ஹோலிபண்டிகை

ஹோலிபண்டிகை பற்றி ஏராளமான காரணங்கள் உண்டு. அது ஹோலி என்றால் ஒரு வித பயிர். அது அன்றுதான் விளையும் அதனால் அக்கால விவசாயிகள் கொண்டாடிய அறுவடை விழா ஹோலியாயிற்று என்பது ஒரு கூட்டம் சொல்வது

மதவாதிகள் இரு காரணங்களை சொல்கின்றார்கள், முதலாவது கண்ணன் பூதகியினை கொன்ற நாள், இரண்டாவது இரண்யன் கதை

அதாவது கண்ணன் குழந்தையாக இருந்தபொழுது அவனை அப்பொழுதே கொன்றுவிட பூதகி என்றொரு அரக்கி வந்தாளாம். அவள் விஷப்பாலை ஊட்டி குழந்தை கண்ணணை கொல்ல முயன்றபொழுது அவள் உடலின் ரத்தத்தையும் சேர்த்து உறிந்து பிஞ்சு கண்ணன் கொன்றாராம்.

அவள் உடலில் அவ்வளவு விஷம் இருந்திருக்கின்றது,சில அரசியல்வாதிகளை போல‌

இரண்ய கசிபு கதை நமக்கெல்லாம் தெரியும். விஷேஷ வரம் பெற்று மூவுலகினை ஆண்டு நானே கடவுள் என மமதை கொண்ட அரக்கன் அவன். காலை மாலை, பஞ்ச பூதம், ஆயுதம், மனிதன், மிருகம் என எதனாலும் கொல்லமுடியாத வரத்தை பெற்றான்.

அந்த இரண்யனுக்கு ஒரு மகன் இருந்தான், அவன் பிரகலாதன் அவனை கடைசியில் காக்கவே பரந்தாமன் நரசிம்ம அவதாரமாக வந்தார்.

ஆம், அவன் இரண்யனுக்கு பிடிக்காத நாராயணனை பூஜித்து கொண்டே இருந்தான். இது பொறுக்கா இரண்யன் பல வகைகளில் அவனை பயமுறுத்தி கொல்லவும் பார்த்தான் முடியவில்லை.

இந்த பிடல் காஸ்ட்ரோ என்பவரை அமெரிக்கா எப்படி எல்லாம் கொல்லமுயன்றதோ அப்படி ஏராள முயற்சிகள்.

உலகெல்லாம் தன்னை அழிக்க ஆளில்லை என சொல்லிகொண்டிருந்த இரணியனுக்கு , அவனை அழிக்க அவன் மகனே அவன் காலடியில் உருவாகிகொண்டிருந்தான், இறைவனின் விளையாட்டு அப்படி இருந்தது.

பழனிச்சாமி அரசை கவிழ்க்க‌ பார்பது போல் பல முயற்சிகள், அப்பொழுதெல்லாம் அவர் “நமோ” என்றவுடன் காப்பாற்றடுகின்றார் அல்லவா?

அப்படி இரண்யன் முயற்சிக்கு பொழுதெல்லாம் “நமோ நாராயணா” என்றவுடன் காப்பாற்றபட்டிருக்கின்றார்.

இரண்யனின் இன்னொரு தந்திரம் தன் 
சகோதரி ஹோலியா மூலம் பயமுறுத்துவது

இரண்யனுக்கு இருந்த அந்த சகோதரிக்கு நெருப்பால் எரிக்க முடியா சக்தி இருந்தது. அக்னி பகவான் அவளை நெருங்க மாட்டார், நெருப்பு அவளை அண்டாது

அதனால் நைசாக பிரகலாதனை மடியில் அமர வைத்த ஹோலியா பின் மிரட்டினாள் “ஒழுங்காக நாராயணனை மறந்து இரணியன் போற்றி சொல், நமோ இரணியன் என சொல் இல்லை என்றால் தீவைத்துவிடுவேன்” என அச்சுறுத்தினாள்

பிரகலாதன் அஞ்சாமம் ” ஹரி ஓம்” என்றான். தன் தொடையில் தீபற்ற வைத்தாள் தன் வரம் தன்னை காக்கும் என்றிருந்தாள்

ஆனால் அன்று என்னாயிற்றோ தெரியவில்லை, சட்டென கோபம் கொண்ட அக்னிபகவான் அவளை எரித்துவிட்டார் அந்த கரி, சாம்பல் புகையிலிருந்து வெளிவந்தான் பிரகலாதன்

(கடவுளே வரம் கொடுத்ததால் இரண்ய கசிபு என்பவனை அடக்கவும் முடியவில்லை, பின் அந்த வரத்தில் இல்லாதபடி காலையும் மாலையும் இல்லா அந்தி நேரத்தி, மனிதனும் மிருகமும் இல்லா நரசிம்ம அவதாரத்தில், ஆயுதமில்லா கை நகத்தில் அவனை கொன்றார் பரந்தாமன்)

அந்த பிரகலாதன் சாம்பலோடு வெளிவந்ததாலே இப்பண்டிகை கொண்டாடபடுகின்றது என்பதே பெரும் காரணம்

இன்னொரு காரணமும் உண்டு. அதாகபட்டது இந்த சிவபெருமானை நோக்கி மன்மதன் அம்பு வீசினானாம். அம்பு வீசியதும் சிக்க அவர் என்ன நித்தி சாமியாரா? சிவன் அல்லவா?

நெற்றிகண்ணை திறந்து அவனை எரித்துவிட்டார். மன்மதன் இல்லாவிட்டால் மானிட உலகம் எப்படி இயங்கும்? எல்லா ஆண்களும் பெண்ணாசை துறந்து சாமியாராக மாற, மானிட பிறப்பு நின்று போயிற்று

அப்படியே விட்டிருந்தால் இவ்வுலகில் யாரும் வந்திருக்க மாட்டார்கள், இவ்வுலகம் இவ்வளவு போர்களை சந்தித்திருக்காது, நாமெல்லாம் பிறந்திருக்க மாட்டோம் , இவ்வளவு சிக்கல்களை சந்திருக்கமாட்டோம்

ஆனால் கடவுள்கள் விடுவார்களா?

மனிதனுக்கு சிக்கல் இருந்துகொண்டே இருக்கவேண்டும், அந்த சிக்கலில் இருந்து விடுபட தன்னை அவன் அழுது வணங்கிகொண்டே இருக்க வேண்டும், அந்த கதறலில் நாம் சிரித்துகொண்டே இருக்க வேண்டும் என்ற கொடூர எண்ணம் கொண்ட தெய்வங்கள் விடுமா? நாராயணனிடம் அழுதன‌

அவரும் சாம்பலில் இருந்து மன்மதனை உயிரோடு கொண்டுவந்தாராம். அவனும் உடனே கரும்பு வில்லில் இருந்து அம்பு விட, மறுபடி மானிடர்கள் எல்லாம் “இளமை எனும் பூங்காற்று” எனவும் “ஏதோ மோகம்.. ஏதோ தாபம்” என‌ பாட கிளம்பி, உலகம் மானிடரால் நிரம்ப ஆரம்பித்தாயிற்றாம்,

அந்த மன்மதன் உயிர்பெற்ற நாள்தான் ஹோலி பண்டிகையாம்

இப்படி பல காரணம் இருப்பினும், இரண்ய கசிபின் சகோதரி கதையே பெரும் காரணமாய் சொல்லபடுகின்றது

ஹோலி கொண்டாடும் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

வழக்கமாக எந்த பண்டிகை கொண்டாடினாலும் “ஏய் ஆரிய பதர்களே, திராவிடனை/ தமிழனை ஒழித்ததை பண்டிகையாய் கொண்டாட விடுவோமா? திராவிடன் இரண்ய கசிபு வாழ்க” என கிளம்பும் அந்த கோஷ்டிகளை காணவில்லை

எந்த பண்டிகையும் மக்கள் சந்தோஷமாக‌ கொண்டாட கூடாது என்பதில் அவர்களுக்கு அவ்வளவு கவனம்.

நாம் தமிழர், சூரபத்மன் போன்ற அசுரன், ஹோலியா போன்றவர் நம் முப்பாட்டி என சொல்லும் கோஷ்டிகளையும் காணவில்லை

தூங்கிவிட்டார்கள் போல, ஏற்கனவே கண்ணனை மாயோன் என சொல்லிவிட்டதால், பூதகி தமிழச்சி ஆகிவிட்டதால் அது தமிழ்பிள்ளைகளின் சண்டை ஆனதால் சிக்கல் இல்லை

(முப்பாட்டி பூதகியினை அவள் பேரன் முப்பாட்டன் மாயோன் கொன்றான் என்பதால் கொண்டாடவில்லை என விட்டுவிடலாம்..)

ஆனால் முப்பாட்டன் இரண்யன் எனும் வீரதமிழனின் சகோதரி முப்பாட்டி கோலியா எனும் வீரதமிழச்சி செத்ததை கொண்டாடுவதை எப்படி இவர்கள் அனுமதிக்கின்றார்கள்?

மானமுள்ள தமிழர்கள் எல்லோரும் என்ன ஆனார்கள்? மார்வாடி பெண்கள் ஹோலி விளையாடுவதை ரசிக்க சென்றுவிட்டார்களா?

எளிய தமிழ்பிள்ளைகள் விரைவில் முப்பாட்டி கோலியாவுக்கு அஞ்சலி செலுத்தி, மானங்கெட்ட தமிழனுக்கு எச்சரிக்கை விடுப்பார்கள் என எதிர்பார்ப்போம்

அப்படியே இனமான திராவிடர்கள், ஆரியன் கொன்ற திராவிட வீராங்கனை கோலியாவிற்கு வீரவணக்க நாள் அனுசரிப்பார்கள் எனவும் ,

, திராவிட பெருமாட்டி செத்த நாளில் கருப்பு பொடிதான் தூவ வேண்டும், கலர்பொடி எப்படி தூவலாம் என சொல்லி, பிரன்ட்ஸ் படத்து வடிவேலு போலவும் வருவார்கள் என எதிர்பார்ப்போம்

அந்த வடிவேலு போல கருப்பு பொடியில் உரண்டு புரண்டு வந்தாலும் வருவார்கள், வாய்பிருக்கின்றது