தமிழக கல்வி முறை : 1

எப்பொழுதுமே தமிழக மாணவனுக்கு 10ம் வகுப்பு வரை ஒரு குழப்பமும் இல்லை, அதனை தாண்டிய பின்னர்தான் உலகம் அவனை குழப்போ குழப்பு என்று குழம்பும், பிஞ்சாகவும் இல்லாமல் முழு பழமாகவும் இல்லாமல் , உலகினை புரிந்தும் புரியாமல், மலர்ந்தும் மலராதா ஒரு பருவம் அது.

அப்பொழுதுதான் பலபேரும் வந்து ஆலோசனை சொல்கிறோம், வழிகாட்டுகிறோம் என மாணவனின் தோள்மீது ஏறி கண்ணை பொத்துவார்கள், காதினை திருகுவார்கள், இன்னும் பல அழிச்சாட்டியம் நடக்கும், அவனை சுயமாக யோசிக்க விடவே மாட்டார்கள், உதாரணம் காட்டியே பயமுறுத்துவார்கள்.

இக்காலத்தில் 10ம் பொதுதேர்வில் 495 எல்லாம் அனாசியமாக அள்ளுகின்றார்கள், அக்காலத்தில் 440 கூட இமாலய சாதனை. அதுவும் திக்கி திணறி 400ஐ நெருங்கிவிடால் அவனது காதில் பல குரல்கள் கேட்கும்
“11ம் வகுப்பில் முதல் வகுப்பு எடுக்காவிட்டால் உன்னை மதிக்க மாட்டார்கள்”, என்ன மதிப்பு என்று மட்டும் யாரும் சொல்லவே மட்டார்கள், யார் மதிக்கமாட்டார்? இந்திய பிரதமரா அல்லது உள்ளூர் கவுன்சிலரா என்றேல்லாம் சொல்லமாட்டார்கள், மதிப்பில்லை அவ்வளவுதான்.

இதை போல நிறைய அனுமானங்கள், இந்தியாவில் ஒரு மாணவன் படிப்பதே பெற்றோருக்கும் மற்றவருக்கும் தான், அவனுக்காக அல்லவே அல்ல, வேறு வழியின்றி மாணவனும் முதல் வகுப்பு பற்றி விசாரிப்பான்.

1980களில் வள்ளியூர் பகுதி பள்ளிகளில் கள்ளிகுளம் பள்ளியும் குறிப்பிடத்தக்க ஒன்று, வள்ளியூர் முதல் பலபகுதி மாணவர்களும் அங்கு படிப்பார்கள், ஒரு மாணவன் அப்படி அப்பாவியாய் அப்பள்ளியின் முதல்வகுப்பினை பற்றி விசாரித்தால், அவனுக்கு வியர்த்து வழியும், வியர்வை தவிர வேறு வகையிலும் உடல் நனையும். அப்படித்தான் அந்த ஆசிரியரை சொல்லி பயமுறுத்துவார்கள், அம்புலிமாமா கதையில் வரும் பிரம்மராட்சரை போல மனம் கற்பனை எல்லாம் செய்யும், அப்பெயருக்கு சொந்தகாரர் கணித ஆசிரியர் திரு.அந்தோணி செல்வன்.

படிக்கும் பொழுது அவரது பெயரை கேட்டாலே அலறும், இப்போது படித்து முடித்து இப்பொழுது பணியிலிருப்போரிடம் பெயரை சொல்லுங்கள், கேட்ட உடனே புன்ன்கை பூக்க சிரிப்பார்கள்.

அவரது சுவராஸ்யம் அப்படி, அதிரடிகள் அப்படி, மிக இயல்பாக சொல்லி செல்லும் வார்த்தைகள் அப்படி.
ஒருவழியாக வகுப்பும் தொடங்கிற்று, பாடம் நடத்துவார், கணிதமல்லவா புரியும் ஆனால் புரியாது, அவரோ மிக சுருக்கமாக ஆனால் கருத்தாக விளக்குவார், அவ்வளவுதான் பாடம் இனி நீங்கள் மீதியினை செய்யுங்கள் என சொல்லிவிட்டு அமர்ந்து கொள்வார்.

சோறினை பிசைந்து ஊட்டிவிட்டு, அம்மாவே வாயையும் துடைத்து விட்டு பழக்கபட்டவன் தமிழக‌ மாணவன், ஆசிரியரே சகலமும் கற்பித்து முடிக்கவேண்டும், நாம் கொஞ்சம் புரிந்தோ அல்லது + குறிவரை மனப்பாடம் செய்தோ தேர்வில் தேறவேண்டும் என்பதே அவனுக்கு தெரிந்த “படிப்பு”, அவரோ நீ சுயமாக முடித்துகாட்டு என்கிறார், எப்படி நடக்கும்?

பின்னர் அதுதான் நடக்கும், அங்கும் ஆரம்பித்தது “இதால ஆன்சர் சாவு கிராக்கி, ஒழுங்கா போடுல, கேட்டா 10ம் கிளாஸ் கணக்குல 95 மார்க்..” என்று முதல் அதிர்ச்சி கொடுத்தார். “சாவு கிராக்கி” எனும் வார்த்தை அப்ப‌பகுதி வார்த்தை அல்ல, டிக்சினரியில் தேடும் முன் சென்னைதமிழ படங்களை பார்க்கமுடிந்ததால் அர்த்தம் விளங்கிற்று.

அடுத்த அடுத்த வகுப்புகளில் இன்னமும் முன்னேற்றம், கணக்கினை முடிக்க சொல்லி ஒவ்வொருவராக பார்த்துகொண்டே வருவார், ஒரு மாணவன் ஏதோ ஒரு கணித குறியினை மறந்திருப்பான், அவர் கவனித்து மெதுவாக கேட்பார் “படித்து என்ன ஆக போறா..”, மாணவன் மகிழ்ந்து சொல்லுவான் “டாக்டர் சார்”, அப்பொழுதுதான் கருத்தை பிடிப்பார் “அது இருக்கட்டும்ல இதுல ஒரு ஸ்குவர் வரணும எங்க?”, மாணவன் “மறந்துட்டேன் சார்” என்பான்

அப்பொழுதுதான் உரக்க சொல்லுவார் “இப்படித்தாம்ல நாளைக்கு ஆப்பரஷன் பண்ணிட்டு கத்திரிகோல உள்ளவச்சி தச்சிட்டு மறந்துட்டும்பா..உனக்கெல்லாம் டாக்டர் ஆச..” சொல்லிவிட்டு முதுகில் டிரம்ஸ் சிவமணி வேலையை தொடங்குவார்.

இன்னொரு மாணவன் கணக்கிற்கும், விடைக்கும் சம்பந்தமில்லாமல் ஏதோ செய்திருப்பான், அவனிடம் கேட்பார் உனக்கென்ன ஆசை அவன் இன்சீனியர் என்பான், திடீரென அவனை குனியவைத்து கும்முவார், கும்மிகொண்டே சொல்லுவார் “உன்ன இன்சினீயர் ஆக்குறதுக்கு பதிலா ஒரு குரங்க ஆக்கலாம், 2ம் ஒரே வேலைதான் செய்யும்”, பாம்பின் வாய் தவளையாக அவனும் கத்துவான், “சார் மறுபடி செய்றேன்” சார், அவர் விடமாட்டார்

“ஓ.. ஒரு பாலம் கட்ட சொன்னா இடிச்சி இடிச்சி 10 பாலம் கட்டுவியோல உன்ன விடகூடாதுல…”

அன்றிலிருந்து எல்லா மாணவனும் டாக்டர்,பொறியியல் கனவுகளை மனதோடு மட்டும் வைத்துகொண்டனர்.
ஒரு நாள் மேட்ரிக்ஸ் நடத்திகொண்டிருந்தார், வழக்கமான சோதனை, ஒரு மாணவனிடம் விடை கேட்டார் அவன் சீரோ என்றான், “உன் மார்க்க கேக்கல, ஆன்சர் சொல்லு என்றார், அவன் மறுபடியும் சீரோ என்றான், அவனது நோட்டையே பார்த்துகொண்டு அமைதியாக சொன்னார் “நீ கவனிக்கப்டவேண்டியவன் கணித உலகிற்கே இது புதுசு”,

அவனோ ராமனுஜத்தை கற்பனையில் நெருங்கிகொண்டிருந்தான், சத்தமாக சொன்னார்,”இதுண்ணு இல்ல உன்கிட்ட எந்த கணக்கை கொடுத்தாலும் நீ சீரோ தான் ஆன்சரா கொண்டு வருவா..” சொல்லிகொண்டிருக்கும் பொழுதே நோட்டிற்கு சிறகு முளைத்து பறந்தது, காதில் மத்தள இசை கேட்டது.

மாணவர்களுக்கு கவலை அதிகம், அதில் முதலிடத்தினை கணித வகுப்பு பிடித்துகொண்டது, ஆனால் அவர் திட்டும் விதத்தினை ரசிக்கலாம்.அடி மட்டும் தான் வில்லங்கம்.
அவரை புரிந்துகொள்ளவில்லை அதுதான் பிரச்சினை.

அவரின் ஆசிரிய மனநிலை இதுதான், இவர்கள் எல்லாம் நன்கு படிப்பவர்கள், வடிகட்டி எடுக்கபட்ட மாணவர்கள், கணிதம் சிக்கல்தான் ஆனால் இவர்களால் முடியும், நாளை மருத்துவம்,பொறியியல் என எவ்வளவு சிக்கலான படிப்புக்களை தாங்களாக படிக்கவேண்டும், ஒரு கட்டத்திற்கு மேல் மாணவன் தானாக படிக்கவேண்டும், ஆசிரியர் வழிகாட்டுவார் அல்லது தெளிவு கொடுப்பார். அப்படியும் தெளியமாட்டேன், முழுகணக்கையும் ஆசிரியர்தான் செய்யவேண்டும் என்றால் எப்படி? சொல்லியாகிவிட்டது கேட்கவில்லை, திட்டினாலும் சிரிக்கிறான், வேறு என்ன செய்வது டிரம்ஸ் இசைதான்.

ஆனால் அட்டகாசமாய் வகுப்பினை கொண்டு செல்வார், மடப்புரம் கார்த்தீசன் முதல் பெரும் அறிவாளிகள் வரை அறிமுகபடுத்துவார், தனிபட்ட முறையில் ஆலோசனைகளை வழங்குவார், ஒரு கணக்கினை நடத்திவிட்டு அதற்கும் கணிப்பொறி மொழிக்கும் இருக்கும் தொடர்பினை சொல்லுவார், ஆர்வகோளாறிலோ அல்லது பயந்தோ உயிரியல் மாணவன் “ஆமாம் சார் அப்படித்தான் என்றால் அதிரடியாக சொல்லுவார் ” நா சொல்றது கம்பியூட்டர் சயின்ஸ்க்கு.. நீ தவளை ஓணான வெட்டிக்கிட்டு கிடப்பா..போல”

சரியாக மணி ஒலித்ததும் வகுப்பிற்குள் வருவார், மணி மறுபடி ஒலிக்கும் பொழுது அப்படியே நிறுத்துவார். மறுநாள் வந்து அட்டகாசமாக விட்ட இடத்திலிருந்து தொடங்குவார், நாளொரு கணக்கும் பொழுதொரு வார்த்தையும் நொடிக்கொரு முதுகு சாத்தலுமாய் வகுப்பு சென்றது.

அவர்தான் தேசிய மாணவர் படையின் இயக்குநரும் கூட, ஒரு முறை ஒரு மாணவனுடன் அமைதியாக 4 நிமிடம் பேசிக்கொண்டிருந்தார், அவர் சென்றபின்னால் அவன் மிகுந்த அதிர்ச்சியாய் இருந்தான், ஒன்றுமில்லை அவன் சில பயிற்சிகளுக்காக அகமதாபாத் செல்லவேண்டும், அவனுக்கு வழியும் குறிப்புகளும் கொடுத்திருக்கிறார் 3 நிமிடத்தில், வள்ளியூர் ஆஸ்பத்திரிக்கு வழிசொல்வது போல, கடைசியாக சொன்னாராம் “தைரியமாய் போல”.

அவனும் சென்றான், அதற்கு முன்பு அவன் நெல்லையை தாண்டியதில்லை, இன்று போல செல்போன்களும் இல்லை, கொஞ்சம் தைரியம் , துல்லியமான குறிப்புகள் அவ்வளவு போதும் பயணத்திற்கு அவர் அதைதான் கொடுத்தார், அவன் இன்று இந்திய ராணுவத்தில் மேஜர்.

பள்ளிக்கு வெளியே எந்த மாணவனையும் கண்டுகொள்ள மாட்டார், வகுப்பில் அடிக்கும் பொழுது கூட அவன் கிரிக்கெட் ஆடியதை கண்டிக்கமாட்டார், கணித முயற்சி செய்யவில்லை அதற்குதான் அடி, காலை பள்ளிக்கு நமக்கு எதிரில்தான் வருவார், ஒன்றாக நுழைவார், நுழைந்ததும் முன்னால் வந்து நின்று கேட்பார் “ஏம்ல லேட்.உங்க ஊர் என்னல‌ 7 கடலுக்கு அங்கயாயல இருக்கு..ஆளும் மண்டையும்…”

தனிபட்ட முறையில் மாணவர்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகள் அதிகம், கணித ஆசிரியர்தான் ஆனால் பங்குவர்த்தகம் மற்றும் வருமானவரி பற்றி துல்லியமாக பேசுவார், அவரிடம் பங்குவர்த்தக கதைகளை கேட்ட மாணவர் இன்று திறமையான பங்குசந்தை வித்தகர், இவ்வளவிற்கும் அவர் கணிதபாடத்தில் பெயில். ஒருமுறை சொன்னார்

“என்னல டாக்டர், இன்சீனியரு, அவனவன் ஓணான் கூட இல்லாத காட்டுக்குள்ள இஞ்சினியரிங்காலேஜ் கட்டிட்டு இருக்கான், இன்னும் கொஞ்சகாலத்துல ஆடுமேய்க்கவும் கூட இஞ்சினியர் வருவான்..வருமான வரி ஆபீசர் ஆனா அள்ளலாம்ல, அங்க குமாஸ்தாவா இருந்தாலும் போதும் டாக்டரவிட அதிகமா வரும்ல அதான் இப்போ இந்தியா”

இன்று அதெல்லாம் உண்மையாகிவிட்ட காலங்கள்.

ஒருவழியாக 12ம் வகுப்பும் வந்தது, மாணவர்கள் கணிப்பொறி வேகத்தில் படித்து, ரோலர் கோஸ்டர் வேகத்தில் தேர்வெழுதவேண்டும், மாணவனுக்கு சினிமா,கிரிக்கெட்,திருவிழா,கல்யாணம்,ஊர்சுற்றல் என எல்லாம் தடை, பார்ப்பவர்கள் கூட கவனமா படிப்பா என்று சொல்லியே பயம்காட்டுவார்கள், ஆப்பரேஷனுக்கு காத்திருக்கும் நோயாளி போலவே சமூகம் அவர்களை பரிதாபமாக பார்க்கும்.

ஆனால் அந்த ஆசிரியரோ ராணுவ அதிகாரி போல +2 யுத்தத்திற்கு தயார் படுத்த ஆரம்பித்தார், முதல்நாளிலே கட்டளை பிறந்தது “எலேய் நீ டாக்டராவு, இஞ்சீனியராவு இல்ல ஏதும் ஆவு அது பிரச்சினை இல்ல..என்ன பொருத்தவரைக்கும் நீ பாஸ் ஆகி போ..அவ்வளவு போதும் 4 மாசம்தான் பாடம், அப்புறம் நீ பாடம் நடத்தணும் அதான் ரிவிசன்”

அவ்வளவுதான் மாணவர்கள் மாற்றுவழி தேடினர், எல்லா டியூசன் வீடுகளும் நிரம்பி வழிந்தன‌, சில தைரியமான மாணவர்கள் திரு.செல்வன் அவர்களிடமே டியூசன் சேர்ந்தனர், அங்கும் அவர் அதே இயல்புடனே தான் இருந்தார்,

அதுதான் “முயற்சி செய், உன்னால் முடியும், ஆசிரியன் ஒரு வழிகாட்டி, தவறானால் திருத்துவான் அவ்வளவுதான், நீ ஒருவனே உன் அறிவினை வளர்த்துகொள்ள முடியும், காப்பாற்றிகொள்ளவும் முடியும்”

அவரது ஆசிரிய பணியின் தத்துவம் இதுதான் ஆனால் இயற்பியல், வேதியல்,உயிரியல்,கணிதம் ஒவ்வொன்றிற்கும் இரு புத்தகம் வேறு இதற்கிடையில் ஆங்கில இலக்கணமும், தமிழ் செய்யுள்களும் வேறு தாங்குமா?

மாணவர்கள் தங்கள் பெயரைகூட மறந்து படித்துகொண்டிருந்த பொழுது, ஒரு நாள் அவர் சொன்ன கணிதத்தினை மறந்தும் விட்டார்கள், அன்றுதான் அவர் தனது யுத்த திட்டத்தில் ஒரு பெரிய முடிவுக்கு வந்தார்

வருவார்..

பின்னூட்டமொன்றை இடுக