காதலர் தினம்

போராடங்களுக்கு பஞ்சமில்லா நாடு இந்தியா, ஆனால் எதற்கு போராடவேண்டுமோ அதற்கு நிச்சயம் போராடமாட்டார்கள், அதாவது விட்டுவிடலாம் ஆனால் சில போராட்டங்களுக்கு மூளையினை விற்றுவிட்டு முட்டாள்களாக வருவார்கள்

அதிலொன்று காதலர் தின எதிர்ப்பு போராட்டம்

இவர்கள் சொல்வதென்ன? காதலர் தினம் இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது. நாங்கள் கலாச்சாரம் காக்க கிளம்பியவர்கள் விடமாட்டோம்

இந்திய கலாச்சாரம் காதலுக்கு எதிரானதா? நிச்சயம் இல்லை பண்டைய இந்தியா காதலை வாழ்வின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தது

அதனால்தான் அதன் அழியா காவியங்களில் எல்லாம் காதலுகொரு இடமிருந்தது, அது ராமாயணம் ஆனாலும் சரி, சாகுந்தலை போன்ற காவியமானாலும் சரி. காதல் அதில் கலந்திருந்தது

மீராவின் காதலும், ஆண்டாளின் காதலும் , பக்தி மிஞ்சிய விஷயங்கள் என‌ கருதபட்டது. சந்தேகமிருப்பின் வைரமுத்துவிடமோ ஜீயரிடமோ கேட்கலாம்

அந்த மரபில் வந்ததால்தான் இன்றுவரை இந்தியாவின் எல்லா மொழி திரைபடங்களிலும் காதல் ஒரு தவிர்க்கமுடியா விஷயமாகின்றது

பண்டைய இலக்கியங்களை விடுங்கள். இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேர் இந்துமதம்

அதன் தெய்வங்களை கவனியுங்கள். அவை காதல் செய்யும் கசிந்துருகும், உருகி தவிக்கும், போரிட்டு மாலை சூடும்

மணவாழ்வினை வெறுக்கும் பிள்ளையார், ஆஞ்சநேயர் போன்ற சாமிகள் கூட காதலை சேர்த்து வைக்கும்.

இந்துமதம் வாழ்வின் எல்லா உணர்வுகளையும் கடவுளில் காணும் மதம், மற்ற எந்த மதத்திற்கும் இல்லா சிறப்பு அது

காதல் மனைவி இல்லா வாழ்வு முழுமையடையாது என்பதால்தான் முக்கிய தெய்வமெல்லாம் மனையாளோடு வீற்றிருக்கின்றது

ராமனின் ஒரே காதலை போற்றிய இந்துமதம், கண்ணனின் பல திருமணங்களையும் ஏற்றது. ஏன் பாஞ்சாலிக்கு கூட 5 கணவன்களை ஏற்றுகொள்வதில் அதற்கு தயக்கமில்லை

இப்படியாக காதல் எனும் மானிட வாழ்வின் அங்கம் இந்தியர்களின் மதத்திலும் கலாச்சாரத்திலும் பெரும் இடம் பிடித்திருந்தது. இசை, பக்தி, சிற்பம், ஓவியம் என கலைகளில் எல்லாம் அதனை கொண்டாடினார்கள்

வீடுவிட்டு காடு சென்ற முனிவர்களுக்குமே காதல் வந்தது, அவர்களும் துறவில் காதலை ஒரு அங்கமாக்கினார்கள். புராணம் சொல்கின்றது

அற்புதமான காதல்களை சொன்ன இந்துமதம், தவறான காதலின் விளைவுகளையும் சொல்ல தவரவில்லை

இந்திரன் அகலிகை , சந்திரன் தாரா , வாலி , ராவணன் கதை எல்லாம் அதன் விளைவுகளை சொல்லி எச்சரித்தன‌

இந்திய கலாச்சாரம் என்பது இதுதான் ,

இந்த மரபில்தான் அழியா காவியமான தாஜ்மஹால் நிலைபெற்றது. ஷாஜகான் ஆப்கானிய வாரிசாக இருக்கலாம் ஆனால் அவன் சுவாசித்தது இந்திய காற்று. அக்காற்றில் கலந்திருந்த காதல் அவன் ரத்ததிலும் கலந்தது.

தமிழகம் இன்னும் சாலசிறந்திருதது அகம், புறம் என வாழ்வினை பிரித்தபொழுது அகம் முழுக்க காதலையே சொல்லிற்று

வள்ளுவன் ஒருபடி மேலே சென்று இன்பத்து பால் என்றொரு பிரிவினையே பாடினான்

இன்னும் நளவெண்பா முதல் எத்தனையோ அற்புதமான காதல் காவியங்கள் எல்லாம் தமிழில் கொண்டாடபட்டன, கம்பராமாயணம் இன்றளவும் கொண்டாட காரணம் காதலுக்கு கம்பன் சொன்ன வரிகளாலேதான்

இப்படி காதல் இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேரில் கலந்த விஷயம், இதற்கொரு நாள் கொண்டாடுவதை இவர்கள் எதிர்கின்றார்களாம்

ஆக இவர்கள் இந்திய கலாச்சார காவலர்களாக இருக்க முடியாது, ஆப்கானிய தாலிபான்களாக இல்லை அல்கய்தாவின் பிரதிநிதிகளாகவே இருக்க முடியும்

உண்மையான இந்திய கலாச்சாரம் அறிந்தவன், உண்மையான இந்து இந்நாளை எதிர்க்கமாட்டான்

காதல் எங்கு இல்லை? எல்லா மதங்களிலும் இருந்தது

ஒருவேளை செத்தாலும் சேர்ந்து சாகலாம் என ஏவாள் ஆதாமுக்கு பழம் கொடுத்த காலத்திலே காதல் இருந்தது, பைபிளின் பழைய ஏற்பாடுகளை பார்த்தால் கடவுளினால் தேர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு கூட காதல் இருந்திருக்கிறது, “இது பாவம் உன்னோடு பேசமாட்டேன் போ” என கடவுள் சொல்லவே இல்லை.

ஆபிரகாமும், தாவீதும், சாலமோனும் செய்யாத காதல்கள் இல்லை, ஏராளமான காதல்கள் , பல முறையற்றவை ஆனாலும் கடவுள் ஆசீர்வாதமே கொடுத்தார்

வாலன்டைன் என்பவர் யார்? ரோமாபுரியில் அன்று படைவீரர்கள் கன்னியரிடம் மயங்கி கிடக்கின்றனர் என கொதித்த அரசன் திருமணம் செய்ய தடை செய்தான்

வாலன்டைன் எனும் பாதிரி அதை மீறி அவர்களுக்கு திருமணம் செய்து சேர்த்து வைத்தார், விடுவானா அரசன் கொன்றுவிட்டான்

காதலரை சேர்த்து வைக்க உயிர்விட்ட அவரின் நினைவுநாளில் காதலர்கள் அவரை நினைவு கூறுகின்றனர்

காதலர் நாள் கொண்டாடுவதில் வெண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம், ஆம் அந்த அளவு உன்னத காதல்கள் இங்கு கொட்டி கிடக்கின்றன‌

“அன்னலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்” என்ற மங்க்காத வரியை தந்த கம்பனைவிடவுமா காதலை வாலன்டைன் உயர்வாக சிந்தித்து விட்டார்?, அகநானூறு பாடல்களைவிடவுமா காதலை உயர்வாக சொல்லமுடியும்?

கம்பனை விடுங்கள், காதலுக்காக உயிர் துறந்தான் அவர் மகன் அம்பிகாபதி அவனுக்கோர் நாள் உண்டா?,

உலக சரித்திலே முதன் முறையாக காதலுக்கு ஒரு அழியா சின்னம் கட்டிய மன்னன் ஷாஜகானுக்கு கூட ஒரு நாள் இல்லை, அவரது முன்னோரான அமரா காதலர் வரிசையில் இடம்பெற்ற சலீமுக்கு ஒரு மணிநேர நினைவு கூட இல்லை

நவீன இந்திய ஏவுகனைக்கு தன் பெயர் இடம்பெயர செய்த பெருவீரன் “பிருத்வி”ராஜன் காதலித்த பாவத்திற்காக கண் இழந்ததையும், தேசிங்குராஜன் ராஜ்யம் இழந்ததையும் சொல்வதற்கும் யாருமில்லை (ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கவனிக்க)

ஆக காதலில் சிறந்த காதல் இது இந்நாட்டின் மிக சிறந்த காதலை இந்நாளில் கொண்டாடுங்கள் என்றாவது இந்த கலாச்சார காவலர்கள் சொல்லலாம், மாறாக கொண்டாடவே கூடாது என்றால் எப்படி?

மேற்சொன்னவை எல்லாம் சில எடுத்துகாட்டுகள் இன்னும் சொல்ல ஆரம்பித்தால் சொல்லிகொண்டே செல்லலாம். கடவுள் முதல் முடி சூடிய அரசன், கடைசி குடிமகன் வரை சொல்ல ஏராளமான காதல் வரலாறுகளை கொண்டது இந்தியா

காதலை இன்றும் உயர்வாக பார்க்கும் தமிழ் சமூகமிது,

இன்று எவ்வளவோ முக்கிய பிரச்சினைகள் பத்திரிகைகள் வெளியிட்டாலும், நயந்தாராவின் காதல் செய்திகளுக்கு இருக்கும் வரவேற்பே தனி.

தமிழகத்தின் ஒரு வட்டாரத்தை எடுத்துக்கொண்டால் கூட‌ ஒருதலைராகம், சுப்பிரமணியபுரம்,நாடோடிகள்,முதல் மரியாதை போல‌ எவ்வளவோ திரைகலைஞர்கள் சொன்ன சொல்லாத கதைகள் உண்டு.

பாரதிராஜாவும் பாலசந்தரும் அதில் பாதியை கூட சொல்லியிருக்கமுடியாது.

எல்லா ஊரின் தெருக்களும், சொன்ன அல்லது சொல்லாமலே போன காதலின் வலியினை சுமந்துகொண்டே நிற்கின்றது, கல்லறைகளில் கூட காதலின் சுவடுகள் உண்டு

கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தில், எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து வைத்து சாகும்வரை சாபம் வாங்கும் எத்தனையோ வாலன்டைன்கள் உண்டு.

“யான்நோக்குங்கால் நிலம்நோக்கும் யான் நோக்காங்கால் 
யான்நோக்கி மெல்ல நகும்”

என்ற குறளுக்கு இலக்கணம் எழுதுவது போல‌ எந்நாளும் காதல் வாழும்,அது அப்படித்தான்.

உலகம் கொண்டாடும் நாளில் இந்தியரும் கொண்டாடுவதில் தவறில்லை, ஒருவேளை கொண்டாடவேண்டுமென்றால் வாலண்டைன் நினைவுநாளில் யாருக்கு இந்த காதலர் சமூகம் நன்றி சொல்லவேண்டும்?

காதல் திருமணத்திற்கு உதவி செய்யும் கூட்டம், நடத்தி வைக்கும் குருக்கள், சட்ட பதிவாளர்கள் என வாலண்டைன் போல காதலுக்கு உதவும் அவர்களுக்குத்தான் சொல்லவேண்டும்,

அப்படி யாரும் சொல்லியதாக தெரியவில்லை

எம்மை பொறுத்த வரையில் தெய்வீக காதல் என்பதில் எல்லாம் அர்த்தமே இல்லை, “ஒருவரின் விதி அவர்கள் விழி வழியே தீர்மானிக்கபடுகின்றதன் பெயர்தான் காதல்” எனும் தத்துவத்தை சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம்

ஜெயகாந்தன் சொல்வார், “காதல் என்பது அற்பமானது, அது தொடங்கவும், முறியவும் மிக அற்ப காரணம் போதும்”

அப்படி அற்பதனமாக தொடங்கி அற்பமாகவே முடியும் காதல் உண்டு

பெரும்பாலானா மானிட காதல்கள் இன்றுவரை அப்படியே..

காதல் என்பது அவரவர் மனதினை பொறுத்த விஷயம் ஆனால் வாழ்வின் தவிர்க்க முடியா விஷயம்

ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலிப்பது ஒரு வகை காதல், பல பெண்களை பார்த்துவிட்டு பார்த்ததில் சிறந்தது இவளுடனான காதல் என சொல்வது இன்னொரு வகை

ரோமியோ- ஜூலியட், லைலா- மஞ்னு, அம்பிகாபதி- அமரவாதி, சலீம் -அனார்கலின், நளன்- தமயந்தி போன்றோரின் காதல் முதல் ரகம்,

ஷாஜகான் முதல் ஜெமினி கணேசன் போன்றோரின் காதல் இரண்டாம் ரகம்.

கிளியோபாட்ராவிற்கு ஆண்டனி மீது வந்தது ஒரு வகையான காரிய காதல், கமீலா பார்க்கருக்கு சார்லஸ் மீது வந்த ரகம அது.

ஆக எல்லா வகை காதலும் வரலாற்றில் நிரம்ப கிடக்கின்றது.

இந்த உலகின் காதல் வரலாற்றினை எடுத்துகொண்டால் மிக உன்னதமாக காதல் என ஒரு மாவீரனின் காதலை சொல்லலாம், அது பிரென்ஞ் மாவீரன் நெப்போலியனின் காதல்.

பொதுவாக பிரான்ஸ் மக்கள் ரசித்து வாழ்பவர்கள், உணவு முதல் உறவு வரை அவர்கள் ரசனை பெரிது.

அந்த பிரான்சுக்கு அகதியாய் வந்த விதவைதான் ஜோசப்பைன், பெரும் அழகி அல்ல, ஏன் அழகி என்ற வரையரைகுள்ளே அவள் வரமாட்டாள். மெலிந்த தேகமும், எடுப்பான பற்களும், ஒடுங்கிய முகமும் கொண்ட சராசரிக்கு கீழான பெண், ஆனால் சாதாரண படைவீரனாக நெப்போலியன் அவளை சந்தித்தபொழுதே காதல் ஊற்றேடுத்தது

அவன் அதன் பின் பெரும் உயரங்களுக்கு சென்றாலும் அவளுடனான காதல் மாறவில்லை, நொடியும் விழித்திருக்கும் சாகாமிக்க போர்களத்திலிருந்து அவன் ஜோசப்பினுக்கு எழுதிய கடிதங்கள் அவன் அடிமன காதலின் சாட்சி

இவ்வளவிற்கும் ஜோசப்பைனுக்கும் சிலருடன் தொடர்பிருந்திருக்கின்றது, நெப்போலியனும் நம் கவிஞர் கண்ணதாசன் வகையறா. அரசு வாரிசுக்காக திருச்சபை மரபுபடி இன்னொரு திருமணமும் செய்தவன் அவன்.

ஆனாலும் எத்தனை பெண்களை சந்தித்தாலும் என் மனம் ஜோசப்பினை சந்தித்தால்தான் மகிழ்ச்சியும் திருப்தியும் கொள்கின்றது என நெப்போலியன் சொன்னதே அவன் காதலுக்கு சாட்சி

மரிக்கும் பொழுதும் அவன் சொன்ன வார்த்தை ஜோசப்பின். உலகின் மிக அதிசயமான ஆழமான காதல் நெப்போலியனுடையது.

ஹிட்லரின் காதல் ஆச்சரியமானது அவனுக்கும் மனம் இருந்திருக்கின்றது

பரிதாபத்திற்குரிய காதல் வரிசையில் நேதாஜி எமிலி காதலும், பிரபாகரன் மதிவதனி காதலும் உண்டு

தமிழால் காதலித்து சிக்கிய Kavignar Thamarai போன்ற சில காதல்களும் உண்டு

தமிழுக்காய் கலைஞரை காதலித்து வாழ்வுபெற்ற ராசாத்தி அம்மாள் போல சில காதல் உண்டு

எமக்கு பெரும் காதல் அனுபவம் எல்லாம் இல்லை, காரணம் காதலிக்கபடுவதற்கு சில குணங்களும் தகுதிகளும் வேண்டும், சசிகலா போல ஒரு வித கமுக்கம், நடராஜன் போல தந்திரம், பன்னீர் போல பணிவு, கலைஞர் போல சில உருக்கம், மோடி போல சில மிரட்டல் கண்ணீர் என பல விஷயங்கள் வேண்டும்

ஜனகராஜினை போல சிரித்துகொண்டே இருந்தாலோ, அல்லது மனதில் பட்டதை விஜயகாந்த் போல சொன்னாலோ, அல்லது எல்லாவற்றிலும் நுழைந்து வைகோ போல , முக ஸ்டாலின் , தமிழிசை பேசினாலோ அது காதலுக்கு உதவாது

“இவன் அதற்கு சரிபட மாட்டான் என கிளம்பிவிடுவர்கள்”

அதனால் இந்த இம்சைகளை எல்லாம் நமக்கு வாய்க்கவில்லை, அடுத்தவன் காதலை வாழ்த்தியதோடு சரி.

இந்நாளில் வாழ்த்துகுரியவர்கள் யார்? யாரை வாழ்த்த வேண்டும்?

காதலுக்கு உதவுபவர்கள், அவர்களுக்காக அடிவாங்குபவர்கள், காவல் நிலையத்தில் டின் கட்டபட்டவர்கள் என அவர்களுக்கும்

காதலை அங்கீகரித்து திருமணம் செய்துவைக்கும் எல்லா குருமார்களுக்கும், பதிவாளர்களுக்கும், நாடோடிகள் நண்பர்கள் போல திரிபவர்களுக்கும் வாலண்டைன் நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்

உண்மையான வாழ்த்து அவர்களுக்குரியது, வாலண்டைனின் காரியங்களை அவர்கள்தான் முன்னெடுத்து செல்கின்றார்கள், வாழ்த்துக்கள்

இந்திய கலாச்சாரத்தில் ஒன்றான காதல் நிச்சயம்கொண்டாடி தீர்க்க வேண்டிய விஷயம், கொண்டாடினால்தான் அது கலாச்சார காவல் ஆகுமே தவிர , தடுத்தல் என்பது கலாச்சார‌ துரோகம்.

இதனால்தான் பாரதி “ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே” என அழைத்தான்

அவன் தமிழர், தெலுங்கர், இந்தியர் என்றெல்லாம் அழைக்கவில்லை மாறாக உலகத்தீரே என்றே அழைத்து சொன்னான், அன்றே கொண்டாட அழைத்தான்.

அந்த மகாகவியின் வாக்குபடி உலகம் காதலர் தினத்தை கொண்டாட போகின்றது

எல்லா காதலரும் கொண்டாடலாம்

இதனை கலாச்சாரம் எனும் பெயரில் எதிர்க்கும் சிந்தனையில்லா கூட்டத்திற்கு பலத்த கண்டனங்களை தெரிவித்து விட்டு, உலகின் எல்லா காதலர்களுக்கும் சங்கம் வாழ்த்தினை தெரிவிக்கின்றது,