நாயன்மார்கள் : 01- அதிபத்தர்.

அந்த நுளமபாடி சோழ நாட்டின் கடற்கரையில் இருந்த ஊர். நாகப்பட்டினம் எனும் அன்றைய பெருநகருக்கண்மையில் இருந்தது. அது மீன்பிடி கிராமம், மீனும், சங்கும் , சிப்பியும், சங்கினை அறுத்து செய்த‌ வளையலும் நிரம்பக் கிடைக்கும் ஊர். பரதவர்கள் நிரம்பிய குடியிருப்பு.

அந்த பரதவக் கூட்டத்தில் ஒருவர் தான் அந்த அடியவர். அவரின் இயற்பெயர் அறியப்படவில்லை. ஆனால் அவரின் இயல்பான காரியத்தால் அதிபத்தர் என்ற காரண பெயர் வந்தது. இயல்பான காரியம் என்னவென்றால் வேறு ஒன்றுமில்லை. சிவன் மேலான பக்தி, யாராலும் காட்டமுடியாத பக்தி, மகா அர்ப்பணிப்பான பெரும் அன்பான பக்தி.

இதனால் அவர் அதிபக்தர் என அழைக்கப்படலானார், அது அதிபத்தர் என திரிந்து நிலைபெற்றுவிட்டது.

அதி என்றால் மிகப் பெரிய என்ற பொருளில் வரும். அதிவீரர், அதிமதுரம், அதிமேதாவி, அதிபர் எனும் வரிசையில் அதிபத்தர்.

(பத்தன் என்பதன் பொருள் மாசுமறுவற்ற குற்றமற்றவன் என்பது இன்னொரு விஷயம்.)

அந்த அதிபத்தர் மிகப்பெரும் சிவனடியார், கடலில் மீன்பிடித்து வந்து விற்பது அவரின் தொழில், அனுதினமும் காலை சிவனை நினைந்து வழிபட்டு, மடியேறி கடல் புகுந்து, வலைவீசி, மீன்பிடித்து அந்த மீன்களில் மிகப் பெரியதும் நல்லதுமான மீனை சிவனுக்கு அர்ப்பணமாக கடலிலே சிவன் நாமத்தை சொல்லி விட்டுவிடுவார்.

அக்கால மரபு அது. விவசாயி என்றால் தன் விளைச்சலில் சிறந்ததை கோவிலுக்கு செலுத்துவான். ஆடுமாடு வளர்ப்பவன் என்றால் மந்தையில் சிறந்ததை கோவிலுக்கு காணிக்கையாக்குவான்.

எது உன்னில் இருப்பதில் பெரிது என கருதுகின்றாயோ அதை சிவனுக்கு கொடு என்பது தான் சைவ பூமியான தமிழக தத்துவம், எல்லாம்வல்ல பரம்பொருளுக்கு தன்னிடம் இருப்பதில் மிக‌ச் சிறந்ததை கொடுப்பது அந்நாளில் உணர்வில் கலந்த விஷயம்.

இவரோ மீனவன், அவருக்கு கோவில் தெரியாது, வேதம் தெரியாது, சொல்லிக்கொடுப்பார் யாருமிலர், சொன்னாலும் புரியாது, விரதம் தெரியாது, யாகம் தெரியாது, வழிபடத் தெரியாது. சிவனுக்கு லிங்க உருவம் எதனால் என்றும் தெரியாது.

அவருக்கு தெரிந்ததெல்லாம் சிவன் முழுமுதல் கடவுள், அவனே வாழ வைக்கின்றான், அவனே கடலாக ஆடுகின்றான், அவனே படகாக வருகின்றான், அவனே மீன்பிடித்து தான் வாழ உடன் இருக்கின்றான். வாழ்பவனும் அவனே, வாழ வைப்பவனும் அவனே..

அவருக்கு சகலமும் சிவன், சிவனன்றி வேறல்ல, எல்லாம் அவனே, எந்நாளும் அவனே.

அப்படி ஒரு அன்பும் , பக்தியும் சிவன் மேல் அவருக்கு இருந்தது.

அனுதினமும் பிடிபடும் மீன்களில் தலையானதை இழப்பது என்பது பெரும் விஷயம். ஆனால் சிவன் மேலான அன்பு அவரை அதை செய்ய வைத்தது, கொஞ்சமும் தயக்கமின்றி சிவன் கொடுத்தது சிவனுக்கே என அன்போடும் மகிழ்வோடும் அனுதினமும் மிகப் பெரிய நல்ல மீனை கடலில் விட்டார்.

ஒருநாள் கூட அவர் அதில் தவறவில்லை, தன் அன்றாடக் கடமையாக அதைக் கருதினார். சுற்றி இருப்போர் பக்தியின் பித்து நிலை என்றார்கள், வாய்ப்பைத் தவறவிடும் மடையன் என்றார்கள், கடவுளின் ஆசியினை கடலில் எறியும் பைத்தியம் என்றார்கள்.

அவரோ அவர்போக்கில் தன் கடமையில் சரியாக இருந்தார். அந்த மீனின் மதிப்போ பணமோ எதுவும் அவருக்குத் தெரியவில்லை. தன் மீன்களில் எது மிக மதிப்பானதோ , எது உயர்வானதோ அதை சிவனுக்கு கொடுப்பதில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி, ஒரு திருப்தி.

அதில்தான் திருப்தி.

“வெறுங்கையோடு கடலுக்கு செல்கின்றேன், மீன்கள் சிவன் கொடுப்பது, அதில் மிகச் சிறந்ததை அவனுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன். அது சாஸ்திர மீறலா, விதிமீறலா என்பதெல்லாம் தெரியாது. என்னிடம் இருப்பதில் உயர்ந்ததைக் கொடுக்கின்றேன்” என்பது அவர் நம்பிக்கை.

வில்வ இலை தூவி இன்னும் பல ஆகம முறைகளில் வழிபட வேண்டிய சிவனை மீனை கடலில் விட்டு வழிபடுவது அவரை அவமானபடுத்துவதற்கு சமம் , அபச்சாரம் என்ற குரல்கள் அவர் காதில் விழுந்தாலும் என்னிடம் இருப்பதில் உயர்ந்ததைக் கொடுப்பேன் என அவர்போக்கில் இருந்தார்.

அனுதினமும் காணிக்கையாய் சிறந்த மீனை கொடுத்தாரே தவிர சிவனிடம் அவர் கோரிக்கை ஏதும் வைக்கவில்லை.

பிரதிபலன் பார்ப்பது உண்மையான பக்தி ஆகாது , அது வியாபாரம்.

உலகாளும் சிவனுக்கு இவரைத் தெரியாதா.. அனுதினமும் இவர் பக்தியாய் கடலில் சமர்ப்பிக்கும் மீனை ஏற்றுக்கொண்டே வந்தார்.

ஒரு பாமரன் அதுவும் பரதவன், கடலும் படகும் தவிர ஏதும் அறியாத அவன் காட்டும் அன்பில் நெகிழ்ந்தார் .

ஆனால் ஒரு சாஸ்திரமும் , வேதமும் அறியா பாமரன் ஒருவன், மிகப்பெரும் சக்தியினை மனதால் உணர்ந்து, அதில் பக்தி கொண்டு, அனுதினமும் அந்த பரம்பொருளுக்கு காணிக்கை சமர்ப்பிப்பது அவரை உருக்கியது.

எல்லாம்வல்ல பரம்பொருள் தூய்மையான அன்போடு தன்னை வணங்கும் மனிதனை நோக்கி அன்போடு ஓடிவரும், அவனை மனதால் கொண்டாடும். அவன் அருகேதான் நிற்கும். அவன் மனதை கண்டு மகிழும்.

மனிதனால் தான் அதை உணரமுடியாதே தவிர, மனதால் தேடி உயிரால் குரல் கொடுத்தால் சிவம் ஓடிவரும்.

அதிபத்தரின் உன்னத பக்தியில் உருகிய சிவன், அவரின் மாபெரும் பக்தியினை உலகுக்கு உணர்த்த‌ சித்தம் கொண்டார்.

அதற்காக இதோ பக்தன் என சொல்லிவிட முடியாது, அவனின் பக்தி நிரூபிக்கப்பட வேண்டும், மகா இக்கட்டான நேரத்திலும் அவனின் பக்தி நிலையாய் நிற்க வேண்டும், எந்நிலையிலும் அவன் அன்பு மாறவில்லை என்பது தெரிய வேண்டும்.

யாருக்கு தெரியவேண்டும் ?சிவனுக்கா? இல்லை. உலகத்தாருக்கு .

அப்படி ஒரு சூழல் வந்தாக வேண்டும், பரம்பொருள் அப்படி உருவாக்கும் சூழலின் பெயர்தான் சோதனை, பறவை தன் குஞ்சு இனி பறக்கும், கீழே விழாது என எப்படி நம்பும் நிலை வந்தபின் பறக்க கற்று கொடுக்குமோ, கங்காரு எப்படி தன் குட்டி இனி நடக்கும் என தெரிந்தபின் அதை இறக்கிவிடுமோ, அப்படி தன் பக்தன் நிச்சயம் வெல்வான் என அறிந்த பின்பே சோதனையினை கொடுப்பார் சிவன்.

அதுவரை பறவை தன் செட்டைகளில் குஞ்சுகளை காப்பது போல, கங்காரு தன் பையில் குட்டியினை காப்பது போல் காத்து கொண்டிருப்பார்.

யாருக்கு எவ்வளவு தாங்கமுடியுமோ அவ்வளவுதான் சோதனை, தாங்கமுடியா சோதனை என எதுவுமில்லை, அன்பின் ஆழம் எவ்வளவோ அந்த அடிவரை சோதிப்பார் சிவன்.

அப்படி அதிபத்தருக்கும் சோதனை ஆரம்பித்தது, அவர் வலையில் மீன்கள் குறைய ஆரம்பித்தன. அதிபத்தர் எந்த சலனமும் கொள்ளவில்லை கிடைத்ததில் நல்ல மீனை தன் நன்றிகடனாய் கடலில் இட்டு கொண்டே இருந்தார்.

ஆயிரம் மீன்கள் ஐநூறானது, ஐநூறு நூறானது, நூறு பத்தானது. அந்நிலையிலும் அதிபத்தர் இன்முகத்தோடு சிவனுக்கு ஒரு மீன் அளித்து கொண்டே இருந்தார்.

மீன்கள் குறைய குறைய வீட்டில் செல்வம் குறைந்தது, வறுமை முளைவிட்டது, பணியாளர் இல்லை எங்கும் பற்றாக்குறை.

வீட்டில் வறுமை வளர வளர பிடிபடும் மீன்கள் எண்ணிக்கை குறைந்து இரண்டு என்ற எண்ணிக்கைக்கு‌ வந்தது, அப்பொழுதும் இரண்டில் எது நல்லதோ அதை சிவனுக்கு கொடுத்தார் அதிபத்தர்.

சோதனையின் உச்சகட்டம் வந்தது, வீட்டில் ஒரு நேர உணவு தடுமாற்றம் வந்தது, கடனும் இன்னும் சிக்கலும் தளைத்து வளர்ந்தன. இல்லாமை எங்கும் நிறைந்திருந்தது.

அப்பொழுது கடலுக்கு சென்ற அதிபத்தருக்கு ஒரு மீனே கிடைத்தது, அந்நிலையிலும் “என் வறுமை என்னோடு, சிவன் பொருள் சிவனோடு” என அதையும் கடலில் சிவனுக்காக இட்டு வெறும் கையாக திரும்பினார்.

வீட்டின் வறுமை அவருக்கு வருத்தம் கொடுத்தது, வீட்டில் உணவு கூட இல்லை என்பது கவலை கொடுத்தது, மீன்கள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது, கண்களை அடிக்கடி துடைத்து கொண்டார்.

ஆனால் சிவனுக்கு கொடுக்க ஒரு மீன் கிடைத்ததே எனும் அந்த சந்தோஷம் அவரை எல்லா கவலையினையும் மறக்க வைத்தது

ஆனால் ஊர் உலகம் விடுமா? “சிவனுக்கு அள்ளி அள்ளி கொடுத்தாயே அதிபத்தா, உன் முடிவு என்ன? பைத்தியகாரதனத்தின் உச்சம் நீ. இப்பொழுது தெருவில் நிற்பது நீயா? சிவனா?

அவனுக்கு அபிஷேகமும் ஆராதனையும் எக்காலமும் உண்டு, உனக்கும் உன் குடும்பத்துக்கும் என்ன உண்டு?, காலம் பார்த்து கடல் கொடுத்ததை நாசமாக்கிய கயவன் நீ..” என காதுபட சொன்னார்கள்.

“சிவன் கொடுத்தான், சிவனே எடுத்தான். எனக்கு இப்பொழுது அவனுக்கு கொடுக்க ஒரு மீன் கிடைகின்றதே, அதுவரை அவன் என் கடமையினை சிவன் சரியாக இயக்குகின்றான்” என கொஞ்சமும் நழுவா உறுதியில் இருந்தார் அதிபத்தர்.

அவரும் நம்பிக்கையாய் கடலுக்கு செல்வதும், ஒரு மீன் மட்டும் கிடைப்பதும் அவர் அதையும் மகிழ்வோடு சிவனுக்கு கொடுப்பதும் வாடிக்கையனானது.

இந்த நிலையில் கொடும் வறுமை அவரை வாட்ட உற்றார் விலகினர், பந்தம் விலகியது, குடும்பமும் ஒதுக்கியது, கட்டுமரத்திலே தூங்குவதும், யாசக உணவு உண்பதுமாக காலம் கடத்தினார் அதிபத்தர்.

அப்பொழுதும் ஒரு மீன் கிடைப்பதும், அதை அவர் சிவனுக்கு படைப்பதும் நிற்கவில்லை

சிவனும் ஆட்டத்தை நிறுத்தவில்லை, அதிபத்தரும் கொஞ்சமும் வாடவில்லை, அந்த பாச பக்தி விளையாட்டு தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஆட்டம் அதன் போக்கில் இருந்தது, இருவரும் சளைக்காமல் ஆடினர். கடைசியாக மிகபெரும் சோதனை ஒன்றை காட்டிவிட்டு ஆட்டத்தை முடிக்க திருவுளம் கொண்டார் சிவன்.

ஆம், மிக மிக இக்கட்டான சோதனை வைக்கப்பட்டது. சிவன்மேல் அதிபத்தர் கொண்ட அன்பினை உலகுக்கு நிரூபிக்கும் சோதனை அது.

அன்று ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாள், ஏதோ விழாவுக்காக கடற்கரை களை கட்டியிருந்தது, அதில் ஆர்வமின்றி வழக்கம் போல் மீன்பிடிக்க கிளம்பினார் அதிபத்தர். அவருக்காக அல்ல , மாறாக‌ ஒரு மீன் கிடைக்கும் அதை சிவனுக்கு கடலில் அர்ப்பணிக்கலாம் எனும் அதே பக்தியோடு படகேறினார்.

அதைத் தவிர என்ன தெரியும் அவருக்கு?

அன்று வழக்கம் போல ஒரு மீனுக்கு வலைவிரித்து அதிபத்தர் காத்திருக்க நெடுநேரம் ஒன்றும் சிக்கவில்லை, எந்நாளும் கிடைத்த ஒரு மீன் கூடவா இன்று சிவனுக்காக சிக்கவில்லை என வருந்திய அதிபத்தர் நெடுநேரம் காத்திருந்தார்.

நெடுநேரம் கழித்து ஒரே ஒரு மீன் சிக்கியது , ஆனால் அது மகா மகா அபூர்வ மீன்.

ஆம், அதன் செதில்கள் தங்கமாய் இருந்தன, கண்களைச் சுற்றி மாணிக்கம் ஒளி வீசியது, வாலில் ரத்தினங்கள் இருந்தன. பற்களில் வைடூரியம் ஒளி வீசிற்று. தங்க சூரியன் கையில் இருப்பது போல அதிபத்தர் கையில் அப்படி மின்னியது அந்த மீன்.

ஒரே நொடியில் ஏழ்மையின் ஆழத்தில் இருந்து கோபுரத்துக்கு அதிபத்தரை தூக்கி செல்லும் மீன் அது, ஏழு தலைமுறைக்கும் அவருக்கு தேவையானதைக் கொடுக்கும் மீன் அது

கடலில் அதை அவர் பிடித்ததும் அக்கம்பக்கப் படகுக்காரர்கள் வந்தார்கள். இத்தோடு அதிபத்தரின் வறுமை ஒழிந்தது என்று கூவினார்கள். சிவன் அவரை கைவிடவில்லை என்றார்கள், தங்கள் வலையினை சோகமாக நொந்து கொண்டார்கள்.

அதிபத்தரின் நிலை ஒருவகையில் சிக்கலாய் இருந்தது, உடன் இருந்த மானிடரோ அதிபத்தருக்கு வாழ்வு வந்தது, சிவன் தன் பக்தரை வாழ வைத்தான் என கூக்குரலிட்டனர், இனி சிவனுக்கு ஆலயம் கட்டி அள்ளி கொடுப்பார் அதிபத்தர் என்றெல்லாம் பேச்சுக்கள் வந்தன.

அதே நேரம் வானில் இருந்து சிவனும் பார்வதியும் பூத கணங்களும் நந்தியும் அதிபத்தரை பார்த்துக் கொண்டே இருந்தனர்.

நிலைமையினை கவனியுங்கள்.

கையில் இருப்பதோ தங்கமீன், வீட்டில் இருப்பதோ கொடும் வறுமை. நிச்சயம் இது சிவனின் கருணை, சந்தேகமில்லை. நாளெல்லாம் சிறந்த மீனை அதிபத்தர் கொடுத்ததற்கு, ஒரே மீனையும் கொடுத்த பலனுக்கு, அந்த பக்தனுக்கு சிவன் கொடுத்த பெரும் பரிசு.

ஆனால் கிடைத்திருப்பது ஒரு மீன், இதை எடுத்துச் சென்றால் அவரின் பக்தி பலன் எதிர்பார்த்தது என்றாகி விடும், இதுகாலம் காத்த தவம் போலி என்றாகி நொடியில் சரியும், தங்கமீனுக்காகத் தவமிருந்தான் அதிபத்தன் எனும் பழி வரும். அவரும் சராசரி பக்தனாகி விடுவார், பின் எங்கிருந்து தனித்து நிற்பது?

இந்தப் புள்ளியில் வசமாக சிக்கினார் அதிபத்தர்.

சிவன் புன்னகை பூக்க அவரை பார்த்து கொண்டிருந்தார், பூத கணங்களும் , பார்வதியும், தேவர்களும் நந்தியும் அவர் என்ன செய்ய போகின்றார் என இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு சிந்தனை.

இது பக்தியின் பரிசு என சொல்லி பெரும் கோவில் கட்டுவார் என்றது ஒரு பூதம், தன்னை நம்பிய பக்தனை சிவன் கைவிடவில்லை என அவர் புகழ் நிலைக்கும் என சொன்னது மற்றொரு பூதம்.

“கூட ஒரு மீன் கொடுத்திருக்கக் கூடாதா நாதா.. இதென்ன விளையாட்டு ” என சொல்லிக் கொண்டிருந்தார் தேவி.

அதிபத்தர் கையில் இருப்பது ஒரு மீன், அவரின் வாழ்வும் அதில்தான் இருக்கின்றது, அவர் சிவன் மேல் கொண்ட பக்தியும் அதில்தான் இருக்கின்றது.

வாழ்வா? சிவன் மேல் கொண்ட அன்பா? எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார் அதிபத்தர் என எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதிபத்தர் மீனை தூக்கிப் பிடித்தார், “சிவனே, என்னை ஆட்கொண்ட பெருமானே. எக்காலமும் என் கையில் இருக்கும் மீன்களில் எது சிறந்ததோ , அதை உனக்கு தந்தேன், இதோ மீனகளிலெல்லாம் மகா உயர்ந்த தங்கமீன் கிடைத்திருக்கின்றது.

மிக சிறந்த மீனை உனக்காக கடலில் விடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். இதோ எடுத்துக் கொள், ஓம் சிவோஹம்” எனச் சொல்லி சிவனுக்கு கடலில் அர்ப்பணம் செய்து விட்டார்.

அந்த முகத்தில் கொஞ்சமும் வருத்தமோ கலக்கமோ இல்லை, பெரும் தனபொருள் கைவிட்டு போகின்றதே எனும் சிந்தனை துளியுமில்லை.

தன் நிலை கலங்காது எந்நாளும் எப்படி மீனை சிவனுக்காய் கடலில் விட்டாரோ அப்படியே இதையும் செய்தார். அதன் விலை என்ன? பலன் என்ன? இன்னபிற லாப சிந்தனையெல்லாம் அவரில் இல்லை.

கிடைத்த பொக்கிஷமான மீனையும் சிவனுக்குப் படைத்தோம் எனும் திருப்தி மட்டும் அவரின் முகத்தில் ஒளிர்ந்தது.

அவரின் கொடிய வறுமை அவருக்கு நினைவிலில்லை, ஊரின் ஏளனமும் , சீண்டலும் அவருக்கு நினைவிலில்லை, எல்லோரும் கைவிட்டு தனிமனிதனாய், அனாதையாய், பிச்சைக்காரனாய் நின்றதும் அவருக்கு வருத்தமாக இல்லை.

எந்நிலையிலும் என்னிடம் உள்ளதில் சிறந்தது எதுவோ அதை என் அப்பன் சிவனுக்கு தருவேன் என நின்றார். அந்த மீன் அவரை மயக்கவில்லை, குழப்பவில்லை, சுயநலத்தைத் தேடச் சொல்லவில்லை.

எல்லோரும் மீனால் அவருக்கு வாழ்வு என சொல்ல, அவரோ சிவனுக்குக் கொடுக்க, மிகப்பெரும் அர்ப்பணிப்பு பாக்கியம் கிடைத்தது என்று தான் அந்த மீனைக் கண்டார்.

ஆம். அவர் அவருக்காக வாழவில்லை, அவரின் வாழ்வும், நோக்கமும், எண்ணமும் எல்லாமே சிவம், சிவம், சிவம் ஒன்றே.

அந்த அன்பு சிவனை தோற்கடித்தது, மகா தூய்மையான அன்பின் உச்ச பக்தியில் சிவனையே தோற்கடித்தார் அதிபத்தர்.

அந்த நொடி, சிவன் பெயரைச் சொல்லி தங்கமீனை அதிபத்தர் கடலில் இட்ட அந்த நொடி..

அவர் புன்னகையும் நிம்மதியும் கொண்டு , துளி சஞ்சலமின்றி அந்த தங்கமீனை சிவனுக்காக கடலில் விட , வானில் பேரொளி தோன்றிற்று, ஒளியின் நடுவில் சிவபெருமான் ரிஷபம் மேல் பார்வதியுடன் இருந்தார்.

ஊர் அறிய உலகறிய அவரின் பக்திக்குச் சான்றாக சிவனே அங்கு வந்தார், வந்து அருள் புரிந்தார். அதிபத்தர் இழந்த எல்லா வாழ்வும் திரும்பிற்று.

“எல்லாவற்றையும் விட என்மேல் அன்பு வைத்து அதை நிரூபித்தும் காட்டிய அதிபத்தா, உன் புகழ் எக்காலமும் நிலைக்கும், அத்தோடு கயிலையில் நீ என் திருவடியில் இருக்கும் பாக்கியம் பெறுவாய்..” என சொல்லி வாழ்த்தி சென்றார் சிவன்.

அதன் பின் பெருவாழ்வு வாழ்ந்த அதிபத்தர் பூமியில் வாழ்வு கடன் முடித்தபின் சிவலோகப் பதவி அடைந்தார்.

எந்நிலையிலும் கலங்காத, குறையாத சிவனின் மேலான அன்பு அவரை நாயன்மார்களில் முதலிடத்தில் வைத்தது.

63 நாயன்மார்களில் முதல் நாயன்மார் இந்த அதிபத்தரே.

இது எப்படி சாத்தியமாயிற்று?

அதிபத்தர் சாமான்யன், அவருக்கு வேதம் தெரியாது, லிங்கம் தெரியாது, அபிஷேகம் தெரியாது, மந்திரம் தெரியாது, வில்வ இலை அர்ச்சனை தெரியாது, சிவன் மூலகடவுள் என்பதைத் தவிர எதுவும் தெரியாது.

ஆனால் அந்த பக்தியில் உன்னதமாய் உறுதியாய் இருந்தார், தன் மனதில் சிவனுக்கு அவ்வளவு பெரும் இடம் கொடுத்திருந்தார். அந்த அன்பின் உறுதியே அவரை இயக்கிற்று. அந்த அன்பின் தன்மையே அவரை நாயன்மார்களில் முதல் நபராக்கிற்று, காலாகாலத்திற்கும் முதலிடத்தில் அவரை சேர்த்தும் விட்டது.

அவரை நாயன்மார் வரிசையில் சேர்த்தது கல்வியா? வேதமா? வழிபாடா? யாகமா? தவமா? எதுவுமில்லை. மாறாக அன்பு, எனக்கு உன்னை தவிர ஏதும் தெரியாது சிவனே என சரணடைந்த அந்த தூய அன்பு.

அதிபத்தரை வாழ்த்திவிட்டு கயிலாயத்தில் அமர்ந்திருந்தார் சிவன், பூலோகம் எங்கும் அதிபத்தரின் சிவ‌ அன்பும் , சிவன் அவனுக்கு காட்சி கொடுத்ததுமே பேச்சாய் இருந்தது.

சிவனை நோக்கி மெல்ல சிரித்தாள் தேவி, “என்ன சிரிப்பு இது “, என வினவினார் சிவன்.

“நாதா, உங்கள் மேல் அன்பு கொண்ட அடியவரே இவ்வளவு அன்புள்ளம் கொண்டவராக இருந்தால், அவர் வணங்கும் நீங்கள் எவ்வளவு அன்புள்ளம் கொண்டவராக இருக்க முடியும். அன்பே சிவம்” என மெல்ல சொன்னார் தேவி.

“ஆம் தேவி, எந்த சக்தியாலும் கட்டமுடியாத என்னை அன்பு எனும் ஆயுதம் கட்டிப் போடுகின்றது. இதை உணர்ந்து தான் அசுரரும் தவமிருந்து என்னை உருகச் செய்து அவர்களுக்கு வேண்டிய வரத்தை பெறுகின்றனர்.

அன்பு கொண்டு எவர்வரினும் நான் அவர்கள் யாரென பார்ப்பதில்லை, நோக்கம் பற்றி சிந்திப்பதில்லை, அன்பு ஒன்றே அவர்கள் முகவரி. அன்பு என்ற கயிறால் என்னை கட்டுகின்றார்கள், அன்பால் என்னை அடைந்து அவர்கள் கேட்கிறார்கள்.. நான் கொடுத்து விடுகின்றேன் தேவி..”

ஆம், சிவன் எனும் மிகப்பெரும் பரம்பொருள் யாகத்துக்கோ, பலிக்கோ, வழிபாட்டுக்கோ, இல்லை பிரார்த்தனைகளுக்கோ கட்டுப்படுபவர் அல்ல. அவர் அன்பே உருவானவர், அன்பு ஒன்றுக்கே அந்த சிவம் அசையும் என்பதை நிரூபித்து முதல் நாயன்மார் எனும் பதத்தை அடைந்தார் அதிபத்தர்.

அவரை தன் காலடியில் சேர்த்து அது மகா உண்மை என நிரூபித்தார் சிவன். சிவனும் சிவனடியாரும் அன்பும் வேறல்ல, மூன்றும் ஒன்றே.

இன்றும் நாகையில் வருடாவருடம் அந்தக் காட்சி நடைபெறும். திருசெந்தூர் சூர சம்ஹாரம் போல, மதுரை மீனாட்சி கல்யாணம் போல நாகையில் ஆவணிமாதம் ஆயில்ய நட்சத்திர நாள் தங்கமீனை படகில் சென்று கடலில் விடும் நிகழ்வு நடைபெறும்.

அந்த நுளம்பாடி இருந்த இடம் இப்போதைய நாகையின் நம்பிக்கை நகர் பகுதியாகும்.

நாகப்பட்டினம் நீலாயதாட்சி அம்மன் உடனுறை காயாரோகண சுவாமி கோயிலில் இருந்து கிளம்பும் ஊர்வலம் அப்படியே அமுதீசர் கோவிலை அடையும் . அமுதீசர் கோவிலில் இருந்து தங்கமீன் சிலையினை எடுத்து செல்லும் அதிபத்த நாயனாரின் வாரிசில் ஒருவர் (ஆம் அவரின் வாரிசுகள் இன்றும் உண்டு) அந்தத் தங்க மீனை சிவன் பெயரை சொல்லி கடலில் விடுவர். அப்பொழுது மேளம் இசைக்கப்படும். ஆலய மணி முழங்கும்.

மிக விமரிசையாக நடக்கும் அந்த விழாவும், திருத்தொண்டர் புராணமும் எக்காலமும் அதிபத்தரின் அன்பினை பக்தியினை சொல்லிக் கொண்டே இருக்கும்.

நாகை கடல் அலை அதிபத்தரின் நினைவினை சுமந்து கொண்டே வீசிக் கொண்டிருக்கின்றது.

கடலும் மீனும் உள்ள அளவும் நிலைத்திருப்பார் அதிபத்தர்.

மீனையும் கடலையும் காணும் பொழுதெல்லாம் அதிபத்தர் உங்கள் நினைவில் வந்தால் சிவனின் அருள் உங்களையும் வந்தடையும்.

பின்னூட்டமொன்றை இடுக