நாயன்மார்கள் 02 : அப்பூதி நாயனார்

“ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்..” :‍ சுந்தரமூர்த்தி நாயனார்

சோழநாட்டில் திருவையாறு பக்கம் இருக்கின்றது அந்த திங்களூர். அது அன்றும் இருந்தது. இன்றும் இருக்கின்றது. சந்திரனுக்கான ஆலயம் அமைந்த‌ பிரதான தலம் அது. இதனால் திங்களூர் என்றாயிற்று.

அன்று அந்த ஊரில் மதிப்பும், மரியாதையும், பக்தியுமாக, குற்றம் குறை சொல்லமுடியாத‌ சிவனடியாராக வாழ்ந்து கொண்டிருந்தார் அந்த அப்பூதி அடிகள். சிவத்தொண்டும் சிவனடியாருக்கான தொண்டுமே தன் சுவாசமாக கருதி , அதுவே தன் பிறப்பின் கடமையாக கருதி பழுதற செய்து கொண்டிருந்தவர்.

அந்த குடும்பமே சிவபக்தியின் உச்சத்தில் இருந்தது, அவரின் மனைவியும் கணவனுக்கேற்ற மகராசி. கணவன் ஏற்றுக்கொண்ட சிவதொண்டுக்கு முழு உதவியாய் இருந்து வந்தார், கணவனை போலவே முழு சிவபக்தை.

இவர்களுக்கு இரு மகன்கள், எல்லா வகையிலும் ஆசீர்வாதமான வாழ்வு அவர்களுக்கு இருந்தது.

அப்பூதி அடிகள் சிவத்தொண்டர் . ஆனால் ஒரு மிக சிறந்த சிவனடியாரை தன் குருவாக கொண்டிருந்தார், அவரிலே சிவனை கண்டார், அவரே நடமாடும் சிவன் என்றும் அவரே தன் உயிருக்கு உயிரான குரு எனவும் மனதில் கொண்டு நாளெல்லாம் அவர் நினைவில் திருப்பணிகள் செய்தார்.

ஆம், அந்த குரு திருநாவுக்கரசர். இவரின் சமகாலத்தவர்.

ஏகலைவன் துரோணரை நினைத்தே உயர்ந்தது போல திருநாவுக்கரசை நினைத்தே சிவத்தொண்டில் இருந்தவர். அனுதினமும் அவர் புகழை பாடுவார், அவரைப் பற்றிய விஷயங்களை ஆவலாய் கேட்பார். காரணம் சைவத்தை வளர்க்க பல அற்புதங்களை செய்து சமணரை திருநாவுக்கரசர் வென்று கொண்டிருந்த காலங்கள் அவை.

இவ்வளவுக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை நேரில் கண்டதில்லை.

திருநாவுக்கரசர் எனும் தன் குரு பெயரை எங்கெல்லாம் நிறுத்தமுடியுமோ அங்கு நிறுத்தினார், அவர் வீடு திருநாவுக்கரசு மாளிகை, அவரின் இரு மகன்கள் பெயர் திருநாவுக்கரசர், அவர் கட்டி வைத்த சத்திரங்களும், வெட்டி வைத்த குளங்களும், வழிப்போக்கருக்கு அமைத்த தண்ணீர் பந்தலும் திருநாவுக்கரசர் பெயரையே தாங்கி நின்றன.

எங்கோ பிறக்கும் நதி எங்கோ பாய்வது போல, மலைமேல் பிறக்கும் தென்றல் வழிநடந்து செல்லுதல் போல, எங்கோ நடமாடிய திருநாவுக்கரசரின் புகழ் இந்த அப்பூதி அடிகளை அப்படி கொண்டாட வைத்திருந்தது.

மணமிக்க சாம்பிராணி தெருவெல்லாம் மணம் பரப்புவது போல அப்பூதியாரின் புகழ் சோழநாடெங்கும் பரவி மெல்ல திருநாவுக்கரசரையும் அடைந்தது. அந்த குருவிடம் அவரின் கண் காணா சீடனின் புகழ் சென்று அடைந்தது

அவன் பெயரில் அல்லாது தன் பெயரில் அவன் செய்யும் நலப்பணிகளை கேள்விப்பட்ட திருநாவுக்கரசர் உருகினார். ஒப்பற்ற சிவனடியார் எனும் ஒரே காரணத்துக்காக அப்பூதி அடிகள் தன் பெயரை கொண்டாடுவதை அவர் உள்மனம் உணர்ந்தது.

ஒரு மனிதன் தான் செய்யும் செயலில் எல்லாம் அவனை மறந்து, அவன் பெயரை மறைத்து சிவனடியாரான தன்னை முன்னிறுத்துகின்றான் என்றால் தன்மேலான அன்பும், அதற்கு மேல் சிவன் மேலான பக்தியும் அவரை மனதால் உருக செய்தன.

அப்படி ஒரு சிவத்தொண்டனா? அவனைப் பார்க்க வேண்டுமே என திங்களூருக்கு நடந்தார் திருநாவுக்கரசர்.

திருநாவுக்கரசருக்கு சிவனைத் தவிர எவரையும் தெரியாது. அப்பூதி அடிகளுக்கு திருநாவுக்கரசரைத் தவிர எவரையும் தெரியாது.

இருவருக்கும் இருக்கும் ஒரே இணைப்பு சிவன், இரு சிவனடியாரும் ஒருவரை ஒருவர் சந்திக்கப் போவதை உணர்ந்த சிவன் ஒரு விளையாட்டு ஆட விரும்பினார்.

திங்களூரை அடைந்தார் திருநாவுக்கரசர். எங்கும் அவர் பெயரில் அன்னசத்திரம் , மண்டபம் , குளம், நீர்ப்பந்தல் எல்லாம் அமைந்திருந்தன. நீர்ப்பந்தல் கூட கீற்று வேயப்பட்டக் குடிலில் மணலை குளிராக்கி அதில் புதைக்கப்பட்ட பானைகளில் குளிர்ந்த நீர் இருக்குமாறு அமைக்கப்பட்டிருந்தது, கடும்வெயிலில் வருவோர் தாகசாந்தி செய்யும் பொழுது திருநாவுக்கரசை நினைத்துக் கொள்ள வேண்டுமாம்.

அந்த ஊரில் திரும்பும் இடமெல்லாம் தன் பெயர் இருப்பதையும், தன்மேல் அப்பூதி அடிகளுக்கு இருக்கும் அன்பையும் உணர்ந்து மெல்ல அவர் வீட்டுக்கு சென்றார் திருநாவுக்கரசர். முன்பின் பார்த்ததில்லை என்பதால் அப்பூதி அடிகளுக்கு அவர் திருநாவுக்கரசர் எனத் தெரியவில்லை. வழக்கமாக சிவனடியார்களை வரவேற்று உபசரிக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரையும் ஒரு சிவனடியாராக எண்ணி வரவேற்றார் .

திருநாவுக்கரசர் தான் யாரென சொல்லாமல் , “அன்பரே, நீங்கள் நிறைய தொண்டுகளை செய்கின்றீர்கள், ஆனால் உங்கள் பெயரால் செய்யாமல், ஏன் யாரோ ஒருவர் பெயரில் செய்ய வேண்டும்” என கேட்க, அப்பூதி அடிகளின் முகம் மாறியது. “யாரோ ஒருவர் பெயரில்” எனும் அந்த வார்த்தை அவர் உள்ளத்தைச் சுட்டது.

கொஞ்சம் ஆத்திரமாக “அய்யா, நீர் சிவனடியார்தானே, உமக்கு திருநாவுக்கரசரைப் பற்றி தெரியாமல் இருந்தால் அது நம்பும்படியாக இல்லை. அவர் சமணரை வென்று சைவம் தழைக்க செய்தவர். கடலிலே கல்லைக் கட்டி எறிந்தபொழுதும் கல்லில் தோணிபோல் மிதந்தவர், மதுரை கூன் பாண்டியனின் கொடுநோயினை தீர்த்து அவரை சைவம்பால் திருப்பியவர். சிவனின் முழு அருள்பெற்ற அவரை யாரோ ஒருவர் என்பதா . அவர் எனக்கு தலைவன், குருநாதர், அவரால் சைவம் வாழ்கின்றது.

நாமெல்லாம் சிவனடியார், ஆனால் உம்மாலும் எம்மாலும் செய்ய முடியாத பெரும் விஷயங்களை சிவன் அருளால் அவர் செய்கின்றார் என்றால் அவர் பெயர் நிலைக்க வேண்டுமா. அல்லது என் பெயர் ..உன் பெயர் நிலைக்க வேண்டுமா..

அவர் முன் நான் ஒரு தூசு, அவர் அருகே கூட நிற்கத் தகுதியற்றவன். என்னால் முடிந்தது நான் செய்யும் நற்கிரியைகளில் அவர் பெயரை முன்னிறுத்துவது. அதைச் செய்கின்றேன். அவர் பெயர் வாழவேண்டும். காலமெல்லாம் நிலைக்க வேண்டும். என்னில் இருந்து அவர் செயலாற்றும் பொழுது அவர் பெயரை இடாமல் வேறு எவர் பெயரை இடுவது?

அவரை அறியாத நீர் சிவனடியார் என்பதில் சந்தேகம் வந்து விட்டது, நீர் கிளம்பலாம்” என சொல்லி விட்டார்.

ஆம். தன் குரு மேல் கொண்ட பக்தி அவரை அப்படி சொல்ல வைத்தது. தன் சீடன் தன்மேல் கொண்டிருக்கும் அன்பை அவன் வாயாலேயே கேட்டு மகிழ்ந்து திருநாவுக்கரசர் மெல்ல தன்னை வெளிப்படுத்தினார்.

யாரோ ஒரு அடியாரிடம் பேசுகின்றோம் என நினைத்திருந்த அப்பூதி அடிகளுக்கு அவர்தான் தன் குருநாதர் திருநாவுக்கரசர் என்றவுடன் மனம் துள்ளியது. ஆர்ப்பரித்தது. கண்கள் கலங்கின. ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

தெய்வம் கண்ட பக்தன் போல, கண் பெற்ற குருடன் போல அவ்வளவு ஆனந்தம். சற்று நேரம் பேசாமல் அப்படியே சிலையாய் நின்றார், மெல்ல மூச்சு வாங்கியது, மூச்சு பெரும் அழுகையாய் ஓலமிட்டு உயர்ந்தது.

ஆனந்தத்தில் கதறினார் அப்பூதி அடிகள். அவர் வாழ்வில் அதுதான் மகா மகா உன்னதமான நொடி. யாருடைய‌ புகழ் கேட்டு, சிவ பக்தி கேட்டு குருநாதர் என மனதால் வணங்கினாரோ, அவரே தன் வீட்டுக்குத் தன்னைத் தேடி வந்தால் எப்படி இருக்கும்.

தன் குடும்பத்தாரை அழைத்தார் . ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து அவர் பாதம் கழுவி தன் குடும்பமாய் குடித்தார், தலையில் தெளித்துக் கொண்டார், வீடெல்லாம் தெளித்தும் கொண்டார்.

அவரைக் கொண்டாடினார். தெய்வம் வந்தபின் விழா எடுக்காமல் எப்படி .விழா என்றால் உணவு இல்லாமல் எப்படி.

அப்பூதி அடிகளின் இல்லாள் இல்லாத வகையில்லை என சொல்லும் அளவு சமையலை வகைவகையாக செய்யத் தொடங்கினார்.

அப்பூதி அடிகள் அவரை கண் கொண்டாமல் பார்த்துக் கொண்டே அவரின் பேச்சுக்களை கேட்டுக் கொண்டிருந்தார், திருநாவுக்கரசரும் இவரின் சந்தேகங்களை எல்லாம் போக்கிக் கொண்டிருந்தார்.

அப்பூதி அடிகள் மனதில் எரிந்து கொண்டிருந்த சிவபெருமான் மீதான ஞான நெருப்புக்கு நெய் ஊற்றிக் கொண்டிருந்தார் திருநாவுக்கரசர்.

நாழிகைகள் நகர்ந்தன, அமுது படைக்கும் நேரம் நெருங்கிற்று.

அந்த அப்பூதி அடிகள் அந்தணர், திருநாவுக்கரசரோ வேளாளர். ஆனால் இப்போது அவர்களெல்லாம் ஒரே சாதி, சிவனடியார் சாதி. அந்த அந்தணர் அப்பூதி அடிகளுக்கு வேளாளர் திருநாவுக்கரசர் சாதி தெரியவில்லை. மாறாக சிவமே தெரிந்தார். வணங்கினார், கொண்டாடினார்.

அப்பூதி அடிகளின் மனைவி நைவேத்தியம் தயாரிக்கும் பக்குவத்துடன் அர்ப்பணிப்புடன் சமையல் முடித்தார், அப்பூதி அடிகளின் மகன்களான சின்ன திருநாவுக்கரசும், பெரிய திருநாவுக்கரசும் ஓடி ஓடி வேலை செய்தனர் . உண்ணும் இடத்தை சுத்தம் செய்து விட்டு பெரிய திருநாவுக்கரசு சமையலறைக்குள் நுழைந்தான், விதி கூரிய விஷப்பற்களோடு காத்திருப்பது அறியாமல் தாயார் அவனை வாழை இலை அறுத்துவர அனுப்பினார்.

வாராது வந்த மாமணியான அந்த மகானுக்கு, திருநாவுக்கரசருக்கு மகாராஜாவுக்கும் கிடைக்கா வரவேற்பினை அக்குடும்பம் உளமார‌ கொடுத்துக் கொண்டிருந்தது.

வாழை இலை அறுக்கப் போனான் மூத்த திருநாவுக்கரசு. நல்ல இளம் இலையாய் அவன் அறுக்கும் பொழுது அங்கு மறைந்திருந்த பாம்பு அவனைத் தீண்டிற்று.

அந்நாளில் பாம்பு கடிக்கு சில மருத்துவம் உண்டு, ஆதுரச்சாலை எனப்படும் வைத்தியசாலை உண்டு, ஆனால் உடனடியாக செல்ல வேண்டும். சிவனடியாரான திருநாவுக்கரசருக்கு அமுது படைப்பதே முதல் வேலை என கருதிய அந்த பாலகன், ஆதுர சாலை செல்லாமல் வீட்டுக்கு ஓடிவந்து இலையைக் கொடுத்தான். தன் கடமையினை நிறைவேற்றிய மகிழ்வில் வாயில் நுரைதள்ள சரிந்தான், அப்பூதி அடிகளின் வளர்ப்பு அப்படி.

உள்ளே திருநாவுக்கரசர் உணவுக்கு அமர்ந்திருக்க, அடுப்பறையில் மகன் இறந்துகிடக்க அதிர்ச்சியில் உறைந்த அப்பூதி அடிகளின் மனைவி உள்ளுக்குள் அழுதாள், பொங்கிவரும் அழுகையினை கட்டுப்படுத்தி மெல்லிய இயல்பான குரலில் கணவனை அழைத்தார்.

ஆம், சிவனடியார் மனதை நோகடிக்கக் கூடாது எனும் உறுதி அவளுக்கு இருந்தது.

உள்ளே சென்ற அப்பூதி அடிகள் மகனின் உடலை கண்டு கலங்கினார். பிள்ளை சடலம் கண்டபின் துடித்து கதறாத பெற்றோர் மனம் உண்டா..

அவர் வாழ்வில் மிகப் பெரும் சந்தோஷம் நடந்த சில நாழிகையிலேயே மாபெரும் துயரமும் நடந்தேறிற்று.

உள்ளே மகனின் சடலம், வெளியே உணவுக்காய் காத்திருக்கும் குரு திருநாவுக்கரசர்.

எவர் பெயரால் அப்பூதி அடிகள் ஊரெல்லாம் நீரும், சோறும் போட்டு திருப்பணி செய்தாரோ அந்த திருநாவுக்கரசருக்கு தன் கரங்களால் அப்பூதி அடிகள் அமுது பரிமாற வேண்டிய நேரமிது. தகப்பனாக மகனுக்கு அழுது கருமாதி செய்ய வேண்டிய நேரமும் அதுவே.

மகனை நினைத்து அழுவதா, திருநாவுக்கரசுக்கு செய்யும் சேவையைத் தொடர்வதா.. கதிகலங்கி நின்றார் அப்பூதி அடிகள், மகனை மடியில் போட்டு மனதால் அழுது கொண்டிருந்தாள் அந்த மாதரசி.

நடப்பதை ஓரமாக பார்த்து திகைத்து நின்று கொண்டிருந்தான் சின்ன திருநாவுக்கரசு.

“ஏ அப்பூதியே உன் வழக்கமான கடமையான சிவனடியாரை அதுவும் உன் குருவான சிவனடியாரை உபசரிக்க போகின்றாயா.. இல்லை அவரை புறந்தள்ளிவிட்டு மகனுக்காய் அழப்போகின்றாயா” என மனசாட்சி கேட்டுக் கொண்டிருக்க, இறுகி அமர்ந்திருந்தார் அப்பூதி அடிகள்.

அவர் முகத்தையே பார்த்து மனதால் கதறிகொண்டிருந்தாள் மனைவி, அருகே இளையவன்.

அப்பூதி அடிகள் சிவனடியார் வந்த வேளை சரியில்லை என்று குறை கூறி அடித்து விரட்டிவிட்டு மானிட இயல்பில் கதறித் துடித்து அழுவாரா , அல்லது சிவனடியாருக்கு உணவிடுவாரா எனும் சோதனையின் கடைசி நொடி நெருங்கிற்று

“அப்பூதி..” என குரல் கொடுத்தார் திருநாவுக்கரசர்.

“அய்யா, ஒரு நிமிடம்” என எழுந்தார் அப்பூதி அடிகள். அவர் குரல் கேட்ட கணம் மனம் சிவத்தால் நிறைந்தது, மனம் தெளிவானது, சிவனே நிரந்தரம். சிவனடியார்களை உபசரிப்பதே தன் சுயதர்மம் . அதுவே முதல் கடமை எனும் தெளிவு பெற்றவராய் எழுந்தார்.

மனைவியினை நோக்கினார், “நான் சொல்வதை கேட்பாயா” என்றார். கணவனுக்கு அடங்கிய அந்த பதிவிரதை அதைத் தவிர என்ன செய்வேன் என்றாள்

“மனையாளே, நிச்சயம் இவன் இனி திரும்பப் போவதில்லை, முடிந்தது முடிந்ததுதான். ஆனால் இது தெரிந்தால் நாம் கால்வைத்த நேரம் இப்படி ஆயிற்றே என குருநாதர் மனமுடைவார், தனக்காக இலை அறுக்கச் சென்று இறந்தான் பாலகன் என கதறித் துடிப்பார்.

அது அவரின் மனதை பாதிக்கும், அழவைக்கும். மிகப்பெரும் பொறுப்பை ஏற்று சிவனுக்காக வாழும் அவர் மனதில் ஏற்படும் அத்துன்பம் அவரின் சிவத்தொண்டை பாதிக்கும். நாம் அதற்கு காரணமாய் இருத்தல் கூடாது

விஷயத்தை அவரிடம் மறைப்போம், இப்போதைக்கு எதுவும் காட்டாமல் உணவிட்டு அவரை அனுப்பிவிட்டு அதன்பின் துக்கத்தை ஏற்போம், இது சிவனடியாரை ஆதரிக்கும் வீடு, நாமோ சிவனடியாரை உபசரிப்பதை கடமையாய் கொண்டவர்கள். மகன் என்றல்ல நானே இறந்திருந்தாலும் இதுதான் நடந்தாக வேண்டும்”

மனைவியும் மகனும் அதை மவுனமாக ஏற்றனர். ஓலைப்பாய் ஒன்றில் மூத்தவன் உடலை சுற்றி ஒளித்து வைத்துவிட்டு இலையும் அமுதுமாக திருநாவுக்கரசை நோக்கி ஓடி வந்தனர்.

உணவருந்து முன் உடலை முறையாக சுத்தம் செய்து, திறுநீர் இட்டு அமர்ந்தார் திருநாவுக்கரசர், அவர்களையும் முறையாக வரசெய்து திருநீறு இட்டு அமரப் பணித்தார்.

அந்த இலையினை இட்டாள் அப்பூதி அணிகளின் மனைவி . அதில் அவள் கண்களை மீறி ஒரு துளி கண்ணீர் விழுந்தது.

மாபெரும் ஞானியான திருநாவுக்கரசருக்கு ஏதோ தவறு நேர்ந்திருக்கிறது என்பது விளங்கிற்று. எனினும் வெளிக்காட்டாமல் எல்லோரும் என்னுடன் அமருங்கள் என்றார் . மூவரும் அமர்ந்தனர்.

“எங்கே மூத்த மகன் திருநாவுக்கரசு அவனையும் அழையுங்கள், நாம் சிவன் புகழ் பாடிவிட்டு அமுது உண்ணலாம்” என கோரினார் திருநாவுக்கரசர்.

“அய்யா அவன் இப்போது உதவமாட்டான் நாம் உண்ணலாம்” என சொன்னார் அப்பூதி அடிகள்.

“அவன் வராமல் நான் உண்ணமாட்டேன்..” என அன்னம் தொடாமல் கையெடுத்தார் திருநாவுக்கரசர், அதற்கு மேல் பொறுக்கமுடியாமல் வாய்விட்டு அழுதார் அப்பூதி அடிகளின் மனைவி.

அவள் சொல்லாததை அவள் கண்ணீர் சொல்லிற்று..

ஓடிச் சென்ற திருநாவுக்கரசர் பாயில் சுற்றப்பட்ட பாலகன் உடலைக் கண்டு அதிர்ந்தார், அவனை தன் கையால் சுமந்து சிவாலயம் அடைந்தார் . பதிகம் பாடி மன்றாடத் தொடங்கினார் .

“ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர்வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்டலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது.தானே”

“ஒன்றே நினைப்பார் சிவனடியார், அந்த‌ சிவனையே நினைப்பார் சிவனடியார். பாம்பின் விடம் வெப்பமானது, நிலவின் ஒளியோ குளிர்ச்சியானது. நிலவினை சூடியிருக்கும் பெருமானே !இப்பாலகன் உடலிலிருந்து வெம்மை விடம் நீக்கி உடலைக் குளிர்ச்சியுறச் செய்து உயிர்ப் பிழைக்க வைப்பாய்..” என்று பொருள்படப் பாடினார்.

இப்படி இரண்டு கொலாம், மூன்று கொலாம் எனத் தொடங்கும் பத்து பாடல்களைப் பாடினார் திருநாவுக்கரசர். இது விடம் தீர்த்த படலம் என பெரியபுராணத்தில் வரும். முடிந்தால் வாசியுங்கள்

பாடலை உருக்கமாக திருநாவுக்கரசர் பாடப்பாட விஷம் பாலகன் உடலில் இருந்து இறங்கிக் கொண்டே வந்தது, விஷத்தால் உருவான நீலகருப்பு மறைந்து மெல்ல அவன் இயல்பான‌ நிறம் உடலில் படர்ந்தது.

நம்பமுடியாத அதிசயமாக அதைப் பார்த்து கொண்டிருந்தது மக்கள் கூட்டம், அப்பூதி அடிகளும், அவர் மனைவியும் ,மகனும் வியப்பின் உச்சிக்குச் சென்றனர்.

எத்தனையோ அதிசயங்களை சிவன் பெயரால் செய்த திருநாவுக்கரசர், பத்தாம் பாடல் பாடி முடிக்கவும் மெல்ல கண்திறந்தான் பெரிய திருநாவுக்கரசு.

பத்துமாதம் கழித்து பிறக்கும் பிள்ளை போல், பத்தாம் பாடல் முடிவில் மறுபிறப்பாக உயிர்பெற்று வந்தான் அவன்.

கூட்டம் பேச்சற்று நின்றது, நன்றியாலும் கண்ணீராலும் நிறைந்து மகனை அணைத்து கொண்டு கதறிக்கொண்டிருந்தாள் அப்பூதி அடிகளின் மனைவி.

எதுவுமே நடக்காதவர் போல் நின்று கொண்டிருந்தார் திருநாவுக்கரசர், மிக இயல்பாய் நின்றார். எல்லாம் சிவனருளால் நடந்ததன்றி தன்னால் ஏதுமில்லை என்பது அதில் தெரிந்தது.

மகன் செத்துப் பிழைத்த அந்நிலையிலும் மகனை நோக்காமல் “அடியாரே நீர் இன்னும் சாப்பிடவில்லையே, வீட்டுக்கு வந்து உணவருந்துங்கள், மீதியினை பின்னால் பேசலாம்” என குனிந்து நின்றார் அப்பூதி அடிகளார்.

அந்த நொடியில் திருநாவுக்கரசரே அதிர்ந்தார். அவர் என்ன வானலோகமே அசைந்தது, கயிலாயத்து சிவனுக்கே கண்ணீர் துளிர்த்து.

ஆம், ஒரு சிவனடியார் என்ற ஒரு காரணத்துக்காக, ஒரே ஒரு காரணத்துக்காக இப்படி தன்னை மறந்து, தன்னிலை மறந்து அவர்களை இப்படி சிவன் போல் கவனிக்கின்றார் அப்பூதி அடிகள். , இந்த பக்திக்கு எதை கொடுப்பது..

எதை கொடுத்தாலும் ஈடாகுமா..இந்த அன்புக்கு என்ன கொடுப்பது..

“சிவனே ..சிவனே ..உனக்கு இப்படியும் ஒரு அடியாரா.. உன் அம்சம் இப்படியும் உண்டா ” என மனமுருகி சொல்லிக் கொண்டே அவரை அணைத்துக் கொண்டார் திருநாவுக்கரசர்.

கூட்டம் ஆர்ப்பரிக்க, அப்பூதி அணிகளின் மனைவி உயிர் பெற்ற தன் மகனை நெஞ்சோடு அணைத்து சிவனை நோக்கி நன்றியாய் அழுது கொண்டிருந்தார். தானும் தன் கணவனும் குடும்பமாய் செய்த சிவத்தொண்டு தன் மகன் உயிரை காத்து தன் குடும்பத்தைக் காத்தது என்பதை உணர்ந்தாள்.

நிச்சயம் இது தன் குடும்பத்துக்கு வந்த பேராபத்து. எப்படியும் இந்த ஆபத்து வந்திருக்கும். அந்த அரவம் பாலகனை இன்று இல்லையென்றால் இன்னொரு நாள் கூட தீண்டியிருக்கலாம்

அந்த ஆபத்தை யார் நீக்கமுடியுமோ அவர் இருக்கும் நேரம் அதை அனுமதித்து அதை நீக்கியும் விட்டது இறை.

ஆம் சிவன் அவரைக் கண்காணித்து கொண்டே இருந்தார், சரியான நேரத்தில் மிக சரியான அடியாரை அனுப்பி தன் பக்தனைக் காத்தும் கொண்டார், மிக அற்புதமாக செய்தார்.

பின் சில நாட்கள் அப்பூதி அடிகள் வீட்டில் தங்கியிருந்த திருநாவுகரசர் அவர்களை எல்லாம் ஆசீர்வதித்து விட்டு வேறிடம் சென்றார்.

தன் குருமேலான மிகப் பெரும் பக்திக்குச் சாட்சியாக, சிவன் மேல் கொண்ட அன்பு காரணமாய் உதித்த அன்பில் கிடைத்த குருவினை சிவனாக நினைத்து பின் தொடர்ந்து பெரும் சிரமத்தையும் தியாகத்தையும் செய்ததால் அப்பூதி அடிகள் நாயன்மார்களில் ஒருவரானார்.

ஆம் . சிவன் மேலான அன்பே அவரை சிவனடியார்களை கொண்டாடச் செய்தது, அப்படி மிகப்பெரும் அடியாரான திருநாவுக்கரசரை ஞானகுருவாக கொண்டு அவர் கொஞ்சமும் வழிதவறாமல் நடந்ததே, மிகப் பெரும் துயரத்திலும் தன் இறைத்தொண்டில் வழுவாமல் நின்றதே அவரை நாயன்மார்களில் ஒருவராக்கியது.

அப்பூதி அடிகளிடம் அகங்காரமில்லை, பேராசை இல்லை, நான், என் குடும்பம் எனும் சுயநலமில்லை. மாறாக சிவனை யாரெல்லாம் தேடுவார்களோ , அவருக்காக வாழ்வார்களோ, அப்படிப்பட்டவர்களுக்காக நான் வாழ்வேன் என நின்றார்.

சிவனை, சிவனடியார்கள் போற்றினால் நான் அவர்களை போற்றுவேன், அடியார்க்கும் அடியார் நான் என தாழ்ச்சியாய் அவர் எடுத்த முடிவே அவரை அந்த மிகப்பெரும் இடத்துக்குக் கொண்டு சேர்த்தது.

சிவன் மேல் கொண்ட அன்பும், அந்த அன்பினை சிவனடியார்மேல் பணிவாய் காட்டியதுமே அவரின் பெரும் உயர்வுக்கு காரணம்.

இந்த அப்பூதி அடிகளார் காலத்தில் அந்த திங்களூரில் ஏகப்பட்ட செல்வந்தர்கள் இருந்தனர், மிராசுதரும், இன்னும் பணமும் படையும் செல்வாக்கும் மிக்கோரும் இருந்தனர். ஆனால் இன்றுவரை மட்டுமல்லாது என்றும் அப்பூதி அடிகள் மட்டும் நிலைபெற்றது எப்படி?

ஆம் . அவர் அழியக் கூடிய‌ பணமோ, நிலமோ, பொருளோ, பெண்ணோ தேடவில்லை . மாறாக நிரந்தரமான சிவனை தேடினார். அழியாப் புகழ் பெற்றார்

சிவனை நினைந்து சுமந்து திரியும் அடியவருக்கு செய்வதெல்லாம் சிவனுக்கு செய்வதே, அந்த அடியார்களுக்கு தாழ்ச்சியாய் ஒரு கிண்ணம் நீர் கொடுத்தாலும் அது சிவனுக்கே .

அதைக் கணக்கில் வைத்து கண்காணிக்கும் சிவபெருமான் உரிய காலம் வரும்பொழுது நமக்கு பல மடங்காக திருப்பித் தருவான்.

எப்படி நோக்கினாலும் அப்பூதி அடிகளார் வாழ்வு சொல்வது இதுதான் .

சாமான்ய பக்தனுக்கும் ஒரு நல்ல குரு கண்டிப்பாய் வேண்டும், அந்த குருவினை அவன் அணுபிசகாமல் பின்பற்றவும் வேண்டும்.

குரு கிடைக்கவில்லை என்றாலும் மனதால் ஒரு அடியாரை குருவாகக் கொண்டால் இறையருளால் அக்குரு நம்மைத் தேடிவருவார், நம்மை பரமனிடம் சேர்ப்பார்.

காரணம் இயங்குவதும் இயக்குவதும் சிவனே. தேடினால் கண்டடையலாம் அவன் சந்நிதியில் தட்டினால் அக்கதவு திறக்கப்படும், இது முக்கால உண்மை.

தைமாதம் ஒரு சதய நட்சத்திரம் நாளில் அவர் முக்தி அடைந்தார், அன்றிலிருந்து தை மாத சதய நாளில் அவருக்கு குருபூஜை நடத்தப்படுகின்றது, அன்று திங்களூர் கைலாசநாதர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அவர் நினைவு கூறப்படுவார்.

திங்களூர் கைலாசநாதர் ஆலயம் எக்காலமும் அப்பூதியடிகள் நாயனார் புகழைச் சொல்லி அங்கு நிலைப்பெற்றிருக்கும், ஒப்பற்ற சிவபக்தன் வழிபட்டதால் அந்த ஆலயம் அழியாப் புகழுடையதாய் நிற்கின்றது.

முடிந்தால் அங்கு சென்று வழிபட்டு வாருங்கள், சிவனடியார்களுக்கு உதவிய புண்ணிய பலன் உங்களுக்கும் கிடைக்கும், உங்களுக்கும் நல்ல குருநாதர் அமைவார், அவர் உங்களை சிவனில் வழிநடத்துவார்.

Image may contain: 5 people, people standing

பின்னூட்டமொன்றை இடுக