வடிவேலு

எங்கு வாழ்ந்தாலும், எப்படி வாழ்ந்தாலும், எல்லா தமிழர்களின் மனதிலும் ஒரு கிராமத்துக்காரன் வாழ்ந்துகொண்டே இருக்கின்றான்
கிராமத்து சாயல் உறங்கிகொண்டே இருக்கின்றது
அதனை சரியான கலைஞர்கள் திரையில் காட்டும்பொழுது தமிழன் அதனை கொண்டாடுகின்றான், தன்னில் ஒருவன் வந்துவிட்டது போல உணருகின்றான்
அந்த கிராமத்து மனம், உணர்விலும் ரத்ததிலும் கலந்துவிட்ட அந்த உணர்வு அப்படி ஒரு மனிதனை கண்டவுடன் தழுவி கொள்கின்றது
மக்கள் அபிமானம் பெற்ற பெரும் நகைச்சுவை கலைஞரான வடிவேலு அப்படித்தான் மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
அவர் நகைச்சுவைகாட்சிகள் நடிப்பதை விட்டு சில‌ ஆண்டுகள் ஆகியிருந்தாலும் கூட இன்றும் பல டிவி சேனல்கள் அவரால்தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றன‌
குறிப்பாக ஆதித்த்யா சேனல் மீது அவர் வழக்கே தொடுக்கும் அளவிற்கு அவரை நம்பியே நடந்துகொண்டிருக்கின்றது.
இன்றும் முகநூலில் அதிகமாக பதிவிடபடுவது அவர் பாணி நகைச்சுவையும் அவர் படமுமே…
எல்லா இடங்களிலும் இன்னும் அவர் காமெடிதான் ஓடுகின்றது, அவ்வளவு ஏன் டாஸ்மாக்கில் கூட அவர் ஸ்டைலில்தான் பாட்டில் உடைத்து குடித்து கொண்டிருக்கின்றார்கள்.
புகழின் உச்சத்தில் சில அடிகளை தவறாக எடுத்துவைத்ததின் விளைவு, அரசியலும் சினிமாவும் கலந்த தமிழகத்தில் அவர் தடுமாறிவிட்டார்.
கலைஞர் அரசியல் வித்தியாசமானது, மக்கள் அபிமானம் பெற்றோர் யாராயினும் அருகில் அமர்த்திகொள்வார். ஆனால் அவர்களால் கலைஞரின் இலக்கினை பூர்த்தி செய்யமுடியாமல் போகும்போது அவர்களை தூக்கி எறியவும் அவர் தயங்குவதில்லை
பின்னாளில் இதனை வடிவேலு புரிந்துகொள்ளும் போது நிலமை எல்லை மீறி சென்றிருந்தது. அதுவும் கலைஞர் விஜயகாந்த் வீட்டு வாசலில் தவமிருந்தபொழுது வடிவேலு நிலை சொல்லி தெரியவேண்டியதில்லை
சினிமா உலகில் அரசியல் முத்திரை விழுந்தபின் ஒரு மாதிரியான விளைவுகள் வரும். காரணம் சினிமாவால் அமைந்த தமிழக அரசு எப்பொழுதும் அதன் மீது ஒரு கண் வைத்துகொண்டே இருக்கும், இன்னொன்று அரசியலை மீறி இனி சினிமா ஜெயித்துவிடாதவாறு பலகண்ணிகள் வைத்தாகிற்று
இவ்வளவிற்கும் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவே ஒரு கூட்டத்தில் “வடிவேலு மக்கள் சொத்து, மக்களை அவர் மகிழ்விப்பதை எனது அரசு ஊக்குவிக்கும் ” என பகிரங்கமாக பச்சைகொடி காட்டியும் நிலமை சுமூகமாக இல்லை.
சினிமா உலகில் ஒதுங்கிய அல்லது ஒதுக்கபட்டபின் மறுபடி விட்ட இடத்தினை பிடிப்பது பெரும் சவால்
எம்ஜிஆர் ஒருவர் செய்தார், அதன் பின் சந்திரபாபு, சாவித்திரி போன்ற யாராலும் அச்சாதனையினை செய்யமுடியவில்லை
ஆனால் வடிவேலுவிற்கு வாய்ப்பு இருக்கின்றது
அவரும் கொஞ்சம் மாறவேண்டும், ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதெல்லாம் விட்டு கொஞ்சம் இறங்கி வந்தால் இன்னும் நல்லது, அப்படி மாறி இருக்கின்றார் என்கின்றார்கள், பார்க்க்கலாம்
காரணம் தமிழன் தான் இழந்த கிராமத்து எளிய, யதார்த்த, வெகுளியான பாத்திரத்தினை அவனிடம் தேடுகின்றான், அந்த நடையில், அந்த பேச்சுமொழியில், அந்த ஸ்டைலில் தன் குடும்பத்தில், உறவினர்களில் ஒருவனாக , சொந்த கிராமத்துகாரனாக அழகாக வந்து ஒட்டிகொள்கின்றார் அவர்.
வடிவேலுவினை தவிர யாருக்கும் அது சாத்தியமில்லை
மலேசியாவில் எத்தனையோ திரைப்படங்களை பார்த்திருக்கின்றேன், பொதுவாக மக்கள் அமைதியாக படம்பார்ப்பார்கள், அதில் பெரும்பான்மையான மலேசிய தமிழர்களுக்கு தமிழ் எழுததெரியாது எனும் அளவிற்கு நிலை.
ஸ்டைலாக எத்தனையோ நடிகர்கள் வருவார்கள், படித்த பாத்திரம், அதிரடி பாத்திரத்தில் வருவார்கள், யார் முகத்திலும் சலனம் இருக்காது, ஒரு சொடுக்கு போடும் ஓசையும் கேட்காது
ஆனால் “அப்புறம்…..” என வடிவேலு திரையில் வந்துவிட்டால் போதும், அரங்கம் அதிரும், தானாக அவரை கைதட்டி வரவேற்பார்கள்
எப்படி என்றால்? அதேதான் அந்த தமிழக கிராமத்து மனம் அவர்களில் இருக்கின்றது, அவரை கண்டதும் அது அடையாளம் கண்டுகொள்கின்றது, நம்மில் ஒருவன்
மலேசியா என்றெல்ல, தமிழர்கள் வாழும் நாடெல்லாம் அவருக்கு வரவேற்பு அப்படி,
காரணம் அவர்களின் பூர்வீகம் எளிய, வெகுளியான கிராமம். அவர்களின் தாத்தா பாட்டி, அல்லது அம்மா அப்பா எளிய தமிழக கிராமத்துகாரர்கள், மனதில் எங்கோ ஒளிந்திருக்கும் அந்த கிராம நகைச்சுவையே, மக்களின் அந்த ரசனையேதான் வடிவேலுவின் வெற்றிக்கு பெரும் காரணம்
அன்றே நடிகர்களுக்கு சொன்னார் கண்ணதாசன் “கலைஞர்கள் எந்த கட்சியிலும் சேராமல் இருப்பது நல்லது”
ரஜினி அதனைத்தான் இன்றுவரை செய்துவருகின்றார் அவர் பட்டண வாழ்க்கைக்காரர், நகரத்து அரசியல் சூது தெரிந்திருக்கின்றது
வடிவேலு கிராமத்து எளிய கலைஞர், அரசியல் சேற்றில் சிக்கி விட்டு இப்பொழுதுதான் தெளிந்து கொண்டிருக்கின்றார்.
எத்தனை கனத்த கவலையுள்ள மனமாக இருந்தாலும் அவரின் காட்சிகளை கண்டுவிட்டால் மனம் எளிதாகிறது, கிராமத்து உறவுகளுடன் கலந்துவிட்ட ஒரு திருப்தி கிடைத்துவிடுகின்றது
தமிழகத்தில் டிரென்ட் செட்டர் என்பார்கள், அதாவது தன் நடிப்பாலும் வசனத்தாலும் நிலைபெற்றுவிடுவது. காலம் காலமாக அந்த வசனங்களையும் நடிப்பினையும் மக்களை பல சூழலுக்கு அசை போட வைப்பது
அதில் வடிவேலு மாபெரும் இடத்தை பெற்றுவிட்டார் என்பதில் சந்தேகமில்லை. இன்றைய மீம்ஸ் கிரியேட்டர்கள் வரை அவர் இன்றி ஒன்றுமே இல்லை
வெறும் நகைச்சுவை நடிகர் என அவரை ஒதுக்க முடியாது, விசுவாசம், நன்றி, சமூக பொறுப்பு என பல முக்கியமான வேடங்களில் அற்புதமாக நடிப்பவர்
தேவர் மகன் அதற்கு மிக்க சான்று, இம்சை அரசன் புலிகேசியில் இரண்டாம் அரசனாக பழைய ராமசந்திரனை விட நன்றாகத்தான் அற்புதமாக நடித்திருந்தார்
எல்லா வேடங்களும் அவருக்கு அத்துபடி எனினும் நகைச்சுவை வேடம் நாகேஷை போல அசால்ட்டாக வந்தது
நிச்சயம் அற்புத நடிகர்களான‌ நாகேஷ், தங்கவேலு கலந்த கலவை யாரென கேட்டால் வடிவேலுவினை உடனே காட்டிவிடலாம்.
ஒன்று மகா நிச்சயம், அவருக்கு இன்னும் கடும் வரவேற்பு இருக்கின்றது, ஒரு ரவுண்ட் அல்ல பல இன்னிங்க்ஸ்கள் அவர் ஆட்டத்தை காண மக்கள் ரெடி
நிச்சயம் வருவார், அதே வடிவேலுவாக வருவார், காத்திருப்போம்.
ஆயிரம் இயக்குநர்கள், இசை அமைப்பாளர்கள் ஹீரோக்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் கிராமத்து கதைகளுக்கு ஒரே ஒரு பாரதிராஜாதான்
கிராமத்து இசைக்கு ஒரே ஒரு இளையராஜாதான், கிராமத்து பாடல்களுக்கு அந்த வைரமுத்து ஒருவர்தான்.
அப்படி அந்த எளிய வெகுளியான, ஜனரஞ்சகமான காமெடிகளுக்கு கிராமத்து பாமரனாக ஒரே ஒரு வடிவேலுதான்.
அவருக்கான ரசிகர் கூட்டம் அப்படியே இருக்கின்றது, அவருக்கான இடமும் அப்படியே காலியாகவே இருக்கின்றது அதனால் சொல்லலாம்
பழைய வடிவேலுவாக வாருங்கள் அய்யா, அப்படியே வரவேற்க தமிழகம் தயாராகவே உள்ளது பிறந்தநாள் வாழ்த்துக்களோடு கை குலுக்கி வாழ்த்து தெரிவித்து, அப்படியே இழுக்கின்றோம்
வாருங்கள் அய்யா, இந்த கிராமத்தை தொலைத்துவிட்டு காங்கீட் காட்டு சந்துபொந்துகளில், அக்கம் பக்கம் யாரென்றே தெரியாத வாழ்க்கையில் வாழ்பவர்களுக்காவது வந்து,
கிராமத்து எளிய மனிதனை திரையிலாவது காட்டுங்கள், அது உங்களை தவிர யாருக்கும் சாத்தியமில்லை.
அந்த மாபெரும் கலைஞனுக்கு இன்று பிறந்தநாள், அவருக்கு கலகலப்பான வாழ்த்துக்களை தெரிவித்து 
கொள்வோம்
ஆயிரம் பிறைகளை அவர் காணட்டும், ஆயிரம் ஆயிரம் மகிழ்ச்சிகளை அவர் தமிழருக்கு கொடுக்கட்டும் [ October 10, 2018 ]
Image may contain: 1 person, smiling