைகள் தோற்றது என்ற செய்தி கேட்டதும் அவனின் நரிமூளை வேலை செய்தது

எதற்காக இவர்களிடம் போராட வேண்டும்? வந்திருப்பது கிழக்கிந்திய கம்பெனி படை, அவர்கள் தலமையிடமே பேசிவிட்டால் என்ன?

கம்பெனியாருடன் சமாதானம் பேசினான் சிராஜ் உட் டவ்ளா, பெரும் நஷ்ட ஈடும் வில்லியம் கோட்டையினை செப்பனிட்டும் கொடுப்பதாக வாக்கு கொடுத்தான்

பெரும் பணம் கிடைத்ததால் கம்பெனியும் ஒப்புகொண்டது, கிளைவிற்கோ நவாபினை போட்டு அடிக்கும் வெறி இருந்தது ஆனால் மேலிட உத்தரவினை அவரால் மீற முடியவில்லை

இது அவமானம், சண்டைக்கென்று வந்துவிட்டு காசு கொடுத்தவுடன் திரும்ப சொன்னால் எப்படி என அவன் முணுமுணுத்தாலும் கேட்பார் யாருமில்லை

கட்சி தொண்டர்கள் மோதுவார்கள் ஆனால் தலமை கூட்டணி வைக்கும் அல்லவா? அப்பொழுது தொண்டன் துடிப்பான் அல்லவா? கிளைவின் மனநிலை அப்படி இருந்தது

ஆனால் அவன் மனதில் நவாபினை ஒரு நாள் டூப்ளேயினை அடித்தது போல் அடிக்கவேண்டும் என்ற வெறி இருந்தது

இதனிடையே ஐரோப்பாவில் மறுபடியும் பிரெஞ்ச்காரரும் பிரிட்டானியரும் மோத சென்னை கோட்டை தாக்கபடும் அபாயம் இருந்ததால் கிளைவ் சென்னைக்கு திருப்பி அனுப்பபட்டார்

கிளைவிற்கு இக்காலம் வரை சண்டை தெரியும், வியூகம் தெரியும், தைரியமாக அடிக்க தெரியும்

இந்த போர்களை எல்லாம் அவன் விளையாட்டாகவே நடத்தி வந்தான், பலமுறை சாக முயன்றவன் என்பதால் சாவினை கண்டு அவன் அஞ்சவில்லை

ஆனால் இந்திய யதார்த்தமுறை அவனுக்கு பல விஷயங்களை கற்று கொடுத்தன, குறிப்பாக இந்திய மனநிலை அவனுக்கு வினோதமாக பட்டது, குழப்பியது

அவன் இங்கிலாந்து மனநிலையில் வளர்ந்தவன், அங்கு அப்பொழுது பொய் சொல்லுதல், வாக்கு கொடுக்கு முன் யோசித்தல், கொடுத்த வாக்கை காப்பாற்றுதல், பொய் சாட்சி சொல்லுதல் எல்லாம் கவுரவ பிரச்சினைகள், சுருக்கமாக சொன்னால் பணத்திற்காக மனசாட்சியினை விற்பது அவர்களுக்கு அன்று அருவருப்பானது

அவை எல்லாம் அங்கு மிக மிக இழிவானவையாக இருந்தன‌

ஆனால் இந்திய யதார்த்தமோ அப்படியே தலைகீழாக இருந்தது

இங்கு பொய் சொன்னார்கள், பொய்சாட்சி சொன்னார்கள், பணத்திற்காக ராணுவ சிப்பாய்களகளே விலை போனார்கள், நவாபின் அருகில் இருப்பவரை கூட பணத்த்தால் வளைக்க முடிந்தது

அதிகாரத்திற்கும் பணத்திற்கும் விலைபோக கூடிய கூட்டமும் மக்களும் இங்கு இருந்தார்கள், தேசதுரோகம் அவர்களுக்கு தவறாய் படவே இல்லை, அதன் பெயர் சாமார்த்தியம் என சொல்லிகொண்டார்கள்

இந்த போக்கு கிளைவிற்கு பெரும் குழப்பத்தை கொடுத்தாலும் இறுதியில் தெளிந்தான்

இந்தியாவினை ஆள, இந்த பலகீனங்களை பயன்படுத்தினால் தவறே அல்ல. நாம் என்ன இயேசுநாதாரா இல்லை அவரின் சீடரா? இவர்களை நல்வழிபடுத்த?

நாம் வியாபாரி, வந்த இடத்தில் சண்டை என்றாலும் நமக்கு லாபமே முக்கியம். இந்த மக்களை திருத்தமுடியாது மாறாக நமக்கு ஏற்றவாறு பயன்படுத்தினால் கம்பெனிக்கு நல்லது

வீரனாக இருந்த கிளைவ் ராஜதந்திரியாக மெல்ல மாறினான்

இந்நாட்டை ஆள வீரம் மட்டும் போதாது, இந்நாட்டு கலாச்சாரமான லஞ்சம் இன்னபிறவிஷயங்களில் மூழ்கினால் தவறில்லை என அவனின் உள்மனம் சொல்லிற்று

வீணாக யுத்தம் நடத்தி உயிர்களை கொல்வதெல்லாம் விட எளிதாக லஞ்சம் கொடுத்து சாதிக்கலாம் என்ற திட்டங்கள் எல்லாம் மனதில் ஓடின‌

இப்படியான நிலையில் வங்கத்தில் அவன் அடிக்கடி சுற்றியபொழுது ஒரு வியாபாரி கிளைவ் முன்னால் நின்றான்

அவன் சாதாரண வியாபாரி அல்ல, இக்கால அம்பானி போல அன்று அங்கு மிகபெரும் சக்தி, நவாபிடம் நேருக்கு நேர் பேசும் சர்வ சக்தி படைத்தவன்

ஜெயா அரசில் வைகுண்டராஜன் போல, மோடி அரசின் அம்பானி போல மிக வலுவான வியாபாரி

அவன் பெயர் ஓர்மிசென்ட்

வில்லியம் கோட்டையினை நவாப் படைகள் தாக்கியபொழுது இவரின் வியாபாரமும் நஷ்டமடைந்தது, இப்பொழுது சமாதானம் ஆகி வெள்ளையர் வந்துவிட்டதால் அவர்கள் பக்கம் அனுகூலம் ஏதும் கிடைக்குமா என பார்க்க வந்திருந்தார்

ஓர்மிசென்டை அனுப்பிவிட்டு அவரை பற்றி விசாரித்தான் கிளைவ்

அய்யா அவர் எல்லா இடங்களிலும் இருப்பார்,நவாப்பிடம் இருப்பார், அந்த பக்கம் சந்திரநாகூரில் பிரெஞ்ச்காரரிடம் இருப்பார், நம்மிடமும் இருப்பார்

யாரிடம் சேர்ந்தால் அதிக லாபமோ அவர்களிடம் சேர்ந்து கொள்வார், சந்தர்ப்பவாதி, சந்தர்ப்பத்தை பயன்படுத்தும் சாமார்த்திய சாலி

கிளைவிற்கு கோபம் வந்தது, அவன் வியாபாரம் பேசவேண்டுமென்றால் கம்பெனியுடன் பேசலாம், யுத்தம் வேண்டுமென்றால் என்னிடம் பேசலாம்

ஆனால் என்னை பயன்படுத்திகொள்ள எண்ணுகின்றானா? இதென்ன கீழ்தரமான புத்தி. சரி அவன் வழியிலே அவனை அணுகுவோம் என மிக கவனமாக அவனை கையாள ஆரம்பித்தான் கிளைவ்

மாவீரன் கிளைவினை தந்திரமாக கையாள எண்ணி அவனை மாபெரும் தந்திரசாலி ஆக்கியதே இந்த ஓர்மிசென்ட் என்பவர்தான்

அதாவது நவாப் சிராஜ் உட் டவ்ளா என்பவர் தற்காலிகமாக பின்வாங்கினாலும் அயோத்தி சுல்தான், டெல்லி சுல்தானுடன் சேர்ந்து வில்லியம் கோட்டையினை நாசமாக்கி வெள்ளையரை அடியோடு சாய்க்கும் ஆபத்து இருந்தது

அதற்கான அறிகுறிகளும் தென்பட்டன‌

ஆனால் ஒர்ச்சிமின்டோ அஞ்சினான், இது தன் வியாபாரத்தை பெரிதும் பாதிக்கும் என அஞ்சினான்

அடிக்கடி நவாபினை பார்க்க செல்லும்பொழுது அவரின் ஒருமாதிரி போக்கும் குணமும் அவனை எரிச்சலடைய செய்தன‌

வங்கத்தில் இந்துக்கள், இஸ்லாமியர், வணிகர் என பலதரப்பும் நவாபின் மேல் வெறுப்பில் இருந்தன‌

இந்த இடத்தில் ஓர்மிசென்டுக்கு ஒரு ஐடியா உதித்தது, இந்த நவாபிற்கு பதிலாக பொம்மையாக ஒருவரை வைத்தால் என்ன?

கொஞ்சம் அதை பல்ஸ் பார்த்தவனுக்கு ஆச்சரியம் மிகுந்த பதில் கிடைத்தது

சிராஜ் உட்டவ்ளாவினை வீழ்த்த பலர் மனதார விரும்பியிருந்தனர், அவர்கள் யாரெல்லாம் என்றால் நவாபின் தளபதி மீர் ஜாபர், மந்திரி ராய்டுல்லப், பிரபல வியாபாரி ஜெகத்ஷேட் என சிலர் சிக்கினர்

பொல்லாட்சி வழங்கிய சிராஜ் உட்டல்ளா மீது அவனின் நெருங்கிய வட்டமே வெறுப்பில் இருந்தது, நவாபோ அதை அறியாமல் இருந்தான்

இந்த ஓர்ச்சிமென்ட், மீர் ஜாபர், ராய்டுல்லப், ஜெகத்ஷேட் அடங்கிய குழு அடிக்கடி விவாதித்தது

இவர்கள் இன்னொருவனை துணைக்கு அழைக்க முடிவு செய்தனர், ஆம் கிளைவினை இழுக்க முடிவு செய்தனர்

கிளைவிற்கோ இதுவரை வீர ஆட்டம் தெரியுமே தவிர, துரோகம் தெரியாது, ஆனால் இந்த மாதிரி கூட்டம் இருக்கும் பொழுது ஏன் போர்?

இப்பொழுது கிளைவினை பயன்படுத்தி நவாபினை வீழ்த்த வியாபாரி ஓர்ச்சிமென்ட் திட்டமிட்டான்

கிளைவோ இந்த கும்பலை பயன்படுத்தி வங்கத்து ஆட்சியினை பிடிக்க திட்டமிட்டான்

இரு தந்திரசாலிகளும் தங்கள் மனதிட்டம் வெளிதெரியாமல் ஒருவரை ஒருவர் பாவித்து கொள்ளும் திட்டத்தோடு பழகிகொண்டிருந்தனர்

இந்த கும்பல் விவாதிக்கும்பொழுதே கிளைவின் உள்ளிருந்த எச்சரிக்கை உணர்வு அலாரம் அடித்தது

நடப்பது நவாபிற்கு எதிரான சதி, ரகசியமாகத்தான் நடக்கின்றது ஆனால் தெரிந்துவிட்டால் மொத்தமும் காலி, கம்பெனியில் தன் இடமும் காலி

எப்படி நவாபிற்கு தெரிய வரும்? இந்த ஒர்ச்சிமென்ட் சொல்ல வாய்ப்பு இருக்கின்றது, நம்மிடம் அரசனை கவிழ்ப்போம் என வருகின்றவன், ஒருவேளை அரசனின் தூதனாக இருந்துவிட்டால், இல்லாவிட்டாலும் ஒர்ச்மின்ட் நல்லவன் அல்ல, அதனால் நாம் முந்திகொள்வது அவசியம்

இதனால் நவாபிற்கு ஒரு கடிதம் எழுதினான்,” அய்யா, அய்யன்மீர் நாங்கள் ஒரு நாளும் உங்களை எதிர்ப்பவர்கள் அல்ல, எங்கள் கோட்டைக்காகவே போரிட்டோம்

மற்றபடி உங்கள் நிம்மதியான ஆட்சியினை ஆதரிப்போம், அய்யா வாழ்ந்தால்தான் நாங்கள் வாழமுடியும், உங்கள் நீண்ட ஆயுளை விரும்பும் கிளைவ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனி”

கடிதம் கண்டவுடன் சிராஜ் உத்தவ்லா மகிழ்ந்தான், தன்னிடம் பிரிட்டானியர் சரணடைந்ததாக எண்ணி கொண்டு கவலை மறந்தான்

கிளைவோ மற்றுமோர் ரகசிய கடித்தத்தை இன்னொரு பெயரில் மீர் ஜாபருக்கு அனுப்பினான், எழுதியது கிளைவ் ஆனால் ரகசிய தூது என்பதால் செய்தி மட்டும் இருந்தது

நவாபை வீழ்த்தி உம்மை நவாப் ஆக்க கிழக்க்கிந்திய கம்பெனி உதவும் முடிவில் இருக்கின்றது, கம்பெனிக்கு விசுவாசமாக இருப்பீரா?

மீர் ஜாபர் துள்ளி எழுந்தான்

மிக அட்டகாசமாக காய்களை நகர்த்தினான் கிளைவ், எல்லாம் தனக்கு சாதகமாக இருப்பதாக நம்பினான் ஒர்ச்சிமின்ட்

மிக ராஜதந்திரமாக சிராஜ் உத்தவ்ல்லா, ஒர்ச்சிமென்ட்டை எல்லாம் நம்ப வைத்து, தளபதி மீர் ஜாபருக்கு கனவு மூட்டிகொண்டிருந்தான் கிளைவ்

இப்போது கிளைவின் துருப்பு சீட்டு மீர் ஜாபர், காரணம் அவனே நவாபின் தளபதி

(தொடரும்..)

Image may contain: one or more people and people standing