விநாயகர் அல்லது கணேசன்

இந்து சமயத்தில் முப்பது முக்கோடி தேவர்கள் உண்டு என்பது நம்பிக்கை, அந்த முப்பது முக்கோடிகளில் 30 பேருக்கு மேல்தான் வெகு பிரசித்தம் அந்த 30 பேரில் முதல் 5 இடங்களுக்குள் வருபவர்களில் ஒருவர்தான் வடமொழியில் விநாயகர் அல்லது கணேசன்.

நமது தமிழில் பிள்ளையார் என அழைக்கபடுகிறார் அந்த கணபதி ஐந்து கரங்களை கொண்டவர் என்பதால் ஐங்கரன் எனவும் அழைக்கபடுகிறார்.

இந்தியா மட்டுமல்ல ஒருகாலத்தில் ஆசியா முழுக்க (அரேபியா,மங்கோலியா,இந்தோனிசியா வரை) பரவியிருந்த இந்து மதத்தின் பிரதான கடவுளவர், .

இன்றும் இந்தோனேஷியாவில் பிள்ளையார் கோவில் உண்டு , அவர்கள் கரன்சியிலும் பிள்ளையார் உண்டு, அப்படி பல நாடுகளில் பிள்ளையார் இன்றும் உண்டு.

ஒரு காலத்தில் பிள்ளையாரை தனிகடவுளாக கொண்ட கானாதிபத்தியம் என்ற சமயமே இருந்திருக்கின்றது

பின்னாளில் அது அக்கால மோதல்களான சைவ,வைணவத்தோடு இணைந்தது.

கணங்கள் எனப்படும் இயக்கும் சக்திகளுக்கு., அதாவது ஒவ்வொரு கணமும் இயக்கும் சக்திக்கு அதிபதி அவர்தான். அதனால் அவர் கணங்களின் அதிபதி கணபதி ஆனார்,

பெரும் சக்திகொண்டவர், காக்கும் கடவுள் என புகழபடும் திருமாலை கூட இவரே காத்தவர் என பெரும் புகழ்கொண்டவர், மிக பெரும் சக்தியின் வடிவம்.
யாரும் எப்பொழுதும் வழிபடலாம்.

இது தீட்டு என்றோ அல்லது கட்டுபாடுகளோ அவருக்கு இல்லை, இதுதான் பிள்ளையாரின் பெரும் சிறப்பு, சனிக்கே சனிபிடிக்க வைத்தவர்.

மிக மிக எளிமையான தெய்வம், பணம் கொட்டும் பெரும் ஆலயங்களிலும் இருப்பார் , தெருமுனை ஆலயத்திலும் இருப்பார், பக்தர்களின் வேண்டுதல் என்றால் பசுஞ்சாணத்தில் கூட காட்சியளிக்கும் தெய்வம் அவர், வழிபடுவதற்கும் மிக மிக எளிமையானவர்,

சாதாரண வெள்ளெருக்கும், அரும்புல்லும் கூட போதும். கூடுதலாக தமிழர்கள் தேங்காயும் சேர்த்து கொண்டனர்.

16 வகை ஆசீர்வாதத்திற்கும் அவரே அதிபதி என்பதும் நம்பிக்கை, அவரை தொழுதுதான் செயலை தொடங்குவார்கள், வட இந்தியா முழுக்க பிள்ளையாருக்கு செல்வாக்கு அதிகம், முருகனை தெய்வமாக கொண்டாடும் தமிழர்கூட பிள்ளையாருக்கு தனி இடம் கொடுத்திருக்கின்றார்கள்.

முருகனை உருகி உருகி பாடிய அவ்வையும் (கே.பி சுந்தரம்பாள் வடிவில் நாமும் பார்த்திருப்போம் ) முருகனை பழனிக்கு அனுப்பிய விநாயகருக்கு, விநாயகர் அகவல் என ஒரு காவியம் பாட தவறவில்லை என்பதில்தான் விநாயகரின் கனமான இடம் தெரிகிறது.

அக்காலத்தில் வட இந்தியரின் (இந்துக்களின் அடித்தள பூர்வீகமான இமயமலை பகுதிகள்) ஆண்டுகணக்கு ஆவணிமாதத்திலே தொடக்கம், வருட தொடக்கத்திலே பிள்ளையாரை வணங்க அவர்கள் கொண்டு வந்த கொண்டாட்டமே விநாயகர் சதுர்த்தி.

முன்பெல்லாம் பாம்பு புற்றிலிருந்து மண் எடுத்து பிள்ளையார் உருவம் செய்து அவருக்கு பிடித்தமான படையலிட்டு, விரத காலம் முடிந்து அதனை கிணறு மற்றும் ஆறுகள் போன்ற நீர் நிலைகளில் கரைப்பார்கள்.

வளமான களிமண்ணை மண்ணை கரைப்பதன் மூலம் அந்நீர் வயலுக்கு பாயும் பொழுது நிலம் இன்னமும் செழிப்படையும், இந்த பெரிய வேளான்மை தத்துவமும் அதில் அடங்கியிருந்தது, சாணப்பிள்ளையார் தத்துவமும் இதுவே,சிறிதும் ரசாயாண கலப்பற்ற அந்த நீர் நிச்சயம் வளம் கொடுக்கும், விளைச்சல் பெருகும்.

நவராத்திரி கொலு போன்றோ அல்லது கிருஷ்ண ஜெயந்தி போன்றோ மிக அமைதியாக நடந்து கொண்டிருந்த விழாதான் விநாயகர் சதுர்த்தி, அமைதியான தெய்வம் அமைதியான விழா.

ஆனால் இன்று நடைபெறும் பெரும் ஊர்வலங்களுக்கும், காவல்துறையினரின் தூக்கத்தினை கெடுக்கும் அளவிற்கு சில சர்ச்சைகளுக்கு இடமான முறையில் நடைபெறும் அளவிற்கு இதனை மாற்றிய பெருமை பால கங்காதார திலகரையே சேரும்.

மிகபெரும் சுதந்திர போராட்ட வீரர் திலகர், காந்திக்கு முன்பே “சுதந்திரம் எமது பிறப்புரிமை” என முழங்கியவர், ஆனால் அரசுக்கு எதிரான ஊர்வலங்களுக்கு பிரிட்டிஷ் அரசு தடைவிதித்த பொழுது, மிக சாதுர்யமாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்தி “இது மத நம்பிக்கை” என வெளியே சொல்லி, விநாயகர் ஊர்வலத்திலே சுதந்திர வேட்கை ஊட்டியவர்.

மிசா காலகட்டத்தில் அண்ணா சமாதி கூட்டத்திலே அரசியல் நடத்திய கலைஞரை போல )

வெள்ளையரால் தடுக்கவும் முடியவில்லை காரணம் மத சுதந்திரம் அளித்திருந்தது சட்டம், விளைவு இந்தியர்களுக்க் மிக பிடித்த பிள்ளையார் பெரும் இந்திய அடையளாமாக மாறினார்.

சதுர்த்தி ஊர்வலத்தில் சுதந்திர முழக்கங்களும் சேர்ந்தன,

ஆனால் பிள்ளையாரை பிடிக்க குரங்காய் முடிந்தது போல, சுதந்திரம் பெற்ற பின்னும் தொடர்ந்தது, குறிப்பாக மும்பை போன்ற நகரங்களில் அதன் கொண்டாட்டமே தனி, மக்கள் ஆதரவினை பெறவேண்டும் என்பதற்காக வரதராஜ முதலியார் (நாயகன் படத்தின் மூலகாப்பி) போன்றோர் பெரும் செலவுகள் செய்தனர், நாடெங்கும் அது மேலும் பரவியது. இன்று ஏராளமான ரசாயாண பிள்ளையார்கள் வருட வருடம் டன் கணக்கில் நீர் நிலைகளில் கரைக்கபடுகின்றன.

இது மத நம்பிக்கை, ஆனால் பொது அமைதிக்கும் யாருடைய மனதிற்கும் எள்நுனி அளவும் காயபடுத்தாத வகையில் கொண்டாடபடும் பண்டிகைகளே அதன் உண்மை பொருளை உணர்த்தும், மிக சில இடங்களில் இது சர்ச்சைகுள்ளாகும் பொழுது அமைதியின், எளிமையின் சின்னமான பிள்ளையாரை கலங்கிய கண்களோடுதான் பார்க்க தோன்றுகின்றது.

எல்லா இனத்தாருக்கும் இந்தியாவில் பிள்ளையாரை பிடிக்கும், தமிழர்கள் கூட பிள்ளையார் சுழி போட்டுத்தான் தொடங்குவார்கள், அவரை முன்னிறுத்துகின்றார்கள். அவரை தொடங்கி நினைத்த காரியங்கள் பெரும்பாலும் காலத்தை வென்று நிற்பவை.

உதாரணம் மகாபாரத கதையை வியாசர் சொல்ல சொல்ல பிள்ளையார் எழுதினார் என்பார்கள், அவர் ஒரு பக்க தந்தத்தினை உடைத்து எழுத்தாணியாக எழுதினார் என்பது மரபு நம்பிக்கை.

அவர் தந்தத்தை உடைத்தாரா அரச மரத்து கிளையினை உடைத்தாரா என்பது பிரச்சினை அல்ல

அவர் தொடங்கிவைத்திருக்கின்றார் அல்லது அவரை முன்னிறுத்தி தொடங்கியிருக்கின்றார்கள், பாரத கதை காலங்களையும் தாண்டி நிலைத்திருக்கின்றது.

தாயை போல பெண்ணை தேடுகிறேன் என சொல்லி மனிதர்களுக்கு பெரும் தத்துவம் தந்தவர், தாயினை போல குணநலன்களோடு ஒரு மனைவி அமையும் பட்சத்தில் வாழ்வு இனிமையாகும் என்ற அரிய தத்துவத்தை சொன்னவர்

அரசமரம் மனிதருக்கு நல்ல அமைதியை கொடுக்கும் என அமர்ந்து, புத்தருக்கே வழிகாட்டியவர்.

இன்னும் ஏராளமான ஆண்மீக,அறிவியல் தத்துவங்களின் மொத்த வடிவம் பிள்ளையார், அவருக்கு பிடித்த அருகம்புல்லும், இன்றும் மருத்துவ உலகம் ஒத்துகொள்ளும் அருகம்புல் பெருமையும் போல ஏராளமான தத்துவங்களை தனது பெருவயிற்றில் ஒளித்து வைத்திருப்பவர்.

பிள்ளையார் என்பவர் மாபெரும் தத்துவ வடிவம்.

இந்தியாவில் எல்லா மக்களுக்கும் அவரை பிடிக்கும் என்றாலும், தமிழக செட்டியார்களின் இஷ்ட தெய்வம் அவர், பிள்ளையார் பட்டியில் அவரை கொண்டாடும் நாட்டுகோட்டை செட்டியார்களின் பெரும் நம்பிக்கை அவரே.

விநாயர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் உள்ள பெரும் ஆண்மீக தத்துவம் என்னவென்றால், மண்ணில் செய்யபடும் விநாயகர் சிலை குறிப்பிட்டகாலம் முடிந்து நீர் நிலைகளில் கரைந்து விடுகின்றது, அதாவது நிலையானது அல்ல இன்னும் ஆழமாக சொன்னால் மண்ணில் உண்டானது எல்லாம் மண்ணிற்கே திரும்பும்.

அதே தான், யூத மதமும்,இஸ்லாமும், கிறிஸ்தவமும் இன்னும் எல்லா மதங்களும் வலியுறுத்தும் தத்துவம்தான் “மண்ணில் உண்டான மனிதன் மண்ணிற்கே செல்லவேண்டும்”

இந்த உண்மையைதான் சொல்லாமல் சொல்கிறார்கள் விநாயர் சதுர்த்தியன்று இந்தியா முழுக்க வீற்றிருக்கும் கோடிக்கணக்கான பிள்ளையார்கள், இதனை உணர்ந்து கொள்பவர்கள் மிக அமைதியாக சாத்வீக பூஜைகளில் மனதினை செலுத்தி அமைதியை உணர்வார்கள்,அதனை மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள்.

அங்கே வீண் ஆரவாரமும், முழக்கங்களும், வெற்று கூச்சல்களும் இருக்காது, ஓங்கார பிரவண தத்து பிள்ளையார் போல பெரும் அமைதி மட்டுமே இருக்கும்.

காவல்துறையும் அமைதியாக ஆங்காங்கு இருக்கும் பிள்ளையாரை கையெடுத்து வணங்கிகொண்டிருக்கும்.

இந்த விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும் எல்லோருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கும் வேளையில் இருவரை நினைத்தால் சாணி பிள்ளையாரை எடுத்து அடிக்கவேண்டும் என தோன்றுகிறது

ஒன்று ஆயிரம் வழிகள் இருந்தும் மசூதி இருக்கும் தெரு வழியேதான் ஊர்வலத்தை நடத்துவேன் என அடம்பிடிப்பவன்

இன்னொன்று பெரும் தத்துவ பிம்பான பிள்ளையாரை “அழுக்கு மூட்டை” என பேசிவிட்டு, இன்று தமிழருக்கு சதுர்த்தி வாழ்த்து என பேனரில் கையினை தூக்கிகொண்டிருக்கும் பகுத்தறிவு இம்சைகள்

இருவருமே ஒரு வகை மனக்கோளாறு பிடித்தவர்கள் என்பதால் பொறுப்பினை பிள்ளையாரிடமே ஒப்படைத்துவிடலாம், சனியினையே விரட்டியவர், இந்த தமிழக சனியன்களை விடுவாரா?

இந்த தமிழக சனிகளை அவர் விரட்டட்டும்..

எப்படியோ வினை தீர்ப்பான் விநாகயன் என்பார்கள், அவன் எல்லோர் வாழ்விலும் வினை தீர்க்கட்டும், அருள் பொழியட்டும்.

எல்லோருக்கும் இனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

Image may contain: one or more people and people standing
No automatic alt text available.