கில்லாடி கிளைவ் : 10

கில்லாடி கிளைவ் : 10

நவாபிற்கு எதிராக சதியாலோசனை முடிவில் மீர்ஜாபரை நவாப் ஆக்குவது என முடிவு செய்யபட்டது. அதாவது வெள்ளையர் நவாபோடு யுத்தம் தொடுப்பார்கள், நவாபின் படை தளபதியான மீர் ஜாபர் ஒரு பங்கு படையோடு கிளைவ் பக்கம் வந்துவிட வேண்டும், அதன் பின் நவாப் சிராஜ் உத்தவ்லாவினை விரட்டிவிட்டு மீர் ஜாபரை நவாப் ஆக்கலாம்
திட்டம் இறுதிசெய்யபட்டது, அப்பொழுதுதான் ஓர்மிசென்ட் தான் மிகபெரும் வியாபாரி என்பதை நிரூபித்தான்
அதாவது மீர்ஜாபர் நவாப், வெள்ளையருக்கு பெரும் கப்பம், ஆனால் தனக்கு என்ன என கணக்கிட்ட ஓர்மிசென்ட் தந்திரமான காரியத்தை செய்தான்
அதாவது இருவருக்கு தெரிந்தால் ரகசியம், மூன்றாவது ஒருவருக்கு தெரிந்தால் அம்பலம் என்பதை அமல்படுத்தினான்
தன் ஆட்களிலே ஒருவனை அரசு உளவாளியிடம் தகவலை போட்டு கொடுக்க சொன்னான் , விஷயம் நவாபினை எட்டியது, என்ன விஷயம்
மன்னர் மன்னா உங்களை ஒழித்துகட்ட நாட்டில் சதியாலோசனை நடக்கின்றது, ஆங்கிலேயரும் கலந்திருக்கலாம்
மிக நுட்பமான தந்திரம் ஓர்மிசென்டுடையது, அதாவது யார் சதியாலோசனையில் உண்டு என்பதை சொல்லாமல் மீர் ஜாபரை எல்லாம் மறைத்து வெள்ளையரை மட்டும் சிக்கலில் இட்டான்
நவாப் இதுபற்றி கொதித்தெழுந்த நேரம் சும்மா நலம் விசாரிக்க சென்றான் ஓர்மிசென்ட் , நவாப் இந்த சதியாலோசனை பற்றி ஓர்மிசென்டிடமே கேட்டார், அய்யா ஓர்மிசென்ட் இங்கு எனக்கெதிராக சதி நடக்கின்றதாம், உமக்கு ஏதும் தெரியுமா? இந்த வெள்ளையர் திட்டமாமே என உறுமினான்
ஓர்மிசென்டோ அட்டகாசமாக நடித்தான், அய்யா வெள்ளையர்கள் உங்களுக்கு அஞ்சி ஒடுங்கி கிடக்கின்றனர், நேற்று கூட நீங்கள் இல்லை என்றால் அவர்கள் வியாபாரம் இல்லை என கண்ணை கசக்கினார்கள் அவர்களாவது சதியாவது என சொல்லி நவாபினை நம்ப வைத்தான்
அங்கு நவாபினை நம்ப வைத்துவிட்டு இந்த சதி கூட்டத்தை கூட்டி புன்னகைத்தான்
அன்புடையீர் உங்கள் சதிதிட்டம் நவாபிற்கு தெரிந்துவிட்டது, ஆனால் அவரை நம்ப வைத்து உங்களை காப்பாற்றி இருக்கின்றேன், நான் நினைத்தால் நொடியில் நவாபிடம் உங்களை பற்றி சொல்லி நொடியில் கொல்லமுடியும், உங்கள் குடுமி, உயிர் எல்லாம் என் கையில், எப்படி வசதி?
மொத்த சதி ஆலோசனை கூட்டமும் திகைத்தது, கிளைவிற்கோ கடும் ஆத்திரம். இந்த மனிதன் இவ்வளவு கீழ்தரமானவனா என கடும் கோபம் கொண்டாலும் வெளிகாட்டவில்லை மாறாக பேரம் பேசினான்
ஓர்மிசென்ட் உம்மை நன்றாக அறிவேன், சுற்றி வளைத்து பேச வேண்டாம். உமது லாபம் என்ன அதை சொல்லும்
கிளைவ் நேரடியாக விஷயத்திற்கு வந்ததை புரிந்த ஓர்மிசென்ட் சொன்னான், நீங்களும் நவாபும் சண்டையிடுங்கள் சாவுங்கள் ஆனால் ரகசியம் காக்க எனக்கு 3 லட்சம் பவுண்டுகள் கொடுங்கள், இல்லாவிட்டால் அவ்வளவுதான்
கிளைவ் அதிர்ந்தான், அது மிகபெரும் பணம் அன்று கிட்டதட்ட 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி அளவு பெரிது
கிளைவ் மெதுவாக சொன்னான், இப்பொழுது பணமில்லை ஆனால் மீர் ஜாபர் நவாப் ஆனவுடன் உமக்கு கொடுக்கபடும், இப்போது எங்களை காட்டிகொடுக்காமல் இரும்
ஆனால் ஜெகஜால கில்லாடியான ஓர்மிசென்ட் அப்படியானால் எனக்கு 3 லட்சம் பவுண்ட் கடன்பட்டதாகவும், இன்னும் சில நிபந்தனைகளுக்கு கட்டுபடுவதாகவும் எழுதி கொடுங்கள் என மிரட்டினான்
கிளைவ் யோசித்தான், நாங்கள் ஆலோசித்து நாளை எழுதி கொடுக்கின்றோம் என சொல்லி அப்போதைக்கு அவனை அனுப்பிவிட்டான்
இந்தியாவினை யார் ஆளபோகின்றார்கள் என்பதை முடிவு செய்யும் பத்திரம் அது, அதை எப்படி எழுதலாம் என யோசித்தான் கிளைவ்
ஓர்மிசென்டின் துரோகத்தை துரோகத்தால் வெல்ல துடித்தான்
அட்டகாசமாக திட்டமிட்டான், இரு ஆவணங்களை தயார் செய்தான், முதலாவது வெள்ளை காகிதத்தில் எழுதபட்டது அதுதான் உண்மையானது அதில் ஓர்மிசென்டின் நிபந்தனை எல்லாம் இல்லை
இரண்டாவது சிவப்பு காகிதத்தில் ஒன்றை தயாரித்தான் அது போலியானது, அதில் ஓர்மிசென்ட் மகிழுமாறு நிபந்தனைகளை எழுதியிருந்தான்
இதில் ஒரு சிக்கல் வந்தது, கமிட்டியின் மற்ற உறுப்பினர்களான மீர் ஜாபர், வாட்சன், மார்வாடி பார்ட்டி உண்மையான வெள்ளை ஆவணத்தில் மட்டும் கையெழுத்திட்டது.
கிளைவ் சிகப்பு நிற காகிதத்தில் ஒரு ஆவணத்தை ஓர்மிசென்டின் கோரிக்கையினை நிறைவேற்றுவது போல் எழுதி வாட்சன், மீர் ஜாபர் போன்றோரின் கையெழுத்தை அவனே போட்டுகொண்டான்
மறுநாள் சிகப்பு காகிதத்தை ஒர்மிசென்டிடம் ஒப்படைத்து தாங்கள் எல்லோரும் ஓர்மிசென்டிடம் சரணடைந்ததாக சொல்லிகொண்டான்
ஓர்மிசென்டிற்கு ஏகபட்ட மகிழ்ச்சி, தான் மிகபெரும் சாமார்த்தியசாலி என நினைத்து கொண்டார்
கிளைவோ அவர் இப்போது மகிழட்டும் நாளை சபையில் அதை அவர் கொண்டுவந்தால், வாட்சன் மீர் ஜாபர் கையெழுத்திட்ட வெள்ளை காகித ஆவனமும் வாசிக்கபடும் அதில் ஓர்மிசென்டுக்கு ஒன்றும் சாதகமாக இல்லை
ஆளுக்கொரு பத்திரம் வைத்திருந்தால் இரண்டும் உண்மை இல்லை என்றாகிவிடும் என மனதிற்குள் மகிழ்ந்தான் கிளைவ்
கிளைவோ இப்போதைக்கு சதிதிட்டம் மன்னருக்கு தெரியாமல் மறைக்கபட்டாலும் இந்த ஓர்மிசென்ட் என்றேனும் ஒருநாள் சொல்லிவிடுவான் அதற்குள் யுத்தம் தொடங்க முடிவெடுத்தான்
தன் திட்டத்தை இறுதி செய்தான், நவாபினை வம்புக்கு இழுத்து போர் தொடங்குவது, போரில் மீர் ஜாபர் வந்து தன்னோடு இணைந்துகொள்ள வேண்டும்
அதனால் நவாப் தங்களுக்கு எதிராக செயல்படுவதாகவும், இன்னும் சில லட்சங்களை நஷ்ட ஈடாக தரவேண்டும் என வம்பிழுத்து கடிதம் எழுதினான் கிளைவ்
நவாப் சிராஜ் உட்வாலா துடித்தெழுந்தார், என்னடா இது? அன்றுதான் நலம் விசாரித்து கடிதம் எழுதினான் கிளைவ், இன்று மிரட்டுகின்றானா, ம்ம்ம் படை கிளம்பட்டும் என உத்தரவிட்டான்
40 ஆயிரம் வீரர்கள், 100 பீரங்கிகள் அவற்றை இழுக்க மாடுகள், யானைகள், ஆயிரம் பிரெஞ்ச் வீரர்கள், என பெரும் படை புறப்பட்டது
அந்த வீரர்களில் பெரும்பாலும் பஞ்சாப், ராஜபுத் வீரர்களும் இருந்தது, தென்னக வீரர்களை விட அவர்கள் உடல்வாகு வலுவாக இருந்ததாக கிளைவிற்கு தோன்றிற்று
கிளைவின் படை நவாபின் படையினை விட 20 மடங்கு சிறியது, கிளைவின் ஒரே நம்பிக்கை மீர் ஜாபர் தம்மிடம் ஓடிவருவான் என்பது
யுத்தம் தொடங்க இடமும் குறிக்கபட்டது, ஹூக்ளி நதிகரையின் பிளாசி தேர்வானது
ஆம், இந்தியாவில் ஆங்கிலேயரை வலுவாக காலூன்ற செய்த பிளாசிபோர் தொடங்க இருந்தது
ஆனால் யுத்தம் தொடங்க ஒரு நாள் இருந்தபொழுதும் மீர் ஜாபர் வந்து சேரவில்லை, ஆம் நவாப் முன் அஞ்சி நடுங்கி நின்றான் ஜாபர்
கிளைவிற்கோ கலக்கம் வந்தது, தன் வாழ்நாளில் முதன் முறையாக கலங்கி நின்றான் கிளைவ்
மீர் ஜாபர் வருவதாக தெரியவில்லை, ஆற்றை கடந்தால் பிளாசி, இச்சிறியபடை ஆற்றை கடந்து நவாபினை எப்படி வெற்றிபெறும் என யோசித்த கிளைவ் தன் படையினரிடமே ஆலோசனை கேட்டான்
போரை நிறுத்திவிட்டு ஓடலாம் என்றனர் படைகள், திகைத்தான் கிளைவ்
மீர்ஜாபரும் வராத நிலையில் தனியாக மாமரத்து அடியில் இருந்து சிந்திக்க தொடங்கினான், அவனின் உள்ளுணர்வு போரை தொடங்க சொன்னது
அந்த போர் தொடங்கியிராவிட்டால் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியே இல்லை
வருவது வரட்டும் என ஆற்றை கடந்தான் கிளைவ், நவாபினை விட்டு கிளைவ் பக்கம் செல்ல அஞ்சியபடி நின்றிருந்தான் மீர்ஜாபர்

(தொடரும்..)

Image may contain: 1 person, outdoor

எழுத்தாளர் சவுபா என்பவருக்கு மாபெரும் துயர முடிவு ஏற்பட்டிருகின்றது

எழுத்தாளர் சவுபா என்பவருக்கு மாபெரும் துயர முடிவு ஏற்பட்டிருகின்றது

குடிகார மகனை கொன்ற வழக்கில் அவர் சிறையில் இருந்தவர், செத்தும் விட்டார். பெரும் சோகம் இது

நிச்சயம் நல்ல எழுத்தாளன் என்பவன் இளகிய மனமுள்ளவன், அந்த மனமே அவனை மிக சிறந்த படைப்புகளை உருவாக்க வைக்கும், வரலாறு கண்ட உண்மை இது

ஆனால் அந்த மனம் பெரும் நெருக்கடிகளை சிந்தனையில் வாழ்வில் சந்திக்கும், சாதரண நெருக்கடிகளை விட எழுத்தாளன் சந்திக்கும் நெருக்கடி மிக அதிகம்

பணம், அந்தஸ்து என ஓடும் உலகில் அவனால் ஒட்டமுடியாது

எல்லா கலைஞனுக்கும் ஒரு வடிகால் தேவையாயிருக்கின்றது, அதுவே அவனை சகல துக்கங்களிலிருந்தும் மீண்டெழ செய்யும்

பாரதியும், ஜெயகாந்தனும் கஞ்சாவில் ஆறுதல் அடைந்தார்கள்

நா.முத்துகுமார் போன்றவர்கள் மதுவிலே சோகத்தை மறந்தார்கள்

கண்ணதாசன் மதுவிலும் மாதுவிலும் தேடிவிட்டு பின் பகவானின் பாதங்களில் விழுந்தார், உடல் ஒத்துழைக்கவில்லை

(கலைஞர் போன்றவர்கள் விதிவிலக்கு பல களங்களில் சுற்றிவந்ததால் தனக்கான ஆறுதலை அவரே தேடிகொண்டார்..)

தமிழுலகின் மிகபெரிய சாபக்கேடு நல்ல திறமையானவர்களை சினிமாவும் அரசியலும் வீணடித்துவிடும்

ஏராளமான சிறந்த எழுத்தாளர் சினிமா கனவிலும், வலம்புரி ஜாண் போன்றவர்கள் அரசியலிலும் திறமையினை தொலைத்தனர்

எந்த எழுத்தாளனுக்கும் ஒரு நம்பிக்கை , ஒரு ஆறுதல் கட்டாயம் தேவை

அது பக்தியோ, குடும்பமோ இல்லை ஏதோ ஒரு ஆறுதலோ அரவணைப்போ கட்டாயம் தேவை

உமறுபுலவருக்கு சீதக்காதியும், கம்பனுக்கு சடையப்ப வள்ளலும் அப்படி இருந்தார்கள்

அப்படி அமையாத கலைஞன் துரதிருஷ்டம் பிடித்தவன்

சௌபா என்பவருக்கும் அந்த துரதிருஷ்டம் வாய்த்துவிட்டது சோகம், ஆழ்ந்த அஞ்சலிகண்ணீர் வடிப்பதை விட நாம் என்ன செய்யமுடியும்?

 
 

படிப்பு மட்டுமே வாழ்க்கை என்பது அல்ல‌

அந்த பிரதீபா நன்றாகத்தான் படித்திருக்கின்றாள், ஆனால் நீட் தேர்வு தோல்வி சோகத்தில் தற்கொலை செய்திருக்கின்றாள்

மிகபெரும் சோகம் எனினும் நிச்சயம் அப்பெண் அப்படி செய்திருக்க கூடாது

ஆமை தன் முட்டையின் வாய் பகுதியினை கடலை நோக்கியே திருப்பி வைத்திருக்குமாம், காரணம் முட்டையினை விட்டு வெளிவரும் குஞ்சுகள் நேரே கடலுக்கு செல்ல ஏற்பாடாம், இல்லை என்றால் அக்குஞ்சுகள் திசைமாறி செல்லுமாம்

அப்படி பத்தாம் வகுப்பிலிருந்தே டாக்டர் கனவு கண்ட அந்த மாணவி, பின் பல நெருக்கடிகளால் திசைமாற , தன் வாழ்வு வீணோ என நினைத்து இறந்திருக்கின்றாள்

படிப்பும் அது கொடுக்கும் வேலையுமே தங்கள் வாழ்வுகடன் என எண்ண வைக்கும் கொடும் சமூக நம்பிக்கையின் தாக்கம் இது

ஒவ்வொருவர் வாழ்விற்கும் ஒரு நோக்கம் இருக்கின்றது, அது ஏன் என நமக்கு தெரியாது, ஆண்டவனையன்றி யாருக்கும் தெரியாது

அது திரும்பும் இடத்தில் நாமும் திரும்ப வேண்டும், அது வளையும் இடத்தில் நாமும் வளைய வேண்டும்

அதை மீறிய செயல்கள்யாவும் பலனை தரா

ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு காரணமிருக்கும், வாழ்வு தரும் ஒவ்வொரு தோல்வியும் நம்மை திசைமாற்றி நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லும்

இதனைத்தான் விதிப்படி வாழ்க்கை என்றார்கள், ஆற்று நீர் இலை போல வாழ்வு என்றார்கள்

படிப்பு மட்டுமே வாழ்க்கை என்பது அல்ல‌

ஒழுங்காக படித்திருந்தால் கருணாநிதி என்பவர் இன்று எங்கோ தமிழாசிரியராய் இருந்திருப்பார், காங்கிரஸில் பதவி கிடைத்திருந்தால் பெரியார் புரட்சியுமில்லை வெங்காயமுமில்லை

அந்த கோபாலமேனன் இலங்கையில் சாகாவிட்டால் அந்த சனியன் ஏன் நடிக்க வரபோகின்றது? தமிழகம் சீரழிய போகின்றது

அதுவும் 45 வயதுவரை வாய்ப்பே இல்லாமல் மனம் வெறுத்து,அதன் பின் வசூல் சக்கரவர்த்தியாகி அது பின்னாளில் முதல்வரே ஆனது

5ம் வகுப்பு தாண்டி இருந்தால் அவர் அலுவலக பியூணாக இருந்திருப்பார், படிக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருந்தாலும், படித்திருந்தால் அந்த மாபெரும் உயரத்தை எட்டியிருக்க முடியுமா? என்ற கேள்வியும் அவருள்ளே இருந்தது

சாத்தப்ப செட்டியார் சம்பாதித்தை அவர் பாதுகாத்திருந்தால் நான் ஏன் கவிஞராக போகின்றேன் என்பார் கண்ணதாசன்

தென்னாப்ரிக்காவில் காந்தியினை வெள்ளையன் மிதித்து எறியாவிட்டால் இந்தியாவின் எதிர்காலம் குழப்பமாகவே இருந்திருக்கும்

ஏராளமான உதாரணங்களை உலகில் சொல்லமுடியும்

அலெக்ஸாண்டர் முதல் ஹிட்லர் வரை தன் திட்டமெல்லாம் வெற்றிபெற்றது என சொல்லும் ஒருவனை காட்டுங்கள், ஒருவனும் அப்படி இல்லை

அட ஆனானபட்ட அவதாரங்களான கண்ணன், ராமன், இயேசு கிறிஸ்துவரை தாங்கள் நினைத்ததை முழுக்க சாதிக்கமுடியாமல் கிடைத்ததை ஏற்றுகொண்ட தருணங்கள் உண்டு

அவதாரங்களே தப்பமுடியாது எனும்பொழுது சாதாரண மனிதரான நாம் ஏங்கி தவிப்பது எப்படி சாத்தியம்?

இதனால்தான் நடப்பதெல்லாம் நன்மைக்காக என்பார்கள், ஒவ்வொரு தோல்வியிலும் நன்மை உண்டு என்பார்கள்

இப்படிபட்ட மனநிலையினை பதின்மவயது குழந்தைகளுக்கு சொல்லிகொடுப்பார் யாருமில்லை

புத்தங்களை புரட்டிய அளவு, அனுபவ மொழிகளையோ இல்லை தத்துவ நூல்களையோ அவள் புரட்டியிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது

எல்லோரும் எழுதியது போல அவளும் எழுதினாள், தோற்றுவிட்டாள். அதற்காக இங்கு எல்லாம் மோசடி என்பது ஏற்புடயதாகாது

அப்படியானால் தோற்ற 61% மாணவர் நிலை என்ன?

ஒன்றுமட்டும் புரிகின்றது

மன வளம் என்பது இப்பொழுது உள்ள குழந்தைகளிடம் வளர்க்கபடுவதில்லை, பந்தயத்திற்கு தயார் படுத்தும் குதிரை போல அவர்கள் வளர்க்கபடுகின்றனர்

குதிரைக்கு வெற்றி தெரியுமா? தோல்வி தெரியுமா? பந்தயம் முடிந்ததும் புல் மேய சென்றுவிடும்

ஆனால் மானிட மனம் அப்படியா? அதுவும் பிஞ்சுமனம் தோல்வியினை தாங்குமா?

சிறுவயதில் இருந்தே பெரும் எதிர்ப்பார்ப்புகளை அவர்கள் மேல் சுமத்திவிடுகின்றோம், அந்த சுமை அவர்களை மனதாலும் சில நேரம் உடலாலும் சாகடிக்கின்றன‌

தேர்வுகள், பாட திட்டங்களை விட முக்கியமானது மன வள பயிற்சி, மன ஆற்றுபடுத்தும் பயிற்சி

அதுவே இன்றுள்ள மாணவர்களுக்கு மிகுந்த தேவை

கல்வி என்பது வேலைக்கான விஷயம் என்பது மாற்றபட்டு உலகில் வாழ தேவையான அறிவு என்பதை உணரவைக்க வேண்டும்

பள்ளி தேர்வு என்பது வெறும் மைல் கல், சிறப்பு தேர்வுகள் என்பது வாயில் சீட்டு.

சீட்டு கிடைத்தால் நுழையலாம் இல்லை அடுத்த ஆயிரம் வாசல்களில் ஏதாவது ஒன்றில் நுழைந்தால் வாழ்ந்துவிட்டு போகலாம்

படிக்க சொல்லிகொடுப்பது ஒரு பக்கம் இருந்தாலும், உழைக்க கற்றுகொடுக்க வேண்டும், சிந்திக்க கற்றுகொடுக்க வேண்டும்

மேல்நாட்டு இளைய சமுதாயம் உழைப்பு, சிந்தனை இந்த இரண்டிலுமே மேல் எழும்பிகொண்டிருக்கின்றது

இவ்வாறான சாவுகள் இனி தடுக்கபட வேண்டும். அந்த அபலை பெண்ணுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

 

குளிர்பெட்டியினை புறக்கணிப்போம், நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்

இந்த விஞ்ஞானம் எவ்வளவோ நல்ல கருவிகளை மானிடர்க்கு கொடுத்தது, ஆனால் மானுட நாக்கிற்கு அது பெரும் துரோகத்தை இழைத்துவிட்டது

இந்த ரெப்ரிஜிரேட்டர் எனும் குளிர்ந்த பெட்டியினை கொடுத்து மன்னிக்க முடியா துரோகத்தை அது செய்தது, இந்த குளிர்பெட்டியினை கண்டுபிடித்து கொடுத்தவனே மானிட குல விரோதி

அவன் ஹிட்லரை விட கொடியவன்

ஒருவாரமாக சில நேரம் ஒரு மாதமாக கூட என்ன சமைத்தோம் உண்டோம் என்பதை குளிர்சாதன பெட்டியினை திறந்து பார்த்தால் தெரிகின்றது, இது ஒன்றுதான் அது பயன்படும் விதம்

இதில் வைத்து எடுக்கபடும் எல்லாமும் தன் சுவையினை இழக்கின்றது

நல்ல நோக்கத்திற்காக தொடங்கபட்டு பின் நாசமாய் போகும் கட்சிகள் போல் ஆகிவிடுகின்றது உணவின் நிலை

இந்த பெட்டிகளை தூக்கி எறியாமல் நல்ல சாப்பாடு என்பது சாத்தியமே இல்லை

குளிர்பெட்டியினை புறக்கணிப்போம், நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்

வரதட்சனையில் கூட அந்த பொருளை சேர்க்கவேண்டாம் என்ற கோஷம் உடனே எழும்பட்டும்

இப்புரட்சியினை உடனே தொடங்க வேண்டும்

தமிழர் நல்ல சாப்பாடு சாப்பிட கூடாது என்ற இந்த இலுமினாட்டி சதியினை முறியடித்தே தீர வேண்டும்

 
 
 

யூ டியூப் என்பதை எதற்காக உருவாக்கினார்களோ?

இந்த யூ டியூப் என்பதை எதற்காக உருவாக்கினார்களோ தெரியாது

ஆனால் தமிழன் மட்டும் அதை சமையல், சினிமா, அரசியல் என நிரப்பி வைத்திருக்கின்றான்.

இதில் சமையல் மட்டும் 80% இடத்தை அதில் பிடிக்கின்றது

தமிழக ஆண்களும் பெண்களும் வீட்டில் சமைக்கின்றார்களோ இல்லையோ யூ டியூப்பில் இடைவிடாமல் சமைத்துகொண்டே இருக்கின்றார்கள்

தமிழரின் எல்லா வகை சமையலும் அங்கு நிரம்பி கிடக்கின்றது

வாழ்க தமிழன்

“தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்கொரு சமையல் உண்டு”

இதை எல்லாம் ஒன்றுவிடாமல் வலுகவனமாக பார்க்கும் பாகம்பிரியாள், சமைக்கும் பொழுது மட்டும் அதை எல்லாம் மறந்துவிட்டு சமைத்ததையே திரும்ப சமைக்கின்றார் என்பது வேறுவிஷயம்

2 மணி நேரம் யு டியூபில் சமையல் குறிப்பினை பார்த்துவிட்டு, உடனே பிரிட்ஜில் இருக்கும் பழைய குழம்பினை எடுத்துவைத்து “சாப்பிடுங்கள்” என சொல்லிவிட்டு மறுபடியும் யு டியூபில் சமையல் கற்கும் அதிர்ச்சியும் அவ்வப்போது நடக்கின்றது

 
 

பாலியல் கல்வி கொண்ட‌, பெண்களை மதிக்கும் சமூகமாக மாற வேண்டும்

இந்தியாவில் பாலியல் தொல்லைகளும் அதனால் பெரும் சிக்கல்களும் ஏற்பட்டாயிற்று என கொந்தளிக்க தொடங்கிவிட்டார்கள்

இது மோடி ஆட்சியில் அதிகரித்தது என புலம்பல் வேறு, மோடி ஆட்சிக்கும் அதற்கும் என்ன தொடர்பு?

இது மன்னர்கள் ஆட்சி, மதகுருமார் ஆட்சியிலிருந்து இக்காலம் வரை நீடிக்கின்றது என்பதுதான் விஷயம்

மனிதனுக்கு பசி, தூக்கம் போல இயல்பான விஷயம் அது, அவன் அப்படித்தான் படைக்கபட்டிருக்கின்றான்,

அதனை வென்றவன் எவனுமில்லை, வென்றவன் நீண்டகாலம் வாழ்ந்ததுமில்லை

ஒரு மனிதன் 10 நாள் உணவின்றி இருந்தால் கூட 11ம் நாள் அவன் முன் பெண்ணையும் உணவினையும் வைத்தால் அவன் மனம் பெண்பால் விழும் என்றனர் ஞானிகள்

அலெக்ஸாண்டர் காலத்தில் இருந்து இரண்டாம் உலகப்போர் வரை இவ்வுலகம் கண்டது என்னவென்றால் வென்ற வீரர்கள் முதலில் தேடுவது பெண்களையே

மானிட சுபாவம் அது.

ஞானிகள் காடு சென்று காமத்தை கடக்க முனைந்தாலும் விஸ்மாமித்திரர் போல பலரால் வெல்ல முடியவில்லை மானிட சுபாவம் அது

எது முறையான காமம், எது முறையற்ற காமம் என இந்து புராணங்கள் சொன்ன அளவு இன்னொரு மதம் சொல்லவில்லை

அகலிகை, தாரா முதல் எத்தனையோ நிகழ்வுகளை அது முறையற்ற தொடர்புக்கு காட்டிற்று, அதில் அளவுக்கு மீறி மூழ்கினால் இந்திரனும் தப்பமுடியாது என சொன்ன மதம் அது

ராமாயணம் எனும் இதிகாசமே அதையொட்டித்தான் எழும்பியது

பெண்களை மதித்து அவளுக்கு பூரண சுதந்திரம் கொடுத்தது இந்து மதம், பெண்ணை மதியாமல் மிதித்தவர் வாழவுமில்லை என சொன்ன பாத்திரங்கள் இந்து பாத்திரங்களே

ஆதிகால மதம் அப்படித்தான் இருந்திருக்கின்றது, பிற்கால கட்டுபாடுகள் பிராமண காலத்தில் வந்தவையே

ராமனை அது வணங்கியது, கண்ணனை பழிக்கவுமில்லை

பண்டைய இந்தியாவில் பாலியல் சுதந்திரம் இருந்திருக்கின்றது, பல விவாகங்களோ வேறு தொடர்புகளோ சிக்கல் என இல்லவே இல்லை

ஆலய சிற்பம் முதல், குகை ஓவியங்கள் காமசாஸ்திர நூல் வரை காமத்தை கொண்டாடிய தேசம் இது.

காடு சென்ற முனிவர்களும் அந்த ஆராய்ச்சியில்தான் இருந்திருக்கின்றார்கள், தோல்வியினை ஒப்புகொண்டு திரும்பியிருக்கின்றார்கள்

மனிதனுக்கு இயற்கையான உணர்ச்சியினை சட்டம் போட்டு தடுத்தால் அது வேறுவகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுதான் அக்கால சமூகம் சில ஏற்பாடுகளை செய்திருந்தது

கணிகையர், பரத்தையர் என்ற கூட்டம் என சொல்லபடுவது அதுதான், பின்னாளில் ஆலயபணி செய்த கோவில் அடிமைகளான தேவதாசிக்கும் அந்த பெயரே நிலைத்தது

இதெல்லாம் இருந்ததால் பெரும் சமூக சீர்கேடுகள் தவிர்க்கபட்டன‌

இக்காலத்திலும் அதனை தவிர்த்தால் என்னாகும் என உணர்ந்த நாடுகள், பேசாமல் வரிவிதித்து விட்டு அனுமதிக்கின்றன‌

இங்கு சமூக சீர்கேடு என அப்படி அனுமதிக்கமாட்டார்கள், அப்படி இல்லா பட்சத்தில் பாலியல் கல்வியாவது கொடுக்கபட வேண்டும்

அதுவும் இல்லை

இதனால் இத்தலைமுறை தறிகெட்டு திரிகின்றது, இப்போதுள்ள தொடர்பு சாதனங்கள் அவர்களை இன்னும் தூண்டுகின்றன‌

விளைவு சிறு குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை பாதிக்கபடுகின்றார்கள்

தன் தேவைகள் தீர்க்கபடாத எந்த பிராணியும் ஒரு கட்டத்தில் தடம் தவறுகின்றது, அதில் யானையும் அடக்கம் மனிதனும் அடக்கம்

நிச்சயம் மது, மாது விவகாரங்களை எல்லாம் சட்டம் போட்டு தடுக்கவே முடியாது, எங்கேனும் ஒரு பாதிப்பினை அது கொடுத்துகொண்டேதான் இருக்கும்

வேறு ஏற்பாடுகளை செய்யவும் கலாச்சாரம் ஒப்புகொள்ளாது என்பார்கள், இவ்வளவிற்கும் அக்காலத்திலே இருந்த கலாச்சாரம்தான்

அதனால் பாலியல் கல்வி இதனை ஓரளவு குறைக்கும், இதனைத்தான் அன்றே மிக தைரியமாக குஷ்பு சொன்னார். அவரை ஓட விரட்டினார்கள், படு மட்டமாக விமர்சித்தார்கள்

கடும் தண்டனைகள் குற்றத்தை குறைக்குமென்றால் அரபு நாடுகளில் கற்பழிப்புகள் எல்லாம் நின்றிருக்க வேண்டும் ஆனால் தலைபோனாலும் பரவாயில்லை என உள்ளுக்குள் எரியும் தரப்பு சவால் எடுக்கின்றது

இதற்கென தனி குழு அமைக்கபட்டு தகுந்த கல்வியும் , இன்னபிற எச்சரிக்கையும் கொண்ட இளம் சமூகத்தை உருவாக்க வேண்டும்

மேல் நாடுகள் இப்படித்தான் இச்சிக்கலை கடந்து செல்கின்றன, பெண்ணை மதிக்க தெரிந்த சமூகத்தில் இச்சிக்கல் இல்லவே இல்லை

குறைந்த பட்சம் பெண்களை மதிக்கவும், அவர்ளுக்கும் மனம் உண்டு , விருப்பம் உண்டு வெறுப்பு உண்டு என புரிந்துகொள்ளும் ஆண் சமூகத்தை உருவாக்க வேண்டும்.

அதுவே பிற்காலத்தில் இம்மாதிரி சிக்கலில் இருந்து இந்திய எதிர்கால சமூகத்தை காக்கும்

இல்லையேல் இம்மாதிரி சர்ச்சைகள் வரவர பெருகுமே அன்றி குறையாது

பாலியல் கல்வி கொண்ட‌, பெண்களை மதிக்கும் சமூகமாக இது உருவாகும் வரை இச்சிக்கலுக்கு தீர்வில்லை

 
 

மோடியும் நானும் ….

மோடி விரைவில் ஓமான் பயணம் : செய்தி

அவர் எங்கும் போகட்டும், ஆனால் நமக்கும் மோடிக்கும் பயண ராசியில் சில ஒற்றுமை இருக்கின்றது

அதாவது மோடி கோலாலம்பூரில் விவேகானந்தர் சிலையினை திறந்தார், கொஞ்ச நாளில் நாமும் அங்கு சென்றாயிற்று

மோடி அதே கோலாலம்பூரில் 5 நட்சத்திர ஹோட்டலில் நின்றார், நாமும் திரை நட்சத்திரங்களை காண அதே இடத்திற்கு சென்றாயிற்று

கோபாலபுரத்திற்கு வந்தார் மோடி, அட மகா ஆச்சரியமாக நாமும் சென்றாயிற்று

இப்படி அவர் செல்லுமிடமெல்லாம் நாமும் செல்வதால் மூட நம்பிக்கையிலோ, அனுமாஷ்யத்திலோ அல்லது சென்டிமென்டிலோ அவரிடம் ஒரு கோரிக்கை வைக்க வேண்டும்

“எப்படியாவது எம் தங்க தலைவி குஷ்பு வீட்டு வாசலையோ, அலுவலகத்தையோ மிதித்துவிடுங்கள் மோடி, சென்டிமென்ட் படி நாமும் பின்னாலே வந்துவிடுவோம், மாபெரும் லட்சியம் நிறைவேறிவிடும்

சொன்னபடி 15 லட்சம்தான் தரவில்லை இந்த சின்ன உதவியாவது செய்ய கூடாதா?”

நெல்லை மாவட்டத்தில் ஒரு துயரம் நடந்திருக்கின்றது

நெல்லை மாவட்டத்தில் ஒரு துயரம் நடந்திருக்கின்றது, ஒருவனுக்கு திருமணம் நிச்சயக்கபட்டிருகின்றது. இன்று திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவன் தற்கொலை செய்திருக்கின்றான்

செத்தவன் ஏன் செத்தான்? எதற்கு செத்தான் என்பது தெரியவில்லை, ஆனால் சொல்லாமல் தூரவழி ஏகிவிட்டான்

இதனால் இப்பொழுது பாதிக்கபட்டிருப்பது யாரெனில் அந்த மணப்பெண், அவர்தான் பரிதாபம்

அவன் சாக என்ன காரணமும் இருக்கட்டும், சாவது என முடிவெடுத்தபின் அதனை எழுதிவைத்துவிட்டாவது செத்திருக்க வேண்டாமா?

நிச்சயம் செய்து, திருமண ஏற்பாடுகளை செய்துவிட்டு தாலிகட்டுவதற்கு முன்புதான் செத்துபோவேன் என்பது மிக பெரும் துரோகத்தில் ஒருவகை

சும்மாவே கதைகளை அள்ளிவிட்டு, மூட நம்பிக்கையில் ஊறிபோயிருக்கும் அந்த பகுதியில் இனி அப்பெண்ணின் எதிர்காலம் பெரும் கேள்விகுறி. மிகபெரும் சிக்கலை அந்த அப்பாவி பெண் எதிர்கொள்ளும் நேரமிது

திடீர் மாப்பிள்ளை எல்லாம் சினிமாவில் சாத்தியமே அன்றி நிஜத்தில் அல்ல.

குற்றம் செய்ததெல்லாம் இவன், பெற்றோரின் சொல்கேட்டு தலையினை ஆட்டியதை தவிர அப்பெண் ஒரு பாவமும் செய்யவில்லை

இந்த அளவு அவனை சாக தூண்டிய நெருக்கடி எது என தெரியவில்லை, ஆனால் இப்படி ஒரு பெண்ணின் வாழ்வினை பாழாக்க‌ செய்தவனை தற்கொலை செய்ய விட்டிருக்க கூடாது,

மாறாக அடித்தே கொல்ல வேண்டும்

அவளுக்கு இன்று பிறந்தநாள்..

Image may contain: 1 person, smiling

7 ஆண்டுகளுக்கு முன்னால் இதே நாளில் என் உயிரினை என் கையில் கொடுத்து வளர்க்க சொன்னான் இறைவன்.

என் வாழ்வின் மிகபெரும் வரமும் மகிழ்வுமான அவளுக்கு இன்று பிறந்தநாள்..

எல்லா தெய்வங்களும் வல்ல இறைவனும் அவளை ஆசீர்வதித்து காத்துவரட்டும்.

கலைஞரை சந்தித்த கதை….

கலைஞரை சந்திக்க முயன்றபொழுது முதலில் உறுதிகொடுத்தவர் எல்லோரும் நழுவிவிட்டார்கள், காரணம் பொங்கல் நாளில் தொண்டர்களை சந்தித்ததில் கலைஞர் உடல் சற்று தளர்ந்திருந்தது என்றார்கள். அவரை சந்திக்கும் வாய்ப்பு குறைவானது போல் தோன்றிற்று

Somas Kandhan அவர்களை அழைத்து வந்திருப்பதை சொன்னபின் அவர் பெரும் முயற்சி செய்தார், 18ம் தேதி மாலை சந்திக்கலாம் என உறுதியாக சொன்னார்.

சென்னை நெரிசலுக்கு தப்பி ஒரு வழியாக மாலை 7 மணிக்கு கோபாலபுரத்தை அடைய முடிந்தது. கலைஞரின் வீட்டினை அடையாளம் கண்டு சென்றாயிற்று

அந்த வீடு மிக எளிமையாக இருந்தது, சேலத்தில் இருந்து சினிமா கம்பெனிகள் சென்னைக்கு குடிபெயர்ந்தபொழுது கலைஞரும் வந்துவிட்டார், அன்றே அவர் வாங்கிய வீடு அது

அரசியலுக்கு வரும் முன்னே அவர் வாங்கிய வீடு அது.

நிச்சயம் ஒரு முதுபெரும் அரசியல் தலைவர் வசிக்கும் வீடு என அதனை சொல்லமுடியாது. சாதரண வீடு அதுவும் வரிசை வீடுகளின் கடைசி வீடு. அந்த பகுதியில் எல்லா வீடுகளுமே பங்களாக்களாக மாறி இருக்கின்றன. ஆனால் எந்நிலையிலும் மாறாமல் கலைஞரின் தமிழ் போலவே மாறாமல் இருக்கின்றது அந்த வீடு

வாசலில் சில காவலர்கள் கடமைக்கு நின்றார்கள், ஆனால் சாலை சோதனையோ, சாலை தடுப்போ எதுவுமே இல்லை. மொத்தத்தில் இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவர் வாழும் பகுதி என ஒரு பரபரப்பும் இல்லை, அவர் வீட்டு முன் ஹாரன் அடிக்கலாம், சத்தம் போட்டபடி பைக்கில் செல்லலாம், ஒரு சிக்கலுமில்லை

இது வேறு எந்த அரசியல் தலைவர் வாழும் பகுதிக்கு சாத்தியமா என்றால் நிச்சயம் இல்லை, கலைஞர் அப்படி வாழ்ந்திருக்கின்றார்

அவர் வீட்டின் அருகிலே வேணுகோபாலசாமி கோவிலும் இருக்கின்றது. பகுத்தறிவின் சுடர் அந்த ஆலய பூஜை, புனஸ்கார சத்தத்திலும், சாம்பிராணி மணத்திலும், ஆலயமணி ஓசையிலும் கலந்துதான் பகுத்தறிவு பேசியிருக்கின்றது

ஒரு நாளும் அவர் இந்துமதத்திற்கு எதிரி அல்ல மாறாக அதன் மூட நம்பிக்கைக்கே எதிரி என்பதற்கு அவர் வீட்டையடுத்த ஆலயமே சாட்சி

8 மணிக்கு வீட்டின் முன்வராண்டாவில் அமரவைத்தார்கள், அவ்வீட்டில் கால் வைக்கும்பொழுதே உடல் சிலிர்த்தது. தமிழக அரசியலை கிட்டதட்ட 65 ஆண்டுகள் நிர்ணயித்த வீடு அது

எத்தனை பெரும் தலைவர்கள் தேடி கால் வைத்த இடம் அது, காந்தி காலம் முதல் மோடி காலம் வரை எல்லோரும் ஓடிவந்த இடம், மோடியே வந்த இடம்

நடிகர்களில் என்.எஸ் கிருஷ்ணன் முதல் இப்போதைய நடிகர்கள் வரை வந்து நின்ற வீடு.

சுருக்கமாக சொன்னால் 5 தலைமுறை அரசியல்வாதி, சினிமாக்காரர்கள், பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள் என எல்லோரும் வந்து நின்ற வீடு அது. நிச்சயம் வரலாற்று பெருமை மிக்க இடம்.

அந்த இடத்தில் கால்வைத்தபொழுது பெரும் வரலாற்று சின்னதை தரிசித்த சிலிர்ப்பு ஏற்பட்டது. அங்கே அமர்ந்திருக்கும்பொழுது நினைவுகள் எங்கெல்லாமோ சுற்றின, இங்கிருந்துதான் அந்த மனிதர் பெரும் முடிவுகளை எடுத்தாரா?

தமிழகத்தையும் சில நேரங்களில் இந்தியாவினையும் வழிநடத்தும் பெரும் பொறுப்பினை இந்த இல்லமே சுமந்து நின்றது. ஒன்றா இரண்டா நினைவுகள்? கடலில் அலை மோதுவது போல் நினைவுகள் மோதின, அப்பொழுது என்னிடம் பேசிய ஒரு காவலரிடம் ஏதோ சொல்லிகொண்டேனே தவிர நினைவுகள் எல்லாம் பின்னோக்கியே நீந்தின‌.

நன்றாக நினைவிருக்கின்றது, அதில் ஒரு காவலர் நம் பதிவுகள் பற்றி கேட்டார், ஆக நம்மை பலர் கவனிக்கின்றார்கள் அதுவும் கலைஞர் வீட்டு வாசலில் நிற்பவர் வரை கவனிகின்றார்கள் என்றபொழுது ஒரு கணம் மனம் திடுக்கிட்டது,

ஆனால் அந்த வீட்டின் நினைவுகளில் மூழ்கி இருந்ததால் அவரிடம் சரியாக பேசமுடியவில்லை

8.30 வாக்கில் அழைத்தார்கள், மேல்மாடியில் அவர் இருந்தார், வரவேற்பரை ஒடுக்கமாக இருந்தது. அங்கு கலைஞரின் பழம் புகைபடங்கள் இருந்தன முரசொலிமாறன் படம் மாலைபோட்டு வைக்கபட்டிருந்தது. மேலே செல்லும் வாசல் மிக ஒடுக்கமானது, நீண்ட நாள் கலைஞர் அந்த ஏணியினைத்தான் பயன்படுத்தினாராம், பின் உடல் தளர்ந்தபொழுது பின்னால் லிப்ட் வசதி செய்யபட்டதாம்

மிக ஒடுக்கமான அந்த ஏணியில் ஏறியபொழுது மனம் நெகிழ்ந்தது, கலைஞர் நடந்த பாதை அது.

அந்த அறையினை திறந்தார்கள், அதுவரை மனதின் அடி ஆழத்தில் இருந்த உணர்வுகள் எல்லாம் பிராவகமாக வெடித்தன, ஆம் அவர் அங்கே அமர்ந்திருந்தார்

80 ஆண்டுகளாக பொங்கி ஓடிய காட்டாற்று வெள்ளம் அங்கே அமைதியாக ஒடுங்கி இருந்தது, பல இடங்களில் தென்றலாகவும் சில இடங்களில் புயலாகவும் வீசிய அந்த கலைகாற்று சலனமற்று அமர்ந்திருந்தது

அரசியல், கலை, இலக்கியம், பத்திரிகை என எல்லா இடங்களிலும் தன் அலையினை அடித்துகொண்டே இருந்த கடல் அங்கு அமைதியாக அமர்ந்திருந்தது

உலகின் மாபெரும் மங்கோலிய சாம்ராஜ்யத்தை அமைத்த செங்கிஸ்கான் தன் முதிய வயதில் ஒடுங்கி நலிவுற்று இருந்தது போல இருந்தார் கலைஞர், உலகையே அலற வைத்து தனிதீவில் இருந்த நெப்போலியன் போல் அமர்ந்திருந்தார் அவர்

அந்த சிறிய அறையில்தான் அவர் மிக முக்கிய முடிவுகளை எடுத்திருக்கின்றார், அவரின் அழுகை, கண்ணீர், துக்கம் , வருத்தம், ஆற்றாமை, மகிழ்சி, வெற்றி என எல்லாவற்றையும் அந்த அறை பார்த்திருக்கின்றது

கனிமொழி அருகே அமர்ந்திருந்தார், மிக தெளிவான முகம் அவருடையது, என்ன கேள்வியும் கேளுங்கள் என்னிடம் பதில் உண்டு என்பது போன்ற முகத்துடன் வாருங்கள் என்றார், “அப்பா உங்களை பார்க்க வந்திருக்காங்க” என அவர் சத்தமாக சொன்னவுடன் கலைஞரிடம் சில மாறுதல்கள் வந்தன‌

அவர் அருகிருந்து படம் எடுத்துகொண்டேன், ஒருவிதமான உணர்ச்சியால் கண்களில் நீர் வந்தது. அடக்கிகொண்டே படம் எடுக்க முடிந்தது

கலைஞரின் முன் அறையில் அண்ணாவும் பெரியாரும் படமாக இருந்தார்கள், அவர்களுக்கு அடுத்து கலைஞரின் பாசத்திற்குரிய சகோதரிகள் படமும் இருந்தது, அவர் அன்னையின் சிலை அவர் அருகிலே இருந்தது, ஏகபட்ட புத்தகங்கள் கொண்ட அறையில் இவர்களின் நினைவுகளோடே கலைஞர் பயணித்தார் என்பது புரிந்தது

கலைஞரை உற்று பார்த்தேன், எப்படிபட்ட மனிதர் அவர்? அவருக்கு குலபெருமை இல்லை, குலப்பணம் இல்லை, சகோதர பலமோ பெரும் கல்வியோ இல்லை

ஆனால் பேனா மட்டும் இருந்தது, அந்த பேனா முனையில் பிரபஞ்சத்தையே கிழித்தெறிந்து கோடிகணக்கான மக்களை வசீகரித்து, பெரும் வரலாற்று தலைவனாக உயர்ந்துவிட்டவர் அவர்

நிச்சயம் அவர் தென்றலை தீண்டியதில்லை தீயினை தாண்டினார், அவர் சுயநலத்தில் பொதுநலமும் கலந்தே இருந்தது

அந்த பெரும் தீ எழுத்துக்களை கொடுத்த அந்த கரங்கள் ஒடுங்கி இருந்தன, கைகளை பொத்தி வைத்திருந்தார். ஒரு மோதிரம் மட்டும் அணிந்திருந்தார், அது அண்ணா கொடுத்த கணையாழி.

அந்த கரங்களை தொட்டுபார்க்க ஆசை இருந்தது. சாதாரண கரங்களா அவை? எத்தனை பேரை உயர்த்திவிட்ட கரம் அது, கலைஞர் பாணியில் சொல்வதனால் கைக்கே (காங்கிரசுக்கே) கை கொடுத்த கை அது

அந்த கையினால் உயர்ந்தவர்கள் எல்லாம் அவரை மனம் வெறுக்க செய்தபொழுது அவரின் கண்ணீரை அக்கரங்களே தனிமையில் துடைத்தும் கொண்டன‌

தமிழக அரசியல் 65 ஆண்டுகளாக எப்படி நடந்தது? ஒன்று கலைஞர் எதிர்ப்பு அல்லது ஆதரவு. இது அல்லாது ஒன்றுமே இல்லை இன்றைய இபிஎஸ் வரை அப்படி வந்தவர்கள்தான்

அந்த மிகபெரும் வரலாற்று ஆளுமையின் கரங்களை தொட ஆசைதான், அதனை கனிமொழியிடம் கேட்டுவிட வாய்துடித்தது. நான் எதனையோ சொல்ல வருவதை அவரும் புரிந்துகொண்டு குறிப்பால் சொல்லுங்கள் என்பது போல பார்த்தார்.

வயது முதிர்ந்த ஒருவரின் கரங்களை தொட்டு அதில் கண்ணீர் விழுந்தால் (நிச்சயம் விழும்) அவருக்கு அசவுரியங்கள் ஏற்படும் என்ற எச்சரிக்கை வந்ததால் கேட்கவில்லை

விடைபெற்று கீழே இறங்கும்பொழுது மனம் எதனையே சாதித்த பெரும் அமைதியில் இருந்தது, ஒரு பெரும் தலைவனுக்கு தமிழன் செய்யும் கடமையினை செய்த திருப்தி மனதில் குடிகொண்டது

மனம் முழுக்க திருப்தியுடன் கிளம்பினேன், அப்படியே சென்று சென்னை மெரீனாவின் ஓரத்தில் அமர்ந்துவிட்டேன் நண்பர் Senthil Kumar Krishnan அருகில் இருந்தார்

நாம் வெகுநேரம் பேசவே இல்லை, அவரோ கலைஞரை சந்தித்த மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்

எகிப்தின் நைல் நதி, ஈராக்கின் யூப்ரடீஸ் நதி போன்ற பெரும் வரலாற்று இடங்களுக்கு சென்று பார்த்துவிட்ட திருப்தியுடன் எழுந்தேன்

நிச்சயம் அம்மனிதர் ஒரு பெரும் வரலாறு, வருங்காலத்தில் இப்படி ஒரு அசாத்திய மனிதன் இருந்தான் என எதிர்கால சந்ததி ரசித்து படித்து ஆச்சரியபட போகும் வரலாறு, அவரின் காலத்தில் வாழ்ந்து அவர் தமிழில் கரைந்து வளர்ந்த நாம் அவரை சந்தித்ததில் காலத்திற்கும் கடவுளுக்கும் மிக்க நன்றி

தமிழகம் இருக்கும் வரை அவர் பெயர் நிலைத்திருக்கும்.

ஏற்பாடுகளை செய்த Somas Kandhan அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு கிளம்பும்பொழுதும் அதே மனநிலையில் இருந்தேன், பேச்சு வரவில்லை

வங்க கடலின் அலைகள் கலைஞர் பெயரை சொல்லி மோதுவது போல் இருந்தது.

நண்பர் Senthil Kumar Krishnan சொன்னார், “என்னாச்சிண்ணே தலைவிய பார்க்க முடியலண்ணு வருத்தமா? ஏண்ணே கண்ணீரு?..

விடுங்கண்ணே தலைவி எப்படியும் ஒரு காலத்தில் வயசாகி நாற்காலியில உக்காரும்ணே அப்போ கண்டிப்பா பார்த்துலராம்ணே……”

%d bloggers like this: