உலக சிட்டுகுருவிகள் தினம்

இன்று உலக சிட்டுகுருவிகள் தினம்

தமிழர்கள் சிட்டுகுருவியை மிக மிக ரசித்தவர்கள், பல பழந்தமிழ் பாடல்களில் குருவியை புள்ளான் என குறிப்பிட்டுள்ளனர் அவர்களை விடுங்கள் செங்கால் நாரையை கூடத்தான் அழகாக கவிதையில் புனைந்திருப்பார்கள்.

சிட்டுகுருவிக்கு தனி இடம் கொடுத்தவர் நெல்லைக்காரர் மகாகவி பாரதி, கடனுக்கு மனைவி வாங்கிவந்த அரிசியை, கொல்லையில் குருவியை கண்டவுடன், தன் குடும்பத்து பசிமறந்து, “காக்கை குருவி எங்கள் ஜாதி” என ஆனந்தமாய் பாடி குருவிக்கு அரிசி வீசியவர்.

லௌகீக வாழ்வில் மிகவும் சலிப்புற்று பாரதி சோர்வுறும்பொழுது அவருக்கு பாட வழிகாட்டியது சிட்டுகுருவி,

“விட்டு விலகி நிற்பாய் அந்த சிட்டு குருவியை போலே…” ,

பாடலை கவனியுங்கள், ஆயிரம் அர்த்தம் விளங்க்கும் அவர் மகாகவி அல்லவா?,

தமிழ் திரை பாடல்களில் கூட “டவுண்பஸ்”பட நாயகி கணவனை காணவில்லை என காவல்நிலையம் செல்லாமல் சிட்டுகுருவியிடம் தான் கவலைபடுவாள், புதியபறவை சரோஜாதேவி சிட்டுகுருவி முத்தம் கொடுத்ததை கண்டபின் தான்(அப்பொழுது கமலஹாசன் மிகசிறுவன்) காதல் கொள்வார், அவ்வளவு ஏன் ரஜனிகாந்த் கூட சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு என்றுதான் ஒரு படத்தில் மகளுக்காக பாடுவார் பின்னாளில் புறாவுக்கு மாறி ஒரு பெண்புறா… என பாடிவிட்டார்.

அவர்களை விடுங்கள், நடிகர் திலகமே “முதல் மரியாதையில்” ஆழ்ந்த கவலையில் அதனை மறக்க “ஏ குருவி..சிட்டு குருவி..”, என தனது வீட்டு உத்திரத்தில் கூடுகட்ட அழைப்பார்.

அளவில் சிறியதால் அதனை சிட்டில் அல்லது சிட்டுகுருவி என அழைத்தாலும் நமது பகுதி மக்கள் அதற்கு வைத்திருக்கும் பெயர் “அடைக்கலாங் குருவி”

பறவையினங்களில் மனிதரிடம் ஒட்டுவது அல்லது மனிதர் வாழும் பகுதியில் வாழும் பகுதியில் கூடுகட்டிவாழும் பறவைகள் மிக குறைவு, அவ்வகையில் மனிதனின் வீட்டிற்குள் அடைக்கலமாய்(அல்லது தைரியமாய்) வந்து கூடுகட்டிவாழுவதால் அது அடைக்கலபறவை.

மனிதாபிமானத்திலும் இரக்கத்திலும் சிறந்த மனமுடைய நமது மக்கள், அக்குருவி ஆயிரம் தொல்லை கொடுத்தாலும், குஞ்சுகளோடு அது பறக்கும்வரை அந்த கூட்டை கலைக்கமாட்டார்கள், அது 3 தலைமுறைக்கு பாவம் சேர்க்கும் என்பார்கள்.

முறத்தில் அரிசி படைக்கும் பெண்கள் முன்னால்,சோறு சிதறும் இடன்ங்கள் கோழிக்கு தானியமிடும் இடங்கள் என தானியங்கள் சிதறுமிடங்களில் எல்லாம் அக்குருவி கூட்டத்தினை காணலாம்.

கிராமங்களில் வளர்ந்தவர்கள் நிச்சயமாக சிட்டுகுருவிகளோடுதான் வளர்ந்திருப்பார்கள், அவர்கள் வீட்டில் ஒருவர்போல சிட்டுகுருவியோடு பழகியிருப்பார்கள்,

அது மனிதன் உலகில் தானும் ஒரு ஜீவன் என்ற எண்ணத்தோடு, உலக உயிர்களோடு உறவாடி வாழ்ந்த பொற்காலம்.

பலநூறுஆண்டுகளாக ஒரே வாழ்க்கைமுறையிலிருந்த நம் பகுதி கடந்த 30 ஆண்டிற்குள் சடுதியாக மாறிவிட்டது, அறிவிக்கபடாத புது வாழ்க்கை முறையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

ஆடு,மாடு,கோழி,குருவி என சகல ஜீவராசிகளோடு வாழ்ந்த நாம் இன்று சுற்றிலும் மிண்ணணு கருவிகள்,எந்திரங்கள் என ஒரு எந்திரமாகவே காங்கரீட் காட்டில் தனியாக வாழ்கின்றோம் (வாடுகின்றோம்).

ஆறறிவு படைத்த மனிதனே இன்றைய வாழ்வில் அகதிகளாய் தடுமாறும்பொழுது, பாவம் சிட்டுகுருவிகள் என்ன செய்யும், விஷ மருந்து தெளிக்கபட்ட தானியங்களை தின்ன கூடாது என்றோ, செல்போன் கோபுரத்திற்கும் ஆலய மாடத்திற்கும் வித்தியாசங்களோ அவற்றிற்கு தெரிவதில்லை.

நவீன அடுக்குமாடி குடியிருப்பில் புல்கூட செயற்கைதான் எனும்பொழுது இயற்கை குருவியை அனுமதிப்பது யார்?, இதுதான் சுத்தமான வீடு என மேற்குலகம் அறிவித்து விட்டால் நாமும் அதனை தலைமேல் கொண்டாடும் காலம்.

வீடு சுத்தமாக இருக்கவேண்டும், மரங்களையும் வெட்டவேண்டும்,காலி இடமெல்லாம் கட்டடம் கட்டவேண்டும், புறம்போக்கு நிலமென்றாலும் லஞ்சம் கொடுத்து வளைக்கவேண்டும்…மரங்கள் கூடவே கூடாது, பறவைகள் கூடு கட்ட லாயக்கில்லாத முள்மரங்களை அப்புறபடுத்தும் திட்டமும் இல்லை அவை இந்தியாவில் லஞ்சத்தைவிட வேகமாக ஆக்கிரமித்தாகிவிட்டது,

வேறு எங்கிருந்து சிட்டுக்குருவிகள் வாழும்??

பலபோராட்டங்களை கடந்துதான் அவை வாழ்கின்றன, சிட்டுகுருவி லேகிய பரபரப்பில் அவை பெரும் ஆபத்தில் சிக்கின, தவறான வதந்திகளில் “தேவாங்க்கு ராக்கெட் லேகியம்” (உபயம் எம்.ஆர் ராதா) போல, சிட்டுகுருவிகளை பெருமளவு உலகமிழந்தது.

இன்று அதே லேகியங்களை பல மருத்துவர்கள் வேறுபெயரில் தொலைகாட்சியில் விற்றுகொண்டிருப்பதால், சிட்டுகுருவிகளுக்கு கொஞ்சம் ஆறுதல்.

இந்த பரபரப்பான உலகில் அவற்றை பற்றி கவலைபட யாருமில்லை, அவற்றை என்றல்ல தன்னலம் த‌விர வேறு எதையும் மனிதன் யோசிப்பதில்லை,

சில குடும்பங்களில் பூர்வீக‌ சொத்தெல்லாம் தனக்குமட்டும் வேண்டும் என பகிரங்கமாக சண்டையிடும் மகனை போல, இந்த பூமி தனக்கு மட்டும் உரியது என்று மனிதன் நினைத்து கொள்கிறான்,

பிற உயிரினங்களுக்கும் இந்த பூமியில் உரிமை உண்டு என்பதை மறந்து விடுகிறான்.

சிட்டுகுருவி என்றல்ல, மிளகு காய்த்து பழுக்கும் காலங்களில் பறந்து வரும் கிளிகூட்டம், நாற்றுநட்ட வயல்களில் வரும் கொக்குகூட்டம், கொழுந்து விட்ட செடிகளை கடிக்க வரும் முயல்கள், நில‌கடலையை பதம்பார்க்க வரும் வெள்ளெலி கூட்டம், பனை மரங்களை கொத்தும் மரங்கொத்தி, மேய்ந்துகொண்டிருக்கும் ஆடுகள்,மாடுகள் மேல் அமர்ந்து சில பூச்சிகளை தின்னும் சில பறவைகள் என காணாமல் போனவைகள் நிறைய உண்டு.

தமிழகத்தில் நிறைய நரிகளும்,மரநாய்களும் இருந்ததாம், நம்பித்தான் ஆகவேண்டும் 40 ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்ததாக பெரியவர்கள் சொல்கின்றார்கள்,

அதனை போல இங்கெல்லாம் நிறைய சிட்டுகுருவிகள் இருந்தது என வருங்காலத்தில் நமது பகுதிகுழந்தைகளிடம் சொல்லகூடிய நிலையை நினைத்தால் மிக நடுக்கமாகத்தான் இருக்கிறது அப்படி ஒரு நிலை வரவேகூடாது,

உறுதியாக‌ சொல்லலாம், இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, எல்லா உயிர்களும் வாழவே இறைவனால் படைக்கபட்டிருக்கிறது, அவைகளை வாழ விடுவது மனிதனின் கடமையே.