வாரிசு அரசியல்

வாரிசு அரசியல் இன்றைய காலத்தில் அல்ல எந்த காலத்திலுமே தவிர்க்க முடியாதது

சுருக்கமாக சொல்லிவிடலாம், அதிகாரம் எங்கெல்லாம் உண்டோ அதை காக்கும் ஆசையும் எல்லோருக்கும் உண்டு மன்னர்களுக்கு பின் அவர்கள் வாரிசுகள் வருவது அப்படித்தான்

ஜனநாயகம் என சொல்லிகொண்டாலும் கட்சி அரசியலும் அதிகாரம் தக்க வைக்கும் போட்டியே, மன்னர்காலம் போல ஆயுத வெட்டு குத்து இல்லை என்றாலும் மறைமுக வெட்டு குத்துக்கள் அதிகம்

வாரிசு அரசியல் வடகொரியாவில் இருந்து இலங்கையின் பண்டாரநாயகே, பாகிஸ்தானின் பூட்டோ குடும்பம் , உட்பட ஏராளமான நாடுகளில் அப்படியே இருக்கின்றது,

மானிட சுபாவம் இது

அது அமெரிக்கா வரை பரவித்தான் இருக்கின்றது, கென்னடி குடும்பம் முதல் புஷ் குடும்பம் வரை ஏராள சாட்சி உண்டு

இந்தியாவில் நேரு குடும்பம் அதை தொடங்கி வைத்தது அதும் 4ம் தலைமுறை வரை வருகின்றது

ஒரு விஷயத்தை கவனித்தால் புரியும், நேரு குடும்பத்தினை விட்டாலும் காங்கிரஸ் சரியும், சீத்தாராம் கேசரி காலத்தில் அதுதான் நடந்தது பின்பு வலிய சோனியாவிடம் சரணடைந்தார்கள்

காங்கிரஸ் என்றல்ல பல கட்சி நிலை அப்படியே

பாஜக விதிவிலக்கு என்பார்கள், அது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முகமூடி, சீனா போன்ற கம்யூனிச நாடுகளில் பொலிட் பீரோ யாரை சொல்லுமோ அப்படி ஆர்.எஸ்.எஸ் சொல்பவரே அங்கு தலைவர்

அது ஒருவகை சர்வாதிகாரம், சீன கம்யூனிஸ்டுகளுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமில்லை

மற்றபடி எந்த கட்சி எடுத்தாலும் வாரிசு அரசியலின்றி அக்கட்சி சாத்தியமில்லை, ஏன் சந்திரபாபு நாயுடுவே வாரிசு அரசியலில் வந்தவர்தான், அங்கு என்ன குறைந்தது?

ஏன் வருகின்றது வாரிசு அரசியல்?

அரசியலில் நேரடி எதிர்களை விட கூட இருந்து முதுகில் குத்தும் எதிரிகளே அதிகம், ஜூலியஸ் சீசர் காலத்திலே அதுதான் இருந்தது

யாரையும் நம்ப முடியாதது அரசியல், திமுகவினையே எடுங்கள் கலைஞர் மகனை வளர்த்தார் மருமகனை வளர்த்தார் என்பார்கள் ஆனால் ஏன் வளர்த்தார்?

திமுகவினை சம்பத் உடைத்தார் அது வலியில்லை ஆனால் எந்த நடிகனை கலைஞர் கொண்டாடினாரோ அந்த ராமசந்திரனால் கட்சி உடைந்தது

பின்பு வைகோ உடைத்தார், எத்தனையோ பேரினை கலைஞர் ஏற்றிவிட்டு முதுகில் வாங்கினார், பின் யாரை அவர் மனம் நம்பும்?

தன் வீட்டு வாரிசென்றால் பாதுகாப்பு எனும் அந்த அரச தந்திர தொடர்ச்சியே அன்றி அவர் செய்தது வேறல்ல‌

எல்லா கட்சியிலும் நிலை அதுதான்

வாரிசுகள் கட்சியின் ஒரே முகமாக அறிபடுவது முதல் சிக்கலற்ற அடுத்த தலைவராக வருவது வரை ஏக அனுகூலங்கள் உண்டு

இதெல்லாம் பல்லாயிரமாண்டு மானிட குணத்தின் தொடர்ச்சியே

ஆனால் பொல்லாத வாரிசுகளை மக்கள் தூக்கி எறியவும் தயங்கவில்லை என்பது மக்களாட்சியின் மாபெரும் வசதி

அண்ணாவுக்கும், ராமசந்திரனுக்கும், ஜெயாவுக்கும் நேரடி வாரிசு இல்லை. இருந்திருந்தால் நாடு தாங்கியிருக்காது

மன்னராட்சியிலிருந்து மக்களாட்சிக்கு மாறினோமே தவிர மனதால் அதே சுயநலம், வஞ்சகம், அதிகார் போட்டி, அரசியல் கொலை என எல்லா குணங்களும் எல்லோருகுள்ளும் இருக்கின்றது

அதிலிருந்து தப்ப அந்நாளைய மன்னர்கள் வாரிசுகளை சொந்தங்களை நம்பியது போலவே இப்பொழுதும் நம்புகின்றார்கள், வேறு தெரிவு இல்லை. நம்ப கூடாதவரை நம்பினால் நொடியில் முதுகில் குத்துவார்கள்

அதிகார அரசியல் ஆசை எனும் போதை என்பது அப்படியானது

அது மாறாது, மனித சுபாவம் அப்படி

இங்கு காமராஜர், அண்ணா, ராம்சந்திரன், ஜெயா என யாருக்கும் நேரடி வாரிசு இல்லை

ஆனால் கலைஞருக்கு இருந்தது, அதனால் அவரை வாரிசு அரசியல் செய்தார் என சொல்கின்றார்களே தவிர வேறொன்றுமில்லை

இதில் கலைஞரின் தவறு ஏதுமில்லை, மொத்த உலகினையும் உற்று பாருங்கள், ஏன் இங்குள்ள மாநிலங்களையே பாருங்கள் அங்கே நடந்ததுதான் இங்கும் நடந்தது, இப்படித்தான் நடக்கவும் வேண்டும் அதுதான் கட்சிக்கும் நல்லது

அதனால் கட்சி ஆட்சி என ஒன்று இவ்வுலகில் இருக்கும் வரைக்கும் வாரிசு அரசியல் என ஒன்று இருந்தே தீரும், அது மாறவே மாறாது.